வழுநிலை வழாநிலை வழுவமைதி என்றால் என்ன

வழுவற்ற வாக்கிய அமைப்பு

வழுவற்ற வாக்கிய அமைப்பு என்பது தமிழ் இலக்கணத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். நாம் வாக்கியங்களை அமைக்கும் போது அவை வழுவற்றவையாக இருப்பது அவசியம். சரியான முறையில் அமைக்கப்பட்ட வாக்கியம் தான் கருத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்தும். வாக்கியங்களில் திணைவழு, பால்வழு, காலவழு, எண்வழு, இடவழு போன்ற பிழைகள் இல்லாமல் அமைவது மிகவும் முக்கியம். இவ்வழுக்கள் உள்ளபோது கருத்து மாறுபடவும் குழப்பம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே எழுவாய் மற்றும் பயனிலை இடையிலான பொருத்தம் சரியாக இருக்க வேண்டும். பாலம், எண், காலம் ஆகியவற்றில் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இலக்கண விதிகளைப் பின்பற்றி வாக்கியங்களை அமைத்தால் மொழியின் அழகும் தெளிவும் அதிகரிக்கும். ஆகையால் வழுவற்ற வாக்கிய அமைப்பு நல்ல மொழிப் பயன்பாட்டிற்கும் தெளிவான தொடர்பாடலுக்கும் அடிப்படையாகும்.

வழுநிலை வழாநிலை வழுவமைதி என்றால் என்ன
 வழுநிலை வழாநிலை வழுவமைதி 


திணைவழு

எழுவாய் உயர்திணையாக வருமிடத்துப் பயனிலையும் உயர்திணையாக அமைதல் வேண்டும். அதேபோல் எழுவாய் அஃறிணையாயின் பயனிலையும் அஃறிணைத் தன்மை கொண்டிருத்தலே முறை.

உதாரணமாக:

  • அவன் நல்லன் அல்லது அவன் நல்லவன் (உயர்திணை)
  • அது நல்லது (அஃறிணை)

இவற்றை மாற்றி 'அவன்' என்ற உயர்திணை எழுவாயுடன் 'நல்லது' என்ற அஃறிணைப் பயனிலையையோ, 'அது' என்ற அஃறிணை எழுவாயுடன் 'நல்லவன்' என்ற உயர்திணைப் பயனிலையையோ இணைத்து வாக்கியம் அமைக்க முயல்வது நகைப்புக்கிடமாகும்.

ஏற்கத்தக்க திணைவழுக்கள் (திணை வழுவமைதி)

எவ்வாறெனினும் சில திணைவழுக்கள் நடைமுறையில் ஏற்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்துகொள்ளல் நன்று.

உதாரணமாக:

  • குழந்தை அழுகிறது. (குழந்தை உயர்திணைச் சொல்; அழுகிறது அஃறிணை வினைமுற்று.)
  • தெய்வம் காக்கிறது. (தெய்வம் உயர்திணை; காக்கிறது அஃறிணை)

குழந்தை, பிள்ளை, சிசு, தெய்வம் என்பவை உயர்திணைச் சொற்களாயினும் மனநெகிழ்வு காரணமாகவோ என்னவோ அவற்றுடன் அஃறிணை வினைமுற்றுகளை இணைத்துக் கூறுவது மரபாகிவிட்டது. அவற்றை மக்கள் தங்கள் உடைமைகளாகக் கருதும் மனோபாவமாகவும் இருக்கலாம்.

  • பப்பி நன்றாக விளையாடுகிறான். (பப்பி - நாய் - அஃறிணை; விளையாடுகிறான் - உயர்திணை).
  • இலட்சுமி வீடு திரும்பிவிட்டாள். (லட்சுமி - பசு - அஃறிணை; திரும்பிவிட்டாள் - உயர்திணை).

இங்கே அன்பின் காரணமாகப் பப்பி என்ற நாயும் இலட்சுமி என்ற பசுவும் உயர்திணை வினைமுற்றுகளைப் (பயனிலை) பெற்றிருக்கின்றன.

  • காளையும் விவசாயியும் மாலையில் களைத்து வீடு திரும்பினர்.

இவ்வாக்கியத்தில் உழைப்பின் பெருமை காரணமாக விவசாயிக்கு உதவிய காளையும் உயர்திணை வினைமுற்றைப் பெறுகின்றது.

  • மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.

இவ்வாக்கியத்தில் செய்கையின் இழிவுத்தன்மை காரணமாக மூர்க்கன் முதலையுடன் இணைக்கப்பட்டு அஃறிணை நிலைக்குத் தள்ளப்படுகிறான். எனவே இவ்வாக்கியம் அஃறிணைப் பன்மை வினைமுற்றான "விடா" என்ற பயனிலையில் நிறைவு பெறுகிறது.

 

பால்வழு

தமிழ்ச் சொற்களைப் பொறுத்தவரையில் வினைமுற்றுகளைக் கொண்டு பால், திணை, எண், இடம், காலம் என்பவற்றைத் துல்லியமாகக் கூறிவிடமுடியும். அது எமது மொழிக்குள்ள சிறப்புகளில் ஒன்று.

உதாரணமாக, "வென்றான்" என்ற வினைமுற்றை நோக்குவோமானால் அது ஆண்பால், உயர்திணை, ஒற்றைமனிதன், படர்க்கை, இறந்தகாலம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது இலக்கணம் கல்லார்க்கும் தெரிந்த உண்மை. எனவே பால்வழு நேராமல் எழுதுதல் மொழிக்குச் சிறப்புத் தரும்.

  • "அக்கா வந்தாள்; தம்பி விளையாடுகிறான்." என எழுதவேண்டிய வாக்கியங்களை,
  • "அக்கா வந்தான்" என்றோ "தம்பி விளையாடுகிறாள்" என்றோ எழுதுதல் தகாது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

ஏற்கத்தக்க பால்வழுக்கள் (பால் வழுவமைதி)

ஆயினும், சில பகுதிகளில் பேச்சுமொழியிலும், பேச்சைச் சுட்டுகின்ற எழுத்து மொழியிலும் பால் வழு ஏற்கத்தக்க வகையில் கையாளப்படுகின்றது என்பதை அறிந்திருத்தல் பயனுடையதாகும்.

பல வீடுகளிற் பெரியவர்கள் ஆண்பிள்ளைகளுக்கு "கெதியாக வாடி," "ஓடிப்போடி," "அதை எடி," "கவனமாகப் படியடி" என்றெல்லாம் பெண்பால் சொற்களைப் பயன்படுத்துவதும், பெண்கள் விடயத்தில் மறுதலையாக "கெதியாக வாடா," "ஓடிப்போடா" என ஆண்பாற் சொற்களைப் பயன்படுத்துவதும் கண்கூடு. இவை அன்பின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. அநேகமாக இத்தகைய வாக்கியங்கள் முன்னிலை ஏவல்களாகவே அமைகின்றன. இலக்கண நூலார் இவற்றை ஏற்கும் காலம்வரை இப்பேச்சுவழக்கு நடைமுறை பால்வழுக்களின் பாற்படும் என்பதை மறவற்க.

  • "அப்பா இப்போதுதான் எங்கோ போயிருக்குது; அது அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் வீட்டுக்கு வரும்."
  • "அம்மா பாவம்.. சுகமில்லாத நேரத்திலும் சமைக்குது..."

போன்ற வாக்கியங்கள் பேச்சுமொழியில் அஃறிணை ஒன்றன்பாற் சொற்களில் நிறைவு பெறுகின்றன என்பதையும் நடைமுறையில் அவதானிக்கலாம். இவ்விரு வாக்கியங்களும் இலக்கணமுறையிற் திணைவழு, பால்வழு என்பவற்றைக் கொண்டிருக்கின்றன போதிலும் பேச்சுவழக்கில் அவை சரியென ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

 

காலவழு

காலவழு பொதுவாகக் குழந்தைகளின் பேச்சுமொழியில் வரும்போது அதைக் கேட்கும் பெரியவர்கள் மகிழ்ச்சியடைவது இயல்பு. குழந்தை, "அப்பா நாளைக்கு வந்தார்" என்றோ "அப்பா நேற்று வருவார்" என்றோ மழலை மொழியிற் பேசிவிட முடியும். பெரியவர்களும் அவற்றை இரசித்துப்பொகுளை விளங்கிக் கொள்வார்கள். பிள்ளையின் பேச்சுத் திறனையும் வளர்ப்பார்கள்.

ஆனால் வளர்ந்தவர்கள் இத்தகைய வழுக்களை விட்டால் அவை நகைப்புக்குரியனவாகிவிடும். எனவே பெரியவர்கள் காலவழுவின்றி பேசுதலும் எழுதுதலும் மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இறந்தகால நிறை வாக்கியங்கள்:

  • தம்பி சாப்பிட்டான்.
  • நான் நேற்று வந்தேன்.
  • அவன் பந்து விளையாடினான்.

இவ்வாக்கியங்கள் மூன்றும் நிறைவான பொருளைத் தருகின்றன. வாக்கியம் தோன்றியதன் பணியும் நிறைவுற்று விட்டது. சொல்லப்பட வேண்டியவை தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. இவ்வகை வாக்கியங்கள் இலகுவானவை; பிழையற அமைப்பதும் எளிது.

இறந்தகாலத் தொடர்நிலை வாக்கியங்கள்

  • தம்பி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
  • நான் நேற்று வந்து கொண்டிருந்தேன்.
  • அவன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

இவ்வாக்கியங்கள் நிறைவானவை போற் தோற்றமளித்தாலும் ஏதோ ஒரு செய்தியை அவை மறைத்துக் கொண்டிருக்கின்றன என்பது உன்னிப்பாக நோக்கின் புரியும்.

 

வழுநிலை வழாநிலை வழுவமைதி என்றால் என்ன
 வழுநிலை வழாநிலை வழுவமைதி 

செயல்பாட்டு விளக்கம்

"தம்பி நேற்றுச் சாப்பிட்டான்" என்று அமையத்தக்க வசனம் "தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்" என அமைவதன் காரணத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். "தம்பி சாப்பிட்டான்" என்பதுடன் வேறெச்செயலும் தொடர்புபட வாய்ப்பில்லை. ஆனால், "தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்" எனுமித்து "நான் வரும்போது தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்" என்றோ, "நேற்றுக்காலை எட்டு மணிக்குத் தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்" என்றோ சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

எனவே, வினைச்சொல் வினைமுற்றாகி நிறைவுறாமல், வந்து, விளையாடி என வினையெச்சச் சொற்களாகி "கொண்டு" என்ற துணைவினையையும் சேர்த்து வாக்கியத்துக்குப் புதுவடிவம் தருகின்றன. வேறொரு நிகழ்வுடன் தொடர்பு படும்போது இத்தகைய வாக்கியங்கள் உருவாவது இயல்பு.

நிகழ்கால நிறை வாக்கியங்கள்:

  • மாலா படிக்கிறாள்.
  • அம்மா உணவு சமைக்கிறாள்.
  • அப்பா வேலைக்குப் போகிறார்.

இந்த மூன்று வாக்கியங்களும் நிகழ்காலத்தைக் குறிப்பனவாயினும் செயல் இப்போது நடைபெறுகிறது என்பதற்கான அழுத்தங்களைக் கொண்டிருக்கவில்லை. இவை வழமையான செயலைக் குறிக்கவும் பயன்படுகின்றன என்பது தெளிவு.

நிகழ்காலத் தொடர்நிலை வாக்கியம்:

  • மாலா படித்துக் கொண்டிருக்கிறாள்.
  • அம்மா உணவு சமைத்துக் கொண்டிருக்கிறாள்.
  • அப்பா வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.

இவ்வாக்கியங்கள் நிகழ்காலத்தில் அச்செயல் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றன. செயல்கள் இடம்பெறுகின்றன; ஆனால் நிறைவு பெறவில்லை என்ற கருத்து இவற்றில் மேலோங்கி நிற்கின்றன.

 

எதிர்கால நிறை வாக்கியங்கள்:

  • மாலா படிப்பாள் (மாலா நாளைக்காலை படிப்பாள்).
  • அம்மா உணவு சமைப்பார் (அம்மா இன்னும் சற்றுநேரத்தில் உணவு சமைப்பார்).
  • அப்பா வேலைக்குப் போவார் (அப்பா உடல்நிலை தேறியதும் வேலைக்குப் போவார்).

எதிர்காலத் தொடர்நிலை வாக்கியங்கள்:

  • மாலா படித்துக் கொண்டிருப்பாள்.
  • அம்மா உணவு சமைத்துக் கொண்டிருப்பாள்.
  • அப்பா வேலைக்குப் போய்க் கொண்டிருப்பார்.

 

கால வழுவமைதி (ஏற்கத்தக்க காலமாற்றம்)

எவ்வாறெனினும் வாக்கியங்கள் தாம் சொல்லவந்த கருத்தைத் தெளிவாக உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டவை. குறிப்பாகக் காலவழு விடயத்தில் வாக்கியங்கள் சற்று நெகிழ்ச்சித்தன்மையைக் கொண்டிருக்கின்றன.

"நான் எதிர்வரும் ஞாயிறன்று கொழும்புக்குப் போகிறேன்: நீயும் வருகிறாயா?" என்ற வாக்கியம் தற்காலத்தில் இலக்கணப் பிழையற்றதாகவும் எதிர்கால நிகழ்வைக் கூறுவதாகவும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாக்கியம் "போகிறேன்" என்ற வினைமுற்றுக்குப் பதிலாகப் "போகவுள்ளேன்" என்ற வினைமுற்றையும், "வருகிறாயா?" என்ற வினாச்சொல்லுக்குப் பதிலாக "வருவாயா?" என்ற வினாவமைப்பையும் கொண்டிருத்தலே முறையானதாகும். எனினும் மொழியின் வளர்ச்சி கருதி தற்கால நடைமுறைகளும் ஏற்கத்தக்கனவாக அமைந்திருக்கின்றன என்பது நோக்கத்தக்கது.

 

எண்வழு

எண்வழுவற்ற வாக்கியம் அமைத்தல் என்பது ஒருமை, பன்மை என்பவற்றிற் கவனமெடுத்து வாக்கியம் அமைத்தலாகும். அவ்வாறு வாக்கியம் அமைக்கும்போது ஒருமையிற் தொடங்கும் வாக்கியத்தின் நிறைவு ஒருமைப் பயனிலையாகவும் பன்மையிற் தொடங்கும் வாக்கிய நிறைவு பன்மைப் பயனிலையாகவும் இருத்தல் அவசியம். இவ்விதி தவறின் அஃது எண்வழுவின் பாற்படும்.

ஒருமை வாக்கியங்கள்:

  • தம்பி வந்தான்.
  • மாடு மேய்கிறது.
  • வேணி அழகாக நடனமாடினாள்.

பன்மை வாக்கியங்கள்:

  • தம்பியும் தங்கையும் வந்தனர்.
  • மாடுகள் மேய்கின்றன.
  • வேணியும் இலக்கியாவும் நடனமாடினர்.

 

எழுவாய் மற்றும் பயனிலை இயைபு

1.     நான் அவளுடன் சென்றேன்.இதில் "நான்" என்பது எழுவாயாக இருப்பதால் "சென்றேன்" என்ற தன்மை ஒருமை வினைமுற்றில் அது நிறைவுறுகிறது.

2.     நானும் அவளும் சென்றோம்.இதில் எழுவாய் "நானும் அவளும்" என்பதாகும். எனவே, வாக்கியம் தன்மைப் பன்மை வினைமுற்றில் முடிவுறுகிறது.

3.     நீயும் அவளும் நன்றாகப் பாடினீர்கள்.இதில் முன்னிலைச் சொற்கள் வருவதால் "பாடினீர்கள்" என்ற முன்னிலைப் பன்மை வினைமுற்றில் நிறைவடைகின்றன.

4.     சோழன் அணியுடன் சேரன் அணி மோதிக்கொண்டது.எழுவாய் "சேரன் அணி" என ஒருமையில் வருவதால் ஒருமைக்குரிய வினைச்சொல்லைக் கொண்டு முடிகிறது. (அணி என்பது அஃறிணை ஒருமைச்சொல்).

5.     சோழன் அணியினரும் சேரன் அணியினரும் மோதிக்கொண்டனர். – "அணியினர்" என்பது உயர்திணைப் பன்மைக்கு ஏற்ப உயர்திணைப் பன்மையிலேயே முடிந்துள்ளது.

'அணி' என்ற சொல் பலர்கூடிய ஒருமைப்பைக் குறிப்பதால் அது அஃறிணையின் பாற்படுகிறது. படை, கூட்டம், குழு, வகுப்பு என்பவையும் இவ்வகையினவே. எனினும் அணியினர், படையினர் என மாற்றியமைக்குமிடத்து அவை மனிதர்களையே குறிப்பிடுவதால் உயர்திணைச் சொற்களாகவும் பன்மைத் தன்மை கொண்டவையாகவும் மாற்றமடைகின்றன.

 

இடவழு

இடம் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும்.

  • தன்மை: தன்னை அல்லது தம்மைக் குறித்துப் பேச்சு எழும்போது அது தன்மை எனப்படும். தன்மைச் சொல் எழுவாயாக அமையின் பயனிலை வினைச்சொல்லும் தன்மையாகவே அமையும்.
  • முன்னிலை: எதிரே நிற்பவரை அல்லது நிற்பவர்களை நோக்கி வசனம் அமையும்போது அது முன்னிலை எனப்படும்.
  • படர்க்கை: நான், நீ அல்லாத பிற எழுவாய்கள் அனைத்தும் படர்க்கை வகையைச் சாரும்.

இடவழுவற்ற வாக்கிய உதாரணங்கள்:

  • நானும் அவனும் சென்றோம்: எழுவாய் பன்மையைக் குறிக்கிறது. "நான்" என்ற தன்மைச்சொல் எழுவாயில் வருவதால் முடிவுச்சொல் தன்மையில் அமையவேண்டியது நியதி.
  • நானும் நீயும் சென்றோம்: "நான்" என்ற தன்மைச் சொல் வந்திருப்பதால் பயனிலை தன்மையிலேயே அமையும்.
  • நீ அவனுடன் சென்றாய்: "நீ" என்பதே எழுவாயாக வருகிறது. எனவே பயனிலை "சென்றாய்" என்ற முன்னிலை வினையில் அமைந்துள்ளது.
  • நீயும் அவனும் சென்றீர்கள்: "நீயும் அவனும்" எழுவாயாக வருவதால் "சென்றீர்கள்" என்ற முன்னிலைப் பன்மையில் வசனம் நிறைவுறுகிறது. "அவனும்" என்பதைவிட "நீயும்" என்பதே எழுவாய்க்குள் சிறப்பிடம் பெறுகிறது.
  • உன்னுடன் அவன் வந்தான்: வாக்கியத்தின் எழுவாயாக "அவன்" என்பதே வருவதால் வசனமும் படர்க்கை வினைமுற்றான "வந்தான்" என்பதில் நிறைவாகிறது.    



தமிழ் இலக்கணத்தில் வழுவற்ற வாக்கிய அமைப்பின் முக்கியத்துவம்.

தமிழ் மொழியின் சிறப்பே அதன் இலக்கணத் துல்லியம் தான். ஒரு வாக்கியத்தை அமைக்கும்போது திணை, பால், எண், இடம் மற்றும் காலம் ஆகிய ஐந்து கூறுகளிலும் பிழையின்றி அமைப்பதே 'வழுவற்ற வாக்கியம்' எனப்படுகிறது. நாம் பேசும்போதும் எழுதும்போதும் இத்தகைய வழுக்களைத் தவிர்ப்பது, நாம் சொல்ல வரும் கருத்தை மற்றவர்களுக்குத் துல்லியமாகவும் நகைப்புக்கு இடமின்றியும் கொண்டு சேர்க்க உதவுகிறது.

திணை மற்றும் பால் அடிப்படையில் வழுக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதன் மூலம், உயர்திணை மற்றும் அஃறிணைக்கு இடையேயான வேறுபாட்டைத் தெளிவுபடுத்தலாம். இருப்பினும், 'வழுவமைதி' என்ற இலக்கண விதிமுறை, சில நேரங்களில் பிழைகளைத் தழுவிக்கொள்ளும் மொழியின் நெகிழ்ச்சித்தன்மையைக் காட்டுகிறது. உதாரணமாக, மிகுந்த அன்பு அல்லது மனநெகிழ்வு காரணமாக ஒரு நாயையோ அல்லது மாட்டையோ உயர்திணையாக விளிப்பது (எ.கா: பப்பி விளையாடுகிறான்) தமிழில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது மொழியின் உணர்வுப்பூர்வமான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது.

காலம் மற்றும் எண் குறித்த புரிதல், வாக்கியங்களின் காலவோட்டத்தை முறைப்படுத்துகிறது. குறிப்பாக, இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தொடர்நிலை வாக்கியங்கள் ஒரு செயலின் முற்றுப்பெறாத தன்மையை அல்லது மற்றொரு செயலோடு அதற்குள்ள தொடர்பை நுணுக்கமாக விளக்குகின்றன. அதேபோல், இடவழு குறித்த தெளிவு, தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை ஆகிய இடங்களில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையிலான இயைபை உறுதி செய்கிறது.

முடிவாக, மொழியின் வளர்ச்சி கருதி தற்கால நடைமுறையில் சில வழுவமைதிகள் (எ.கா: "நாளை கொழும்புக்குப் போகிறேன்") ஏற்கப்பட்டாலும், அடிப்படை இலக்கண விதிகளை அறிந்து வைத்திருப்பது ஒருவரின் மொழிப்புலமையை வளர்க்கும். இத்தகைய இலக்கண நுணுக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், குழப்பங்களற்ற, தெளிவான மற்றும் ஆழமான தமிழ் நடையை நம்மால் உருவாக்க முடியும்.

 

Post a Comment

Previous Post Next Post