மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 4

 எனது பாடசாலையில் நிகழ்ந்த தமிழ்த்தின விழா

மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 4

சென்ற வாரத்தின் இறுதிநாள் அது சொல்லமுடியாத மகிழ்வு நிறைந்த நாள். எங்கள் பாடசாலையில் தமிழுக்கு விழா எடுக்கத் தீர்மானித்த திருநாள். அன்று புலர்ந்த பொழுது சங்கத் தமிழ்க் காலத்தை எங்கள் பாடசாலையில் பரிணமிக்கச் செய்திருந்தது. ஆம்! பாலர் முதல் உயர்நிலை வகுப்பினர் வரை பைந்தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வண்ணம் உடையணிந்திருந்தனர்.

மாணவர் யாவரும் வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்தபடி விழா ஒழுங்குகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். சிறுமிகள் பட்டுப் பாவாடை சட்டை அணிந்து பட்டாம்பூச்சிகளென மகிழ்ந்திருந்தனர். உயர் வகுப்பு மாணவிகள் பண்டைய எங்கள் குல மகளிர் போலச் சேலையணிந்து மாலை சூடியிருந்தனர். அன்புக்குரிய எங்கள் ஆசிரியர் குழாத்தினரும் அழகு தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலித்தபடி விழா ஒழுங்குகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

பாடசாலை வாயில் அலங்கார வளைவுகளாலும் அழகிய மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருபுறமும் இலங்கிய இரு பெரிய குத்துவிளக்குகள் மங்களம் பொங்கச் செய்துகொண்டிருந்தன. நிறைகுடமும் நெல் மணிகளும் விழாவின் புனிதத்தைப் பொலியச் செய்தன.

மாணவர்கள் ஒன்றுகூடும் அரங்கத்தின் கண்ணமைந்த அழகிய மேடை வெண்மலர் மாலைகளை விதானமாகக் கொண்டிருந்தது. ஒளி உமிழும் தீபங்கள் அரங்கத்தை எல்லைப்படுத்தி அழகு செய்தன. ஊதுபத்தியின் சுகந்தமான நறுமணம் உள்ளத்தில் அமைதியை நிறைத்தது. உள்ளாக அமைந்திருந்த கல்வித்தாயின் திருவுருவம் தீப ஒளியில் நனைந்து கொண்டிருந்த தோற்றமானது தேவலோகமோ எனும் நினைவைத் தோற்றுவித்தது.

இளங்காலைப் பொழுதுக்கு விடை கொடுத்தபடி வெயிலவனின் இளங்கதிர்கள் வெம்மை பெறத் தொடங்கியிருந்தன. நேரம் பத்து மணியைத் தாண்டிய வேளை. விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். அவ்வேளையில் விழாவினைச் சிறப்பிக்க அழைக்கப்பட்ட தலைமை விருந்தினர் வருகை தந்தார். ‘தமிழின் தனயன்’ எனப் போற்றப்படுகின்ற ‘அறிவுடை நம்பி’ எனும் நாமம் கொண்ட அவ்வறிஞர் பெருமானும் ஏனைய தமிழ்ப் பெரியோர்களும் வரவேற்கப்பட்டனர். அதிபரும், ஆசிரியர்களும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். மங்கல நீறும், மஞ்சள் சந்தனமும் வழங்கி உபசரித்தனர். அறிஞர் குழாம் அரங்கம் வந்தடைந்தபோது ஒருமுகமாய் எழுந்துநின்று அவர்களை வரவேற்றனர். தொடர்ந்து மாணவிகளின் இன்னிசைக் கீதம் அவர்கள் வரவுக்கு கட்டியம் இசைத்தது. கீதத்தின் நிறைவில், அறிவுடைநம்பி அவர்கள் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். திருவிளக்கு மங்கலமாக ஒளிர்ந்த வேளையில் அறிஞர் குழாம் அரங்கம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து மாணவிகள் தேவாரம், தமிழ்த்தாய் வாழ்த்து, பாடசாலைக் கீதம் என்பனவற்றை இசைத்தனர். அமைதியான அந்தப் புனிதப் பொழுதில் எழுந்த இனிய கீதங்கள் நெஞ்சங்களில் நிறைவைத் தோற்றுவித்தன; எண்ணங்களில் அமைதியான ஆனந்த உணர்வை அரும்பச் செய்தன.

இசையின் நிறைவில், அதிபர் அழைக்கப்பட்டிருந்த பெரியோர்களை அன்புடன் வரவேற்று வாழ்த்துக் கூறினார். தமிழைத் தழைக்கச் செய்கின்ற தலைமை விருந்தினரை உரையாற்ற அழைத்தார். தமிழே உருவெடுத்தாற்போல உருவும் உளமும் பொலிந்த அறிவுடைநம்பி அவர்கள் ஒலிவாங்கியில் முன்னின்று உரையாற்றத் தொடங்கினார். தமிழுக்குத் தாள் பணிந்தார். தன்னை அழைத்தமைக்கு நன்றி நின்றார். தமிழன்னை அருள் வேண்டி தன்னுரை தொடர்ந்தார்.

சீராகப் பாய்கின்ற தெள்ளிய ஆற்றைப் போல தமிழ் பெருக்கெடுத்தது. தென்றலின் மென்மையும் செங்கதிரோன் சுடரும் சேர்ந்தது போல் எங்களின் நெஞ்சங்களைத் தொட்டது. எண்ணங்களில் ஒளியேற்றி வைத்தது. ‘தமிழின் தொன்மையும் மேன்மையும்’ என்றவாறு அவர் ஆற்றிய உரை பசுமரத்தாணி யன்ன எம்உள்ளங்களிற் பதிந்தது!

தொடர்ந்து ‘சைவப் புலவர்’ ‘பரிமேலழகனார்’ ‘தமிழில் எழுத்தியலின் சிறப்பு’ என்ற பொருள்படப் பேச்சு நிகழ்த்தினார். தமிழின் சிறப்பான எழுத்துக்களையும் அவற்றின் பயன்பாட்டையும் பற்றிய அவர் உரை மாணவர்க்குப் பயன் மிகுந்ததாய் அமைந்தது. அதன் பின்னர் தலைமை விருந்தினர் தமிழ்த்தினப் போட்டிகளில் புலமை பெற்றவர்களுக்குப் பரிசில்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து உணர்வுகளுக்கு விருந்தளிக்கும் உன்னதக் கலைகள் அரங்கேறத் தொடங்கின. உயர்தர வகுப்பு மாணவர்கள் உருவாக்கி இசையமைத்த ‘தமிழெங்கள் உயிருக்கு நேர்’ எனும் தலைப்பிலமைந்த குழுப் பாடல்கள் உணர்வுகளைத் தட்டியெழுப்பின; தனிநடனங்கள், குழு நடனங்கள் என்பன கலை நயம் மிக்கனவாய் கண்களை நிறைத்தன.

மீண்டும் பாரதி’ என்ற தலைப்பில் மேடையேறிய நாட்டிய நாடகம் எல்லோரையும் கவர்வதாய் ஏற்றம் மிகுந்து விளங்கியது. கலை நிகழ்வுகளின் கடைசி அங்கமாய், நிகழ்வுகள் யாவுக்கும் மணிமகுடம் வைத்தாற்போல ‘சிலம்பு’ நாடகம் அரங்கேறியது. கருப்பொருளின் சோகமும் வீரமும் கண்களை நனைத்தது. சொல்லிலடங்காத கண்ணகியின் பெருமை நெஞ்சத்தை நிறைத்தது. எல்லோரிடமும் பாராட்டினைத் தட்டிச் சென்றது.

இறுதியாக தமிழ்மன்றத் தலைவரான எங்கள் தமிழாசிரியர் நன்றியுரை நின்றார், விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும் தம் வாழ்த்துக்களைக் கூறினார். தமிழின் சிறப்புரைத்த அத்திருநாளின் நிகழ்வுகள் தேவாரத்துடன் நிறைவெய்தின. மறக்க முடியாத நினைவுகள் நெஞ்சை நிறைக்க மகிழ்வுடன் நாங்கள் இல்லம் மீண்டோம்.

 

நம்வாழ்வு நலம்பெற நல்லன செய்வோம் தீயன விலக்குவோம்

மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 4


விலங்கொடு விலங்காய் வாழ்ந்த மனிதன் தனித்துவமாய் இலங்க சிந்தனையறிவும் அதனாலாய நல்லொழுக்கமுமே காரணமாயின. புதியன புகுதலும் பழையன கழிதலும் போல நல்லனவற்றை நம்மில் சேர்க்கும்போதே அல்லன நீங்கும் ஆற்றல் வேண்டும். சொல்லிலே மட்டுமல்ல செயலிலும் இவ்வுறுதி வேண்டும்.

நஞ்சு விதை விதைத்தாற்பஞ்சு மரம் முளைப்பதில்லை. முளைக்கீரை போட்டால் முருங்கைக்காய் காய்ப்பதில்லை. இது இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டு நிற்கும் உண்மை. “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” எனும் பழமொழி இதற்குச் சான்று பகர்கின்றது. வினைகள் இரு வகைப்படும். நல்வினை, தீவினை என்பன அவை. நல்வினைகள் புரிவோரை நல்லோர் என நாடு போற்றுகிறது. மகாகவி பாரதியார் ‘உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் வாக்கினிலே ஒளிஉண்டாகும்’ என்கிறார்; உண்மைதான். நல்ல சொல், நல்ல செயல், நன்னடத்தைகள் என்பன தனி மனிதனை வளம்படுத்த வல்லன.

ஈரடியால் இந்த வையத்தை அளந்த திருக்குறள் சொல்வதை நோக்குவோம்:

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்”

தீ என்பது தீய்த்தலால் வந்த காரணப் பெயராகும். தீய செயல்களும் தீயைப் போலவே தீய்க்கும் ஆற்றலுடையன. சேர்ந்தன யாவையும் அழிக்கும் இயல்பின. எனவே...

அவற்றைக் கொடுந்தீக்கு ஒப்பிடுகிறது குறளே வியப். அஞ்சுதற்குரிய பொருளாக தீயனவற்றை எடுத்துக்காட்டுகின்றது. அற நூலின் அறிவுரையை ஏற்று நாமும் தீயன விலக்குதல் நன்று.

இனி, நல்லார்க்கு நல்லார் நல்லார் தீயார்க்குத் தீயார் என்று லகரங்கள் பலஆடும் தமிழ்ச் சொற்சிலம்பத்தைப் பாருங்கள். நல்லெண்ணம், நன்னடத்தை உடையோர் நல்லார். இத்தகைய நல்லவர்களும், நல்லவர் பலரும் இனிமையாகப் பழகுவார்கள். தீயவழக்கமுடைய தீயவர்கள் நல்லவர்களுடன் இனிமையாகப் பழகமாட்டார்கள். நம்மிடம் நற்பண்பொளி பிரகாசிக்கும் போது தீய பண்புகளுக்கு நம்மிடம் வேலைதான் ஏது? ஆகவே அடிப்படை நற்பண்புகளை வளர்த்து, துர்க்குணங்களைத் துரத்தி அறக் கொள்கைகள் தழைக்கச் செய்வோம்.

உன்னைத் திருத்திக்கொள்; உலகம் தானாகவே திருந்திவிடும்” என்பது அறிஞர் கூற்று. நாம் ஒவ்வொருவரும் ஆண்டவனுக்கு ஒப்புக்கொடுத்து வாழவேண்டும். தவறுதல் மனித இயல்பு. தவறிலிருந்து திருந்தி வாழ்வைச் செழிக்கச் செய்யவேண்டும். நல்ல பண்புகளால் நம்முள் நாம் ஏற்றும் நல்லொளி, நாளை உலகெலாம் பரவி நம்புகழ் பரப்பும்.

பொன்னும் மணியும் பொலியும் செல்வமும் பின்னும் பிறவும் மனநிம்மதியைத் தந்துவிடுவதில்லை; அடுக்குமாடிகள் ஆத்ம திருப்தியைத் தந்துவிடுவதில்லை. பெருந்தனக்காரர் பலர் கனத்த மனதுடன் அமைதியின்றித் தவிக்கிறார்கள். தீயவழிகளில் சேர்த்த பணத்துடன் நாளும் நிம்மதியின்றி வாடுகிறார்கள். புறத்தில் பெருமையாகக் காட்சியளித்தாலும் அகத்தினால் சிறுமையுற்று அவலப்படுகிறார்கள். பணமிகுந்தோர் அநாதை விடுதிகளை ஆதரித்தல், அறக்கோட்டங்கள் அமைத்தல், அன்னதானங்கள் செய்தல் என்பவற்றைச் செய்யத் தகுந்தவர்கள் அவ்வாறு செய்து மனநிறைவுடன் வாழ்தலே நன்று.

அறம், அன்பு, பண்பு, கருணை இனிய சொற்களைப் பேசுதல், விருந்தோம்புதல், மூத்தோரைக் கனம் பண்ணு...

தல், நல்லொழுக்கமுடைமை என்பன சில நன்மைதரும் வழிகளாகும். பொதுவாக நற்பண்புகளைப் பழகுதல் ஒப்பீட்டு ரீதியில் கடினமானது, தீயவை சேரச் சில நிமிஷங்களே போதும். உலகில் தாவர, விலங்கு வகைகளிலும் கூடத் தீயன சடுதியில் தழைப்பதையும் நல்லன பெரும் முயற்சிகளின் மூலமே தோன்றுவதையும் அவதானிக்கலாம். ஆனாலும் நற்பழக்கங்களே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயப்பன. ஆகவே இவற்றைப் பேணி வளர்க்க வேண்டும்.

ஒரு சமூகம் செழிப்புற்ற நல்லன போற்றப்பட வேண்டும். தீயன அகற்றப்பட வேண்டும். இதற்காகவே நீதி வழங்கும் நடைமுறைகளும் அதற்கான சட்ட விதிகளும் உருவாக்கப்பட்டன. நீதி வழங்கல் முறைகளில் தீயன தடுப்பதற்கான தண்டனைக் கொள்கைகளில் பயமுறுத்தல் முறைகள் நீக்கப்பட்டு சீர்திருத்த முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தாமாகவே உணர்ந்து நல்லன செய்யவேண்டும் என்பது இதன் அடிப்படை நோக்கமாகும்.

வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வங்களாகப் போற்றப்படுகிறார்கள், இறப்பின் பின்னும் அழியாப் புகழுடைத்த இவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாமும் பிரதியெடுத்தல் வேண்டும். சிலர் செயலற்றுச் சோம்பித் திரிந்து, அதனால் தாழ்வுற்றுப் பின் தீச்செயல்களைப் புரிகிறார்கள். சிறுவயது முதற்கொண்டே உற்சாகமாக இருந்து நம்வாழ்வு முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும்.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் என்பார்கள். நன்மைகள் பலவற்றைத் தீச்செயல் ஒன்றே முற்றாக அழித்துவிடும். மாசிபட்ட வெண்துணி போல மாசுபட்ட மனத்திற்கு என்றுமே நிம்மதியில்லை. நல்லன மட்டும் செய்தாற் போதாது. அல்லன நீக்கவும் அறிந்திருக்க வேண்டும். ஆகவே, நாமும் நல்லன செய்வோம், அல்லன நீக்குவோம் நல்லொளி விளங்க, பெற்றோர் புகழ் பரப்பி, மற்றோர் வாழ்த்துக்களைப் பெற்று வளம்பெற வாழ்வோம்.


நான் திருவள்ளுவரைச் சந்தித்தால்...

மாணவர்களுக்கான கட்டுரைகள் பகுதி – 4

பேரன்புக்கும் பெருமைக்குமுரிய தமிழ் வல்ல பெரியோர்களே! அருந்தமிழின் நறுஞ்சுவையைப் பருகும் ஆவலுடன் அவையில் வீற்றிருக்கும் அன்பர்களே! “குறளுரைத்த வள்ளுவர்பிரானை யான் சந்தித்தால்...” எனும் பொருளில் சொற்பொழிவாற்ற உங்கள் முன் வந்துள்ளேன்.

அணு முதல் அண்டம் வரை அனைத்தையும் உரைத்த வியாபித்த அறிவுடைய வள்ளுவர்பிரானை யான் சந்தித்தால்... கற்பனையே என்மனதில் கனவுகளைத் தோற்றுவிக்கின்றது. அந்த அறிவின் சொரூபத்தை நேரில் நான் சந்தித்தால்... நான் முதலில் கேட்பது இதுதான்!

கையகல வானாளில் எப்படி கடலளவு நூல் படைத்தீர்...?” மெய்யே இது உங்கள் அனுபவம் உரைக்கும் நூலா; அன்றிக் கேள்விச் செல்வத்தைக் கேடில் நூலாகச் செய்தீரா?” எனக் கேட்பேன். ‘எவ்வாறெனினும், ஈரடுலகம் அளக்கின்ற ஒரு கருத்தை எவ்வாறு ஈரடியில் சொல்லி வைத்தீர்’ என்று வினவுவேன்.

உலகின் பொருளனைத்தையும் மூன்றாகப் பகுத்து ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் அதிகாரம் வகுத்து, பெரும் பொருள் ஆகிய பரம் பொருள் ஆயினும் பயன் குறைந்த சிறு பொருள் ஆயினும் பத்தே குறளில் பரிந்துரைத்த பாங்கினை வியந்துரைப்பேன். மனிதனுணரா மகாசக்தி ஏதும் உம் மனத்திருந்து உதவி செய்ததா? அன்றி நீரே பாடியவாறு,

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை”

என்பதன்படி ஊக்கமுடைய உம்மிடத்தே ஆக்கம் வழிகேட்டு வந்து சேர்ந்ததோ? என்று வினவுவேன். உம் குறளில் அடியனாய் நின்று ஆண்டவனைத் தொழுதீர்; அர...

சாளும் மன்னனாய் நின்று அகிலமாளும் திறம் சொன்னீர்; அன்புடையப் பெண்ணாய் நின்று பிரிவில் துயருற்றீர்; எப்படி ஒரு சமயத்தில் எல்லாமுமாய் நின்று எழுதுகின்ற வல்லமை பெற்றீர்’ என்று புகழ்ந்துரைப்பேன்.

தன் குறள் தரணியை வழிநடத்துகின்றதா? என்றவர் கேட்பின் வாய் மூடி நின்று என் ஆற்றாமையை வெளிப்படுத்துவேன். பின் சொல்வேன்; ‘பலர் அறம் மறந்து தம் நலம் பெரிதென்று போற்றுகின்றார்கள்; அன்பிழந்து துணைவியையை அடித்து விரட்டுகின்றார்கள்; குடியிறந்து போனாலும் வரி கேட்டு வாசலில் நிற்கின்றார்கள் ஆட்சியாளர்கள். ஆயினும் விழா மேடைகளில் தங்கள் சிலை வடித்துத் திரைநீக்கம் செய்கின்றார்கள்.

தம்முடைய புன்மை நிலையை மறைப்பதற்காய், தம்மை நல்லவரென்று பிறர் கணிப்பதற்காய் உங்களுக்கு விழா எடுக்கின்றார்கள். விழா மேடையில் நின்று நீங்கள் வெறுத்த புறங்கூறலைச் செய்கின்றார்கள்’ என்று சொல்வேன்.

மேலும், ‘நீங்கள் சொன்ன தீவினையச்சத்தை மறந்து தீயவழிச் செல்கின்றார்கள். தவம் மறந்து தம் வானாளை அவம் செய்கின்றார்கள். கூடா நட்புடன் கூடுகின்றார்கள். கள்ளுண்டு, வாய்மை கெட்டுப் பிறனில் விழைகின்றார்கள். இனியவை வெறுத்து இன்னாதன பல செய்கின்றார்கள்.

தாங்கள் கூறியபடி துறவு பூண்டிருக்கின்றார்கள்; இல்லறத்தில் இருந்து அல்ல. நல்லறம் புரிவதிலிருந்தே துறவு கொண்டிருக்கின்றார்கள்’ என்று நான் பதில் சொல்வேன்.

அவ்வாறெனின், “நான் சொன்ன குறள் பயனற்றுப் போனதா? பாலையில் பெய்த நிலவாகி, வீணாகி விட்டதா?” என்று அவர் துன்பம் கொள்ளுவாராயின், பின் கண்டவாறு பதில் சொல்வேன் நான்.

வள்ளுவன் வழி நின்று வாழ்வாங்கு வாழ்ந்த பெருமனிதர் கதை சொல்வேன். வாய்மை தவறாது, அறம் பிறழாது வாழ்க்கைக்கு வரைவிலக்கணம் வகுத்தவர்கள் திறம் சொல்வேன்.

தாமும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழி சொன்ன நன் மக்கள் பாதைக்கு எல்லையாக நின்ற திருக்குறளின் புகழ் உரைப்பேன்.

கீழைத்தேயம் என்று கீழாக மதிக்கப்பட்ட எங்கள் தேசங்களில் பெருநிதியமாகப் புகழ் பூத்து நிற்கின்ற அவர் நூலின் பெருமை சொல்வேன். வறியவன் கைக்கிடைத்த வைரம் போன்று பலர் வாழ்வில் ஒளிபெருக்கும் சுடராக இருக்கின்றது தங்கள் நூலென்று வாயாரப் புகழ்வேன்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாரதத்தின் புகழுரைக்கின்றான் பாவலன் பாரதி அவன் சொன்னவாறே உங்கள் நூல் உலகப் பொதுநீதியாய், ஒருநாளும் பொய்யாத மொழியாய் நின்று நிலவுகின்றது. பொது மொழியாம் ஆங்கிலத்திலும் பெயர்க்கப்பட்டு உலகனைத்துக்கும் உறுதுணையாய் வழிகாட்டுகின்றது’ என்றுரைப்பேன்.

ஆயிரம் காலமாய் அரியதொரு வழிகாட்டியாய் விளங்குகின்ற தங்கள் நூலும், நூல் செய்த தும் புகழும் நிலையானதே. ஆயினும் மீண்டும் உமக்கொரு பிறப்புண்டேல் எம்மிடை மலர்ந்து, உம் நூல் வழி நடந்து எமக்கொரு வழிகாட்டியாய் எம் வாழ்வில் ஒளிதருவீர்” என்று வேண்டி வணங்குவேன். அவர் பாதமலர் தொட்டு என் பணிவு சொல்லி வணங்கி விடைபெறுவேன்.

கற்பனை உலகில் சிறிது நேரம் என்னோடு கைகோர்த்துப் பறந்தீர்கள்; அனைவருக்கும் என் நன்றி! வணக்கம்.

 

Post a Comment

Previous Post Next Post