மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 6

மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 6



மனித வாழ்வில் இறைநம்பிக்கை

தொடக்கமும் முடிவும் இல்லாது அநாதியாய் அகன்று விரிந்திருக்கின்றது பிரபஞ்சம். அதில் தன்னணுணர்வு இல்லாத சிற்றுயிர்கள் முதல் தன்னை உணரத் துடிக்கின்ற மனிதன் வரையாக கணக்கில்லா உயிர்கள் கணந்தோறும் உயிர்க்கின்றன; மடிகின்றன. இவ்வாறாக உயிரையும் உலகையும் படைத்து, பக்குவமாய்க் காத்து, காலக் கரைவில் அழித்து அகிலத்தைப் பரிபாலிப்பதற்கு யாதோ ஒரு அளவிறந்த சக்தியே காரணமென நம்புகின்றனர் உலகோர். மனித சக்திக்கும் மிக மேம்பட்டு, மானிடன் முதல் நுண்ணிய மண்புழு ஈறாய் பரிபாலிக்கின்ற அந்த சக்தியையே நாம் ‘கடவுள்’ என்கின்றோம்.

உடல் கடந்து, உளம் கடந்து உயிரோடு ஒன்றி நிற்கும் இச் சக்தியின் வணக்கம் நமக்கு வழிகாட்டுகின்றது. வாழ்க்கைப் பாதைக்கு ஒளியூட்டுகின்றது. வாழும் நாட்களில் களிப்பூட்டுகின்றது. வானாளின் பின்னரும் ஆத்மாவுக்கு அமைதியைத் தருகின்றது.

புல்லும் பூடும் புழுவும் மரமும் பரிணமித்த பாதையில் தோன்றிய மனிதன் தன்னைச் சூழ்விருந்த இயற்கைச் சக்திகளின் முன்பு தான் ஓர் அற்ப உயிர் என்பதை உணர்ந்தான். கார்கால இடி கேட்டு, காற்றின் சுழல் பார்த்துக் கலங்கினான். வானைக் கிழிக்கும் மின்னலும், தரையை நிரப்பும் மழையும் அவனைத் தடுமாற வைத்தன. ஆற்றல் ஒடுங்கிய அந்த வேளையில் அச்சம் பிறந்தது.

வெல்ல முடியாத இயற்கைக்கு அடிபணிவதே தன்னைக் காக்கும் வழி என மனிதன் நம்பினான். நம்பிக்கை வளர வளர ‘பக்தி’ பிறந்தது. தீயையும், காற்றையும், தகிக்கும் கதிரையும், மழையையும் தொழுதான். ஒவ்வொரு சக்தியையும் ஒவ்வொரு தேவனாக, தேவதையாக உருவகித்தான். ஒரு நாமம், ஓருருவம் ஒன்றுமில்லாத அந்தச் சக்திக்கு திருநாமம் ஆயிரமிட்டுத் தொழுதான்.

மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 6


உணரமுடியாத அந்த சக்தியை உணர்வுகளை ஒன்றாக்கி வணங்கினான் மனிதன். தானும் தன் சொந்தமும் பங்கம் ஏதுமின்றி வாழ வரம் கேட்டான். நம்பிக்கைகள் அவனுக்குக் கை கொடுத்தபோது எல்லையில்லாத அந்த இயற்கை சக்தியே தன்னை வழிநடத்தியதாக மனமுருகி நின்றான். நன்றி செலுத்துவதற்காக விழாக்களை எடுத்தான்.

காலங்கள் செல்லச் செல்ல தனி மனிதன் சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டான். சமூக வாழ்க்கையில் மனிதன் பற்பல நயங்களைச் சந்தித்தான். ஆயினும் இடையிடையே அவன் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அச்சத்தின் பொருட்டு அடிபணிந்த மனிதன் தன் அன்றாட வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்கவும் அச்சக்தியை நாடினான்.

இயற்கையை வென்று, இன்னொரு கோளிலும் கால் வைக்கத் துணிந்துவிட்ட இன்றைய நாளிலும் மனிதன் அச்சக்தியின் மகத்தான ஆற்றலை மறந்துவிடவில்லை. மாறாக ‘இறைவழிபாடு’ மனித குலம் பெற்ற சிறந்த பாரம்பரியமாக வழங்கி வருகின்றது. ஒரே காலத்தில், உலகின் வெவ்வேறு பிரதேசங்களில் வளர்ந்த இறை நம்பிக்கையானது, ஒரே சக்திக்கு வெவ்வேறு மக்களால் வெவ்வேறு வடிவம் கொடுக்க வைத்தது. இதனால் மதங்கள் மக்களுடன் வேறுபட்டன. வழிபடும் முறைகளும் மதங்களுக்கேற்ப மாறுபட்டிருந்தன. ஆயினும் நம்பிக்கை மட்டும் ஒன்றாகதாகவே இருக்கின்றது.

உலகின் மூலைகள் ஒரு நொடிப் பொழுதில் ஒன்றுடனொன்று தொடர்புகொள்ளும் இன்றைய தொழில்நுட்ப யுகம் இன்னும் தொலை தூரமான இலக்குடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மனித வரலாறு என்ற நாணயத்தின் ஒரு பக்கம் சாதனைகளும், சந்தித்த வெற்றிகளும் அந்த மற்று நீள்கின்றன. ஆயினும் மறுபக்கமோ மனிதகுலத்தை தலைகுனிய வைக்கின்றது. ஆம்! வறுமையும், போரும், வஞ்சக ஆட்சிகளும் மனித வாழ்வில் விரக்தியை ஏற்படுத்துகின்றன வாழ்வில் வெறுப்பையும், வேதனையையும் சலிப்பையும் சேர்க்கின்றன.

இவ்வாறான இரு மாறுபட்ட நிலைகளினிடையே சிக்கித் தவிக்கின்றது இன்றைய மனிதகுலம். துன்பம் செறிந்த பாதைகளின் முடிவுக்கு இறைசக்தி ஒன்றே உறுதுணையாகும் என்று இன்றைய மனிதனும் உணர்ந்துவிட்டான். தன்னைத் தானே வழிநடத்திய வேளைகளில் இருளான பாதைகளில் சென்று தடுமாறி விழுந்ததைத் தெளிந்து கொண்டான். தன் பயணத்தின் ஒளியாக இறைசக்தியைப் புரிந்துகொண்டான்.

பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகளைப் பேணிக் காக்கும் கீழைத் தேயம் மட்டுமல்லாமல் இவற்றை ஏறத்தாழ மறந்தே போய்விட்டிருந்த மேலைத் தேயமும் அந்த மாண்புமிகு சக்தியை உணரத் தொடங்கிவிட்டது. எண்ணத்துக்கு எட்டாத ஆற்றலுள்ள அச்சக்தியின் மீதுள்ள நம்பிக்கையும் அமைதியும் ஆனந்தம் அளிக்கின்ற அருமருந்து என்பதை மனிதன் உணர்ந்துவிட்டான்.

பல் கிளைகளாய்ப் பிரிந்து சென்றாலும் நதியொன்று இறுதியில் ஒரு கடலை அடைவதைப் போல, பேதங்கள் பலவற்றைக் கொண்டிருந்தாலும் எல்லா மதங்களும் அற்புதமான இறைசக்தியை உணர்வதற்கே வழிகாட்டுகின்றன.

கடினமான வாழ்க்கைப் பாதையைக் கடக்கின்ற வல்லமையை இறை வழிபாடு தருகின்றது. களிப்பு நிறைந்த காலங்களும் வாழ்வினில் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றது. சோதனை மிக்க காலங்களில் சுமைகளை இறக்கிவைத்து “அவன் செயலே இஃது” என்று ஆறுதற்பட வைக்கின்றது. நெறி தவறி, நீதி கெட்டு, வழி பிறழ்ந்து போகாமல் வாழ்க்கைப் பாதையை வரம்பிட்டுக் காக்கின்றது. சிந்தையைச் சீர் செய்கின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட பேதங்களுக்கு அப்பால், ஒன்றேயாகி நிற்கின்ற இறை நம்பிக்கை ஒவ்வொரு தனி மனித வாழ்வையும் வழிநடத்துகின்றது. இத்தகு மேன்மையுள்ள இறை நம்பிக்கையை உறுதுணையாகக் கொண்டு வாழ்வை வளப்படுத்துவோமாக!

 

 

தானத்திற் சிறந்தது வித்தியாதானம்

மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 6


உடையோர் இல்லாதார்க்கு உவந்தளித்தல் ‘தானம்’ எனப்படும். மண்விளை தானியங்கள் உண்ணும் உணவாக அளிக்கப்படுகின்றது. கண்ணும் குருதியும் எண்ணற்கரிய உயிர்களின் ஊனத்தைத் தவிர்க்க, தானமாக அளிக்கப்படுகின்றன. உடலைக் காத்து உன்னதப் பணி புரிகின்றன. ஆனால், உயிரைக் காத்து உறுதுணையாய் ஓம்புகின்ற தானமும் ஒன்றுண்டு. தானங்களுள் தலை சிறந்தது; தரணியிலே விலை மதிப்பற்று விளங்குவது; அதுவே வித்தியா தானமாகும்.

மனம் நிறை வித்தையை மற்றவர்க்கு ஈதலே வித்தியாதானமாகும். கல்லாதவர் ஒன்றும் இல்லாதவர்க்கு ஒப்பாவார் என்கின்றார் செந்நாப் போதார் திருவள்ளுவர். மண்ணுலகில் மாண்புடன் வாழ வகை செய்வது கல்வி. எண்ணுகின்ற பிறவி ஏழிலும் பின் தொடர்வது முன்கற்ற கல் என்கின்றார் அவர். ஆதலால் எழுமையும் ஏமாப்புடைத்த இனிய கல்வியை ஈதலே மிகப் பெரிய கொடை என்பது மிகையாகாது.

கல்வியறிவு தங்கி நில்லாத ஒருவனிடத்து நல்லதையும் அல்லதையும் பகுத்துணரும் வல்லமை இருப்பதில்லை. கல்லாதவன் முகத்தில் கண்கள் இருப்பதில்லை; அவை இரண்டு புண்களே ஆகின்றன என்கிறது திருக்குறள். இதனால் கண்ணில்லாத கபோதியொருவனுக்கு கண்ணை வழங்கிப் புற ஒளியை ஊட்டுவதைவிட அறிவாகிய ஞான ஒளியை அவனிடத்து நாட்டுவதே சிறந்ததெனச் சாற்றுகின்றனர் பெரியோர்.

கல்வியாகிய அறிவு, கேட்கப்படும் போது அவை செவிக்கு நல்ல விருந்தாகின்றன. அறிவுப் பசியைத் தீர்க்கின்றது. செவிக்கு இவ்வுணவு இல்லாத போதே வயிற்றுப் பசியை ஆற்றும் அன்னம் வேண்டும் என்கின்றது குறள். கேள்வியாகிய கல்வி நினைவுகளை நிரப்புகின்றது. உணர்வுகளை முழுமையாக்க உறுதுணை ஆகின்றது.

இதையே, உதரத்துக்கு உணவு வழங்கி ஓராயிரம் பேருக்கு பசி தீர்ப்பது பெருமையல்ல; இல்லாத ஒருவனின் கல்லாமை நீக்குதலே ஒப்புயர்வு இல்லாத அறம் என்கிறான் பாரதி. அன்னசத்திரம் ஆயிரம் அமைப்பதிலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கக் கோருகின்றான்.

எத்துணை செல்வமுடையவன் ஆயினும், கல்வி இல்லாதவன் ஏழையாகவே எண்ணப்படுகின்றான். கேடில் செல்வமாகிய கல்வி இம்மையில் நல்வழி வகுத்துத் தருகின்றது. தீவினை களைந்து உயர்வினைத் தருகின்றது. தர்மங்களை மேற்கொண்டு தானுயர வழிசெய்கின்றது. தன் சுற்றம் யாவும் தரணியில் பெருநிலை அடைய உதவுகின்றது. இதன் மூலம் மறுமையிலும் மாண்புள்ள நிலையடைய உறுதுணை ஆகின்றது.

இன்னும், புறத்தே உணரப்படுகின்ற தானங்கள் யாவும் பூதங்கள் ஐந்தினாலும் அழிக்கப்படத்தக்கவை. நிலையாத உடலோடு நீத்துவிடும் இயல்புடையவை. உடல் அழியும்போது உடல் கொண்ட தானமும் அழிந்துவிடும். கொடுத்தவர்க்கு மட்டுமே அத்தானம் தர்மமாய் நிலைத்திருக்கும். ஆனால் கல்வி தானமாய் வழங்கப்படும் போது அதைப் பெற்றவர் பிறவிகள் ஏழிலும் பயன் பெற்றிருக்க முடியும். கொடுத்தவர்க்கும் தர்மம் நெடுந்தூரம் தொடர்ந்து வரும்.

உலகியல் பொருள் யாவும் வழங்கப்படும் வேளையின் பின், கொண்டவர்க்கு உரிமையாகி அவர் பொருளின் அளவினைக் கூட்டுகின்றது. கொடுத்தவர்க்கு இல்லாததாகிக் குறைகின்றது. கொடுத்தாலும் குறையாத பெருஞ்செல்வமாய்ப் பெருகுவது கல்விச் செல்வம் ஒன்றேதான். கொண்டவர்க்கும் கொடுத்தவர்க்கும் குறைவில்லாமல் பெருகுவது கரையற்ற கல்வியின் தானமேயாகும். ஆதலால் கற்றவர்க்கும் கற்பித்தவர்க்கும் உற்றதுணையாக நின்று நற்றவப்பேறை நல்குகின்றது.

கல்லாத ஒருவன் மானிடனாயினும் அவன் விலங்கெனவே கருதப்படுகின்றான்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரொடு ஏனையவர்”

என்கின்றது ஈரடிக்குறள். பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றவர்கள் கூட கல்லாதவிடத்து விலங்கென்ற கணிப்பையே பெறுகின்றனர். கல்லாதவர் மாக்களென்று தாழ்த்தி வைக்கப்படுகின்றனர். ஐம்புலனும் ஆறறிவும் செம்மையாகப் பெற்றிடினும் இம்மையில் மக்கௌன்று போற்றப்படுவதற்கு மனம் வளர்க்கும் கல்வியே அவசியமாகின்றது.

ஆதலால் கல்லாத ஒருவனுக்கு கல்வியை வழங்குதலானது, மானிடனான ஒருவனை மாண்புகள் மிக்க மனிதனாகப் படைக்கின்ற பெருமையுடைத்ததாகும். இதனாலன்றோ எழுத்தை அறிவித்தவன் இன்னொரு இறைவனாகப் போற்றப்படுகின்றான். இவ்வுலக வாழ்வின் வழிகாட்டியாக வாழ்த்தப்படுகின்றான்.

கல்வி ஆத்மாவுக்கு அமைதியைத் தருகின்றது. ஆனந்தமான வாழ்வுக்கு அடிகோலும் அத்திவாரமாகின்றது. நித்தியத்தில் நீடுபுகழ் பெற்று நிலைத்திருக்க உதவுகின்றது. அறநெறி நின்று தவநெறியில் ஒழுக உறுதுணையாகின்றது. அழிவற்றதாக உயிரோடு தொடர்ந்து நின்று ஆக்கம் பல விளைக்கிறது. ஆதலால் இத்துணை பெருமையுடைத்த கல்வியை இல்லையெனாது ஈதலே தலைசிறந்த தானமெனக் கொள்வது தக்கதேயாகும்.

கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”

 

 

விடியற் பொழுதினிலே...

மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 6


கருநீல வானம் வெண்மைக்கு உருமாறிக் கொண்டிருக்கிறது. காலைக் காட்சி உதயமாகிக் கொண்டிருக்கிறது. கனத்த இருள் விலகும் அவ்வேளை கிழக்குத் திசை வெளிக்கத் தொடங்குகிறது. கொடியில்லாத தனி முல்லைப் பூப் போல, விடிவெள்ளி வானில் காட்சியளிக்கிறது. உருண்டு போன இரவில் கண்ட எண்ணற்ற ஒளிப்பூக்கள் அத்தனையும் எங்குதான் போய் ஒளிந்து கொண்டனவோ? தண்ணிலா தன் கடமை முடித்து மேற்றிசையில் மறைகிறது. சின்னஞ்சிறு சிட்டுக்கள் தம் சிருங்காரக் குரலில் கீதமிசைக்கின்றன. வண்ணப் பட்சிகள் சிறு வீணை மீட்டினாற் போல மிழற்றுகின்றன. பலவித பறவைகளும் ஒலிசெய்வது சப்தஸ்வரங்களும் சேர்ந்தொலித்தாற் போலத் தோன்றுகிறது. கீழ்த்திசை மெல்லச் சிவக்க சிற்றொளி பரவத் தொடங்குகிறது. ஆம்! பால சூரியனின் பேரழகுப் பவனி ஆரம்பமாகின்றது.

செங்கதிரோனே! வருக வருக” எனக் கட்டியம் கூறுவது போல் சேவல்கள் சிறகடித்துக் கூவுகின்றன. கதிரவனை வரவேற்றுக் களிப்புடன் காகங்களும் கரைகின்றன. வண்ணப் பறவைகள் கானமிசைக்க வானவெளிப் பரப்பிலே வடிவழகுச் சூரியன் மிதந்து வருகின்றான். இதழ் இமைகள் மூடிக் கிடக்க, மொட்டுப் பருவத்து மஞ்சள் அலரிகள் அலரவன் வருகைக்காக மோனத் தவமியற்றுகின்றன.

ஒளி விரித்த உதயனின் வருகையில் சிறுபூக்கள் நாணுகின்றன. அவை தளிரிலையில் தம்முகம் பார்த்துக்கொள்ளும் அழகு மனத்தை அள்ளுகின்றது. இலைகளில் உறங்கும் பனித்துளிகள் வைரமணிகளாய் ஜொலிக்கின்றன. அமைதியின் ஆட்சி மெதுவாக விலகத் தொடங்குகிறது. ஆலயமணி கின்றது. மெல்லிளம் தென்றல் அதிகாலை வேளைக்குக் குளின்மையைக் கொடுக்கின்றது. ‘பரிதிக் கோளத்தின் பசுங்கதிர்கள் பரவுகின்றன.

பரவுகின்றன. பெரு மரங்கள் தம்நிழலை நிலமகளில் பதிக்கின்றன. மென்னீல வான் பரப்பில் தினகரன் தன்பயணம் தொடர்கிறான்.

அதோ! ஒரு வயற்கரையோரத்தில் விடியற்பொழுதின் புலர்வு காண்போம். இயற்கை அன்னை உடுத்தியுள்ள பசுங்கம்பளமோ அன்ன நெற்பயிர்கள் செழித்துக் கிடக்கின்றன. பொற் கிரகணங்களை வாரி வீசியபடி பகலவன் மேலேழுகின்றான். பசுமையுடன் பொன் மஞ்சள் ஒளிசேர வர்ணனைக்கு எட்டாத வடிவழகுடன் புதுவர்ணம் தோன்றுகின்றது. அக்கோலத்தின் அழகுதான் எத்துணை அற்புதமானது! பழனத்தில் பதர்க் கதிர்கள் பகலவன் முகம் பார்த்துச் சிரிக்கின்றன. நெல்மணி சுமந்த பயிர்கள் தாய்மை அழகு பெருகத் தலை குனிந்து நிலம் நோக்குகின்றன. குறைகுடங்கள் ததும்புகின்ற, நாமறிந்த தத்துவம் அங்கு பரிணமிக்கின்றது. இவற்றில் கண்செலுத்தாது மண்ணுலகின் ராஜகுமாரன் தன்பயணம் தொடர்கிறான்.

தெள்ளிய நீர் சுமந்த ஓடைகள் வெள்ளிக் கதிர்கள் புகுந்தாற்போல புது அழகுடன் பொலிகின்றன. அங்கு தங்கச் சிமிழ்கள் போலக் கிடந்த தாமரை மொட்டுக்கள் செங்கதிர் தீண்டத் தம்முகம் மலர்த்துகின்றன. குமுத மலர்களோ கதிரவன் வரவில் குமுறிக் குவிகின்றன. ஒருவர் இன்பமுற இன்னொருவர் துன்பமுறும்படி இயற்கை உண்மை அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

வயல் வரப்போரங்களில் உழவர்கள் தம் ஆவினங்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள். பயணத்தில் தன் சேய் பிந்தியது கண்டு தாய்ப்பசு தவிப்புடன் குரல் கொடுக்கிறது. அந்த “ம்மா” என்ற ஓசையும் காலைப் பொழுதிற்கு மங்கலம் சேர்க்கிறது. சேற்று நீருள் சிறுமீன்கள் சந்தோஷமாய் விளையாடுகின்றன. இரைதேடும் கொக்குகள் நிரையாகப் பறக்கின்றன. சகல வரவேற்புக்களையும் ஓர் அலட்சியத்துடன் ஏற்றுக்கொண்டு கதிர்ச்செல்வன் கம்பீரமாய் வான்முகட்டில் மேலேறுகிறான்.

மனித உலகம் மெதுவாக விழிக்கத் தொடங்குகிறது. துள்ளும் நடையுடன் துடியிடையில் குடத்துடன் நங்கையர் நீராடச் செல்கின்றனர்.

யார் நீராடச் செல்கின்றனர். விவசாயிகள் மண் தந்த விளைச்சலுடன் சந்தை செல்கின்றனர். கிராமத்து வீதிகளில் வண்டில் மணியோசை இனிதாக எழும்புகின்றது. மனைத் தலைவர்கள் தத்தம் வேலைத் தளம் நோக்கி விரைகின்றனர். பள்ளிச் சிறுவர்களின் முகங்களில் காலைப் பொழுதின் உற்சாகம் பரந்து கிடக்கின்றது. உஷத் காலப் பூஜைக்காகப் பூத்தட்டுக்களுடன் பக்தர்கள் கோயிலை நோக்கி நடக்கின்றார்கள். மனைத் தலைவியர் அவரரகதியில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

புது நாளின் மலர்வு உயிரினங்களில் உற்சாகத்தைப் பிறப்பிக்கும் அருமருந்தாய் ஆகின்றது. சில நாழிகைப் பொழுதின் முன்னர் விழிமூடிச் செயலற்று உறங்கியிருந்த உலகம் இப்போது சுறுசுறுப்பின் களமாய் செயற்படத் தொடங்குகின்றது. கழிந்த நாளின் அனுபவங்களும் இனிவரும் நாட்களுக்கான எதிர்பார்ப்புக்களும் அன்றைய செயல்களை ஆற்றுப்படுத்தி வைக்கின்றன.

உதய சூரியக் கதிர்களிலும் சற்றே வெம்மை படரத் தொடங்குகின்றது. சூரியனைச் சுற்றியுள்ள மேகங்களும் ஒளிமிகுந்த வர்ணத்தில் ஜொலிக்கின்றன. தம்மைச் சார்ந்தோரைச் சிறப்பிக்கின்ற நற்பண்பாளர் போலத் தினகரன் தோன்றுகிறான். சுடர்கின்ற மேகங்களின் நடுவே அடர்ந்த பேரொளித் தட்டாக ஆதவன் காட்சியளிக்கின்றான்.

இமயத்தின் பெருமையைச் சிறுகல் செப்புமா? எல்லையில்லாக் காலைப் பொழுதழகு சொல்லினிலே சிக்குமா? வார்த்தைகளிலடங்காத வண்ணப்பூப் பொலிவுடன் சூரியச் செல்வனின் சுந்தரப் பவனி தொடர்கிறது. எங்கும் ஒளிமயம்! எல்லாம் ஒளிமயம்!!

 

Post a Comment

Previous Post Next Post