விலங்கு வாழ்வும் மனித வாழ்வும் தாவரங்களிலேயே தங்கியுள்ளன
பசுமையைப்
புனைந்து,
மீது இடத்தில் நீலக்கடலைப் போர்த்திருக்கும் பூமியானது உயிர்வாழ்தல்
உள்ள ஒரேயொரு கோளாக இன்றுவரை அறியப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்
முதல் விண்ணளந்து நிற்கின்ற பெருவிருட்சங்கள் வரை எண்ணற்ற அங்கிகளைக்
கொண்டிருக்கின்றது பூமியின் உயிரின மண்டலம். உயிரின மண்டலத்தின் எல்லைகளாக மேலே
ஆகாயமும் கீழே ஆழ் கடலும் அகன்று பரந்திருக்கின்றன.
உயிர்
வாழும் அங்கிகள் சில இயல்புகளைக் கொண்டு தாவரம், விலங்கு
எனத் தனித்தனி வகைப்படுத்தப்படுகின்றன. தாமே சுயமாக உணவு தயாரிக்கின்ற தாவரங்கள்
காலச் சுழற்சியில் கூர்ப்புற்றுக் கோலம் மாறின. விலங்கில் நிகழ்ந்த கூர்ப்பு
இறுதியில் ஆற்றலுடைய மனிதனை அளித்தது. இக்கூர்ப்புகள் சமாந்தரமாக ஒன்றுடனொன்று
தொடர்பற்று நிகழ்ந்தன. ஆயினும் தாவர வாழ்வும் விலங்கு வாழ்வும் பேதமற்று
ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்துள்ளன.
இது
உயிர்கள் தோற்றுவிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து இன்றுவரை ஏன் இனியும்கூடத்
தொடர்கின்ற பிணைப்பாகும். தோன்றிய உயிர்களின் தேவையை நிறைக்கும்
உணவுக்களஞ்சியங்களாக தாவரங்களே விளங்கின. விண் சென்று வரலாறு படைக்கின்ற மனிதனோ
அன்றி வேறு விலங்கினமோ செய்ய முடியாத அற்புதச் செயலாக இவ்வொளித் தொகுப்பு
அமைகின்றது ஆம்! ஒளி செய்வதைத் தொழிலாகக் கொண்ட கதிரவனின் கிரணங்களைக் கொண்டு உணவு
தயாரிக்கின்ற ஆற்றல் பச்சைத் தாவரங்களுக்கு மட்டுமே உரியது.
கரியமில
வாயுவையும் நீரையும் இணைத்து இலைகளில் உணவாகத் தேக்குகின்ற தன்மையால் தாவரங்களே
உலகின்...
ஆரம்ப
உணவுற்பத்தியாளர்களாக விளங்குகின்றன. எந்த ஒரு விலங்கும் தாவரத்திடமிருந்து உணவைப்
பெறுகின்றது. உணவு வழங்கலானது நேரடியாக நிகழலாம். அன்றி மறைமுகமாகத் தாவரவுண்ணியை
ஓர் அங்கி உண்பதன் மூலம் நடைபெறலாம்.
இந்த
உணவாக்கத்தின் போது உயிர்காக்கும் இன்னொரு உன்னதப் பணியும் கூடவே நிகழ்கின்றது.
இதன்போது சுவாசிக்கும் அங்கிகள் யாவும் வேண்டி நிற்கும் பிராணவாயுவான ஒட்சிசனை
தாவரங்கள் வழங்குகின்றன. இந்த ஒட்சிசனானது குறித்த நிபந்தனைகளில் ஓசோன் எனும் வாயு
மண்டலக் கவசத்தைத் தோற்றுவிக்கின்றது.
அண்டவெளியின்
அனல் மிகுந்த கதிர்களை அணுகவிடாமல் பூமியைக் காப்பது ஓசோன் கவசமேயாகும்.
இக்காற்றுக்கவசம் இல்லையெனின் பூமி கணப்பொழுதில் உருக்குலைவது நிச்சயம். ஆகவே
மறைமுகமாகக் கூறுவதானால் மரங்களே பூமியினைக் காக்கும் கரங்களாய் கடமையாற்றுகின்றன
எனலாம்.
மேலும்,
சூழலின் வெப்பநிலையை வெகு சீராகப் பேணுகின்ற ஆற்றலும்
தாவரங்களிடத்தில் உண்டு. வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பதில் அதிக பங்கு வகிக்கின்ற
கரியமில வாயுவைத் தாவரங்கள் தம்மகத்தே உறிஞ்சுகின்றன. இதன் மூலம் துருவப்
பனிக்கட்டிகள் உருகி நிலங்களை நீர் மூடும் அபாயமும் தடுக்கப்படுகின்றது.
விலங்குகளின் வாழ்விடங்கள் காக்கப்படுகின்றன.
இன்னும்
மிதந்து செல்லும் மேகங்களை வழிமறித்து மழை பொழிவிக்கும் தன்மையும் உயர்
மரங்களுக்கு உண்டு. இதனால் விலங்குகளின் உயிர்வாழ்தலுக்குத் தேவையான நீர்
வழங்கலிலும் இவற்றுக்கு அரும்பங்குண்டு. இது மட்டுமா?
கானகத்தில் உயிர்வாழும் கணக்கற்ற அங்கிகளின் இல்லமாகத் திகழ்பவையும்
தாவரங்களே. இயற்கை உருவமைத்த இவ்வில்லங்கள் பாதுகாப்பானவையாகவும்
பயன்மிக்கனவாகவும் விலங்குகளுக்கு உதவுகின்றன.
மேம்பட்ட
மனிதகுலத்தின் வளர்ச்சியிலும் தாவரங்கள் ஆற்றுகின்ற அரும்பணிகள் மிகப் பல. மனித
சாதனை...
களுக்குத்
தாவரங்கள் வழங்கிய ஆதாரங்கள் அநேகம்! இலையும் குழையும் இழைத்துப் புனைந்த இயற்கை
உடைதான் மனித நாகரிகத்தின் மலர்ச்சியின் முதற்படி என்றால் மிகையல்ல.
நாடோடி
மனிதனின் நிலையான ஓரிட வாழ்வுக்கு அத்திவாரமிட்டவைகூட ஆற்றங்கரையோரப்
பயிர்ச்செய்கைகள்தான்! சமூக வாழ்வுடன் மனிதன் சங்கமித்தபோது தாவரங்களும் அவன்
வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டன.
உருளும்
மரக்குற்றி, சில்லைப் பற்றிய உணர்வைக் கொடுத்தது.
சில்லும் தடியும் இணைந்து சிறு எந்திரம் ஆனது. சிதைந்த பசுமரப் பகுதிகள்
எரிபொருளாய் நிலத்தினின்று மீளப் பிறந்தன. எல்லாம் இணைந்த கணத்தில் வல்லமை
பொருந்திய எந்திரங்கள் உருவாகின. கைத்திறம் வளர கைத்தொழில் சிறந்தது; அறிவியல் வளர்ந்தது.
மனிதன்
மேன்மேலும் தாவரங்களைத் தன் வாழ்வின் உயர்வுக்காகப் பயன்படுத்துகின்றான்.
மாடமாளிகைகள், நீண்ட பாலங்கள், பாதைகள்
செய்யப் பசுமரங்கள் பயன்படுகின்றன. உடைகள் நெய்ய உறுதுணை புரிகின்றன. உயிரைக்
காக்கும் மருந்துகள் செய்யவும் அருந்துணையாகின்றன. காகிதத் தாள்களில், நறுமணம் வீசும் வாசனைத் தைலங்களில் என எங்கும் எதிலும் தாவரங்கள்
பங்குபெற்றிருக்கின்றன.
உணவாய்,
உயிர்மூச்சாய், உடையணியாய், வாழிடமாய், நோய் வெல்லும் அருமருந்தாய், எரிபொருளாய், எல்லாமாய் நின்று எண்ணற்ற பயன்தரும்
தாவரங்களின் வேர் முதல் அரும்பு வரை மனித வாழ்வும் விலங்கு வாழ்வும் வேறுபாடற்று
ஊடுருவி நிற்கின்றன.
இவ்வாறு
மனித,
விலங்குகளின் உயிர்வாழ்வுக்கு அடிநாதமாய் விளங்குகின்ற தாவரங்களின்
முக்கியத்துவத்தை இன்றைய மனிதன் நன்கு உணர்த்துள்ளான். இதனாலேயே தாவரங்களை
உருவாக்குகின்ற பேணுகின்ற திட்டங்கள் உயிர்ப்புடன் செயற்படுத்தப்படுகின்றன. ஆம்
மனிதன் தாவரங்களை வளர்த்து தன்னை உயர்த்தத் தொடங்கிவிட்டான்.
அறுவடைக் காட்சி
பசும்
பரப்பாய்ப் பரந்து கிடக்கின்றது வயல்வெளி! கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை
வண்ணத்தின் செழுமை விரிந்து கிடக்கிறது. கதிர் சுமந்த நெல்லினங்கள் காற்றோடு
சேர்ந்தாடுகின்றன. காலைக் கதிரொளி விரியத் தொடங்குகின்ற ஒரு கவின் பொழுதில்
அறுவடைக் காட்சியின் அழகு காண நீங்களும் வயல்வெளிக்கு வாருங்களேன்!
விரிந்த
வயற்பரப்பு வரப்புகளால் எல்லையிடப்பட்டிருந்தது. கதிர்கொண்ட நெல்லினங்கள் நிலம்
நோக்கித் தாழ்ந்திருந்தன. தாய்மை எனும் தெய்வீகப் பேரழகு அவற்றில் பொலிந்தது.
நற்குடிப் பிறந்த நங்கை நாணி நகும் நளினம் அவற்றில் வெளிப்பட்டது.
காலையிளந்தென்றல் தழுவ நெல்லினங்கள் ‘கலகல’ எனச் சத்தமிடுகின்றன. அன்றிப் பதர்கள்
பண்பற்ற நடத்தையுள்ள பாவையர்போல தம் முகம் காட்டிச் சிரிக்கின்றன. அறிவின் தெளிவு
அதிகமாக,
அமைதியும் அடக்கமும் பொலியும் தன்மை அந்த இயற்கைக் கோலத்தில்
இயல்பாய் எழுதப்படுகிறது.
வரம்புகளின்
பிரிவுகளுக்கேற்ப வயது வேறுபாடற்று நெல்லினங்கள் காணப்படுகின்றன. சில
கடும்பச்சைக்கவினோடும், சில வெளிர்ப்பச்சை
நிறத்தோடும் மற்றும் சில பொன்மஞ்சள் வர்ணத்திலும் துலங்குகின்றன. சீதளப்
பூங்காற்றுடன் சேர்ந்தாடியபடி, கன்னிப்பருவத்து நெல்லினங்கள்
ஒலி செய்கின்றன. அவ்வொசை மிருதுவான இசையாக மனத்தினை வருடுகின்றது. பசும்பரப்பில்
செங்கதிரவனின் பொன் மஞ்சள் வண்ணச் சிற்றொளி பட்டுக் கலக்க புதிய வர்ணத்தில்
செந்நெல் வயல் பொலிகின்றது.
வயல்வரப்புகளின்
வழியே உழைப்பாளிகள் நடக்கின்றார்கள். ஆண்கள் உறுதிகொண்ட திண்ணிய உடம்புடன்
கம்பீரமாகச் செல்கின்றார்கள். அரிவாள் சகிதம் சேர்ந்து நடக்கும் அரிவையரைக்
காணுங்கள். அவர்கள் நதிபோல...
நளினநடை
பயில்பவர்களில்லை உழைத்து உரமேறிய உடலினர். சேற்று வயல் நீரில் சிறுமீன்கள்
சந்தோஷமாகத் துள்ளி விளையாடுகின்றன. கொக்குக் கூட்டங்கள் இடையிடையே மண்மீது
விரிந்த வெண்பூக்களாய்க் கண்கொள்ளா அழகுடன் காணப்படுகின்றன செங்கால் நாரைகள் மீன்
இரை தேடி நிரையாய்ப் பறந்து வந்து வயற்கரையில் அமர்கின்றன.
வரப்புகள்
மனிதர்களுக்கு மட்டும் தானே! வண்ணச் சிறு பட்சிகளுக்கு எல்லைகள் தாம் ஏது?
அவை வயல்வெளி முழுதும் திரிந்து செந்நெல் மணிகளைத் தம் செவ்வாயால்
பொறுக்குகின்றன. கனமில்லாத சந்தோஷ மனத்துடன் இனத்தவருடன் சேர்ந்து இனிய குரலில்
மிழற்றுகின்றன. இயற்கையின் சங்கீதம் தான் எத்துணை இனிமையானது.
உழைப்பாளர்
தம் அறுவடைப் பகுதிக்கு வந்ததும் ‘அணி அணி’ யாக நின்றனர். அவர்களுள் வயதால்
முதிர்ந்த பெரியார் ஒருவர் “வயலோர விநாயகரை” வேண்டித் தேங்காய் உடைத்து அறுவடைத்
தொழிலை ஆரம்பித்து வைக்கிறார். சூரியச் சுடர் வானவெளியிலே மேலேறிக்
கொண்டிருக்கிறது.
உழைப்பாளர்
கையிலே அரிவாள் சுழலும் அழகே தனி. அவர்கள் வெற்றிலைச் சப்பியபடி,
வெகு இலாவகமாய்ச் செங்கதிர்களை அறுத்துக் குவித்துக்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் உழைப்பின் ஒளியும் பெருமிதமும்
விகசிக்கின்றன உழைப்பின் அலுப்புக் களைப்பைத் தருகிறது. ஆனால் அவர்கள் இழைத்து
மூச்சுவிட்டு ஓய்தல் செய்யவில்லை. இனிமையான பாடல்களைப் பாடி உற்சாகம்
கொள்கின்றனர்.
விளைநெல்
சேகரிக்கும் போது விடுபட்ட பறிகதிர்களைப் பொறுக்குவதற்குப் போட்டியிடும்
ஏழைச்சிறார்களின் நிலை மனத்துக்கு மிகுந்த வேதனை தருகிறது. அதேவேளையில்
கிராமத்துச் சிறுவர்கள் சிலர் அங்கே ஓடி விளையாடுகின்றனர். விளைநெல் அகற்றப்பட்ட
பிரதேசம் அங்கு விளையாட்டு நிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இந்நாள்வரை
நெல்லுடன் சேர்ந்து வேறுபாடற்று வளர்ந்த புல்லினங்களைப் புறந்தள்ளிய உழைப்பாளர்
விளைகதிரைச் சேர்க்கிறார்கள் அறுவடையின் போது கழித்துவிடப்பட்ட களைகளை ஆங்காங்கே
கட்டி விடப்பட்ட மாடுகள் ஆவலுடன் மேய்கின்றன.
இதேபொழுதில்
மறுவயற் துண்டில் சிலர் சூடு மிதிக்கிறார்கள். இயந்திர உதவி வேலையை
இலகுவாக்குகின்றது பெண்கள் பொன்வண்ணக் கதிர் சொரிந்த செந்நெல் மணிகளைக் காற்றில்
தூற்றுகின்றனர். ‘பொலிப்பாட்டு’ பிறக்கிறது மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.
வாகனங்கள் மூலம் மண்தந்த விளைச்சலைத் தம் வீடுகொண்டு செல்கின்றனர். எஞ்சிக்
கிடக்கின்ற நெல்லின மீதிகளும் வண்டிகளில் ஏற்றப்பட்டு வேறிடம் கொண்டு
செல்லப்படுகின்றன காளை மாடுகளின் கழுத்துச் சலங்கைகள் ஒலியுடன் கூடிய எதிர்காலத்தை
வரவேற்பது போல ஒலிக்கின்றன.
சூரியன்
உச்சிக்கு வந்து விடுகிறான். வெயிலின் உக்கிரத்தில் வியர்வை சேரவும்
சோர்வில்லாதபடி அறுவடைக் கோலம் தொடர்கிறது. மதிய உணவினை வயல்வரப்பிலிருந்து
உண்ணுகிறார்கள். மீண்டும் தொழில் தொடர்கிறது. பாட்டுஞ் கூத்தும் பரவசக் கூச்சலும்
சேர்ந்த நவரசப் பொழுதாய நாள் நகர்கிறது.
மாலைச்சூரியர்
மேற்கில் மறையும் வேளை நெருங்குகிறது. மங்கிய செவ்வொளி எங்கும் சிரிக்கிறது.
அறுவடை இனிதே முடிவுறுகின்றன. விளைச்சலைச் சுமந்து உழைப்பாளிகள் வீடு நோக்கி
நடக்கிறார்கள்.
அழகுகள்
பலவிதம். சிலவற்றைச் சொற்களுள் அடக்கிவிடலாம். சிலவற்றைக் கவிதையாய் வடித்து
உணர்த்திவிடலாம். ஆனால் செந்நெல் வயல் அறுவடைக் காட்சியின் அழகோ ஏட்டிலும்
அடங்காது;
பாட்டிலும் அடங்காது. அது பார்க்கும் விழிகளுக்கே புலப்படுகின்ற
பேரழகு கோலமாகும்.
‘உள்ளத் தனையது உயர்வு’
இலையும்
குழையும் அணிந்த ஆதி மனிதன் இன்று அணுவைப் பிளந்துவிட்டான் ஏழு கடலைக் கடந்து
அகன்ற அண்டத்திலும் தன் காலடிகளைப் பதித்து விட்டான். ‘இன்னும் உயர வேண்டும்’ என்ற
எண்ணமொன்றே மனிதனை விலங்குகளினின்றும் வேறுபடுத்தியது. ஏற்றம் மிகு வெற்றிபெற்ற
உயிரினமாக வரலாறு எழுத வழி வகுத்தது இந்த உயர்ச்சியானது தனிமனித முயற்சிகளின்
ஒருங்கிணைந்த உழைப்பினால் முகிழ்த்த விளைவேயாகும்.
ஒவ்வொரு
தனிமனிதனும் தனது உயர்வினைக் கருதியே கடமை புரிகின்றான். ஏழையொருவன் செல்வனாவதை
நோக்காகக் கொண்டு செயல் புரிகின்றான். கல்லாதவன் கற்றுணர்ந்த அறிஞனாவதற்குச்
கடுமையாக உழைக்கிறான். அறிஞன் மேன்மேலும் அறிவுடைப் பேரறிஞனாகப் பொலிவதற்காகப்
பணிபுரிகின்றான், ஒவ்வொரு வர்க்கத்தினரும்
தன்னிலும் மேம்பட்ட இன்னோர் உயர்நிலையை அடைவதையே நோக்காகக்கொண்டுள்ளனர்.
அவ்வாறெனின் உயர்வின் எல்லைதானேது?
இந்தக்
கேள்விக்குத் தேவர் திருக்குறள் தெள்ளிய பதில் ஒன்றை தருகின்றது. அதுமட்டுமல்ல
உயர்வானது ஒவ்வொருவருக்கும் ஏன் வேறுபட்ட அளவுகளில் நிகழ்கின்றது எனும்
விளைவுக்கும் விடை தருகின்றது இக்குறள். உயர்வினைச் சொல்லும் அக்குறள்.
“வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்
தனையது உயர்வு”
ஆம்!
உள்ளம் எத்துணை உயர்ந்ததாக இருக்கிறதோ அவ்வுள்ளம் உடையவனின் உயர்வுகளும் அத்துணை
உயர்ந்தவையாக இருக்கும் என்கின்றார் திருவள்ளுவர். அவ்வாறெனின் உள்ளத்தை
உயர்த்துவது எவ்வாறு?
உயர்ந்த
எண்ணங்களான அன்பு, அறம், நகை போன்றவற்றை கைக்கொள்ளும் போது அவ்வுள்ளமும் உயர்ந்ததாகின்றது.
இதனாற்றான்
வள்ளுவர் பெருமான் வேறோரிடத்தில் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிறார்.
உள்ளத்தின் கண்ணெழும் எண்ணம் யாவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்;
தன்னையும் பிறரையும் பற்றிய சிந்தனைகள் தாழ்வில்லாது இருக்க
வேண்டும் என்கின்றனர்.
உயரமான
வரப்பு ஒன்று எவ்வாறு அதிக நீரைத் தேக்கி அதிக விளைச்சலைத் தருகின்றதோ அவ்வாறே
உயர்ந்த உள்ளமும் நல்லியல்புகளைத் தேக்கி வாழ்வில் உயர்நிலையை அடைய உதவுகின்றது.
உயர்ந்த
உள்ளத்தின் இயல்புகள் வாக்கினில் ஒளியை உண்டாக்கும். நடத்தையில் நம்பிக்கையை
உருவாக்கும். உறவுகளைப் பெருக்கும். பகைமைகளைப் போக்கும். இருளான எண்ணங்களை
அழிக்கும். அன்பும் அருளும் நிறைந்த மனோநிலையைத் தோற்றுவிக்கும். எல்லோரும்
இறைவனின் குழந்தைகளே எனும் இனிய நினைவைத் தரும். ஆற்றாமை,
அவசரம், அநீதியான எண்ணம் போன்றவற்றை
அழித்துவிடும். அமைதியான, ஆனந்தமான ஓர் உயர்வின் எல்லைக்கு
இட்டுச்செல்லும்.
ஒவ்வொரு
தனிமனிதனின் அடைவுகளும் அவன் உள்ளத்தெழும் உணர்வுகள் அள்ளி வழங்கிய செல்வமேயாகும்.
உயர்ந்த உள்ளமுடையோர் வாழ்வு உன்னதமாக இருக்கின்றது. தாழ் சிந்தையுடையோர் வாழ்வு
வெறுமையாகிப் போகிறது. இது காவியமும் இதிகாசமும் காட்டுகின்ற ஒரு விதி;
இன்றைய வரலாறு எழுதுகின்ற ஒரு செய்தி.
இதையே
அன்று ‘எண்ணமே வாழ்வு’ என்று திண்ணமாகச் சொன்னார்கள். ‘நல்லது நினை;
நல்லது நடக்கும்’ என்றனர். இந்த நம்பிக்கை விதியைத் தம் சந்ததியில்
விதைத்தனர். ‘கேடு வினையப்பான் கெடுவான்’ என எச்சரித்தனர்.



