இடைச்சொற்கள் என்பவை அடிப்படையில் பகுக்கப்பட முடியாதவை. அதாவது, இவற்றை ஒரு பகுபதத்தைப் போலப் பிரித்து உறுப்பிலக்கணம் காண இயலாது. இதன் காரணமாகவே இவை இலக்கண வகைப்பாட்டில் எப்போதும் பகாப்பதங்கள் என்ற பகுதிக்குள் அடங்கி விடுகின்றன. ஒரு மொழியின் வேர்ச்சொற்களோடு இணைந்து, அவற்றின் பொருளை முழுமைப்படுத்துவதே இச்சொற்களின் முதன்மைப் பணியாகும்.
![]() |
| இடைச்சொற்கள் |
இடைச்சொற்கள்
தனித்து இயங்கும் தன்மையற்றவை. இவை பெயராகவோ அல்லது வினையாகவோ இல்லாமல்,
அவற்றுடன் இணைந்து நின்று செயல்படுகின்றன. அவ்வாறு
இணையும்போது:
இடைச்சொற்கள்
தனித்து இயங்கும் தன்மையற்றவை. இவை பெயராகவோ அல்லது வினையாகவோ இல்லாமல்,
அவற்றுடன் இணைந்து நின்று செயல்படுகின்றன. அவ்வாறு
இணையும்போது:
· பெயர்ச்சொற்களினதும்,
வினைச்சொற்களினதும் வலிமையை அதிகப்படுத்துகின்றன.
· வாக்கியத்தின்
ஒட்டுமொத்தப் பொருள் விளங்க வைக்கும் பணிகளைச் செம்மையாகச் செய்கின்றன.
உதாரணமாக,
வேற்றுமை உருபுகள், உவம உருபுகள், மற்றும் 'ஏ', 'ஓ', 'உம்' போன்ற இடைநிலைகள் வாக்கியத்தின் அர்த்தத்தை
மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவை.
இடைச்சொற்களின்
தனித்துவமான பண்பு என்னவென்றால், இவை தனித்து
நிற்கும்போது பொருள் தருவதில்லை. ஒரு பெயருடனோ அல்லது
வினையுடனோ சேரும்போது மட்டுமே இவை அர்த்தம் பெறுகின்றன. "உம்" அல்லது
"ஐ" என்று தனியாகச் சொன்னால் பொருள் விளங்குவதில்லை; ஆனால் "அவனும்", "புத்தகத்தை"
என்று சொல்லும்போது அவை முழுமையான அர்த்தத்தைத் தருகின்றன. சுருக்கமாகச் சொன்னால்,
இடைச்சொற்கள் என்பவை மொழியை இணைக்கும் 'மின்சாரக்
கம்பிகளைப்' போன்ற ஒரு கருவியாகும்.
இடைச்சொற்களின் பணி
இடைச்
சொற்கள் இல்லையேல் பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் ஏறத்தாழ,
செயலற்றுப் போய்விடுகின்றன என்பது ஒப்புக் கொள்ளத்தக்க உண்மை. பெயர்
அல்லது வினைச் சொற்களைச் சொல்லவந்த கருத்துக்கேற்பத் தயார்படுத்துவதும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதும் இடைச்சொற்களின்
பணிகளாகின்றன. இதன்படி ஒரு சொல்லின் பகுதி தவிர்ந்த அனைத்து ஒட்டுகளும்
இடைச்சொற்களே என்பது தெளிவான முடிவாகும்.
நடந்தான்
என்ற வினைச்சொல்லை எடுத்துக்கொண்டால் நட என்ற வினையடியைத் தவிர்ந்த அனைத்து
இணைவுகளும் இடைச்சொற்கள் சார்ந்தவையே. கூனி என்ற பெயரை நோக்கின் கூன்
எனும் அடிச் சொல்லுடன் இணைந்து வரும் விகுதி "இ" இடைச்சொல்லாகும்.
காலங்காட்டும் ஒட்டுகள் தொடர்புகளுக்கு வசதிசெய்யும் வேற்றுமைகள் எல்லாம்
இடைச்சொற்களாகின்றன.
பகுதி விகுதி
ஒரு
பதத்தைப் பிரிப்பதார் பெறக்கூடிய மிகக்குறைந்த பிரிவுகள் பகுதி,
விகுதி எனலாம். விகுதியை வைத்து உயர்திணை, அஃறிணை,
ஆண்பால், பெண்பால், பலர்பால்,
ஒன்றன்பால், பலவின்பால் என்பவற்றைத் தெரிந்து
கொள்ள முடிகிறது. அதாவது, இருதிணையையும் ஐம்பாலையும்
விகுதியாக வருகின்ற இடைச்சொற்களே அடையாளங் காட்டுகின்றன.
விகுதி
அவன்
என்ற பதத்தை எடுத்தால் அப்பதம், அ-அன் எனவாகிறது. "அ" என்ற பகுதி இடத்தைச் சுட்டுகின்ற எழுத்து என்பதை அறிவோம். அன் எனும்
விகுதி உயர்திணையைக் குறிக்கிறது. ஆண்பால் எனவும் காட்டுகிறது. அவள் என்ற
பதத்தின் பிரிவுகளான (அ-அள்) "அ" இடத்தையும், "அள்" பெண்பால் உயர்திணையையுங் காட்டுகிறது. நடந்தான் அல்லது நடந்தாள்
என்ற வினைமுற்றில் வருகின்ற "ஆன்"
"ஆள்" என்பவையும் இத்தகையனவே.
இவ்வாறே
அவர் என்பதைக் கொண்டால் "அர்"
என்பது உயர்திணையையும் பலர்பாலையும் காட்டும் விகுதி. இன்றைய தமிழில் இவ்விகுதி
பால்வெளிப்படுத்தாத உயர்திணையாகக் கொள்ளப்படுவதால், அவர் என்ற பதத்துடன் அஃறிணைப் பன்மை விகுதியான "கள்" சேர்த்து அவர்கள் என்கிறோம். இப்பதத்தில்
அ-அர்-கள் (அவர்கள்) என ஒரு பகுதியும் இரு விகுதிகளும் காணப்படுகின்றன.
முந்தைய நாள்களில் அவர் என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களையோ, பெண்களையோ, அல்லது இருசாராரையுமோ புலப்படுத்தியது.
காலப்போக்கில் "அர்" என்பது
மதிப்புக்குரியவரைக் குறிக்கும் விகுதியாகக் கொள்ளப்பட, மதிப்புக்குரிய
பலரை ஒருமித்து அடையாளப்படுத்துவதற்கு "கள்" விகுதி இணைக்கப்பட்டு அவர், அவர்கள் ஆயிற்று.
எனினும்
பெற்றோர், பெரியோர், மூத்தோர், தந்தையர், சென்றனர்,
நடந்தனர் போன்ற சொற்கள் "கள்" விகுதி பெறாமலேயே பன்மைத்
தன்மையுடன் வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல்,
"மார்" எனும் இடைச்சொல்லும்
மரியாதை விகுதியாக வழங்கப்படுகிறது. தாய்மார், மந்திரிமார்,
மாமன்மார், அண்ணன்மார், ஆசிரியர்மார் எனப் பயன்படுத்தப்படுவதோடு, பிறமொழிச் சொற்களுடன்
இணைக்கப்பட்டு டாக்டர்மார், எஞ்சினியர்மார்,
டெக்னிஷியன்மார் என்றும்
பயன்படுத்தப்படுகிறது. இவ்விடைச்சொல் உயர்திணைக்குரிய பன்மைத்தன்மையைக்
கொண்டிருக்கிறது.
"காரன்" என்ற விகுதி
பிற்காலத்தில் உருவாக்கப்பட்டு பலவிதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. காரன் எனும்
பதம் "அன்" என்ற துணைவிகுதியை
உள்ளடக்கி இருப்பதால் அது ஆண்பால் உயர்திணையைக் குறிக்க,
"இ" என்ற பெண்பால் விகுதி
இணைக்கப்பட்டு "காரி"
எனவாகிப் பெண்பால் உயர்திணையைக் குறிக்கப் பயன்படாயிற்று. மற்றெல்லா
விகுதிகளையும்விட, காரன், காரி
விகுதிகள்தாம் அதிக சொற்களுடன் இணைகின்றன எனக் கொள்ளவும் இடமுண்டு.
காவற்காரன், சமையற்காரி, வேலைக்காரி, வீட்டுக்காரன், மீன்காரன், வெள்ளைக்காரன், இந்திக்காரன் எனத் தமிழ்ச்சொற்களிற் தொடங்கி, பொலிஸ்காரன், ஆமிக்காரன், நேவிக்காரன், டெலிபோன்காரன், கேபிள்காரன், றெயில்வேக்காரன் எனப் பிறமொழிச் சொற்களுடனும் தடங்கலின்றி "காரன், காரி" என்பவை இணைந்து செயற்படுவதைக் காணலாம். காரர் எனும் விகுதி பன்மை உயர்திணையைக் குறிக்கப் பயன்படுவதையும் கவனிக்கலாம்.
இதேபோல்,
தாய்க்காரி, தகப்பன்காரன், அண்ணன்காரன், தங்கைக்காரி, புருஷன்காரன்,
மாமன்காரன் போன்ற வேண்டாத இணைப்புகளும்
விரவிக்கிடக்கின்றன. இவை தமிழுக்குத் தீங்கு தருபவையாகும். எனவே உறவு முறைகளுடன்
காரன், காரி விகுதிகளின் இணைப்பைத் தவிர்த்தல் தமிழறிந்தோர்
கடமையாகும்.
அஃறிணை விகுதிகள்
அஃறிணை
விகுதிகளான "து"
ஒன்றன்பாலையும், "வை" "ன" என்பவை பலவின்பாலையும் சுட்டும் இடைச்சொற்களாகும். அது,
இது, வந்தது, நின்றது போன்ற சொற்களையும், அவை, இவை,
நின்றன, ஓடின போன்ற
சொற்களையும் பிறவற்றையும் இவற்றுக்கு உதாரணமாகக் காட்டலாம்.
விகுதிகளின் வகைகள்
1. பெயர்
விகுதிகளாக: அன், ஆன்,
மன், மான், ன், அள், ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அர், வை, தை, கை, பி, முன், அல் என்பனவும்,
2. தொழிற்பெயர்
விகுதிகளாக: தல், அல்,
அம், ஐ, கை, வை, கு, பு, உ, வி, சி, தி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்பனவும்,
3. பண்புப்பெயர்
விகுதிகளாக: மை, ஐ,
சி, பு, உ, கு, றி, று, அம், நர் என்பனவும்,
4. குறிப்பு
வினைமுற்று விகுதிகளாக: அன்,
ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஓம், ஐ, ஆய், இ, இர், ஈர் என்பனவும்,
5. தெரிநிலைவினைப்
பெயரெச்ச விகுதிகளாக: அ,
உம் என்பனவும்,
6. குறிப்புவினைப்
பெயரெச்ச விகுதியாக: அ வும்,
7. தெரிநிலை
வினையெச்ச விகுதிகளாக: இ,
உ, பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்பனவும்,
8. குறிப்பு
வினையெச்ச விகுதிகளாக: அ,
றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து என்பனவும்,
9. பிறவினை
விகுதிகளாக: வி, பி,
கு, சு, டு, து, பு, று என்பனவும்,
எனினும்,
இவ்வாறு விகுதிகள் நூற்றுக்கணக்காக இருப்பதுபற்றித் தமிழ் மாணவர்
எவரும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் இவற்றை நாம் பேச்சு வழக்கிலும்
எழுத்துநடையிலும் எம்மையறியாமல் அன்றாடம் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டுதான்
வருகிறோம். நாம் பிரித்து அடையாளம் காட்டாமற் பயன்படுத்துகிறோம்; இலக்கணநூலார் மொழிவளங்கருதி நுணுக்கமாக அவதானித்து அவற்றுக்கு அடையாளம்
தந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.
இடைநிலை
ஒரு
பகுபதத்தில் பகுதி, விகுதி என்பவற்றுக்கு
அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பவை இடைநிலைகளாகும். விகுதியானது திணை, பால் எண், இடம் என்பவற்றைக் காட்டுவதுபோல் வினைச்
சொற்களுடன் இணைந்துவருகின்ற இடைநிலைகள் காலத்தைக் காட்டுகின்றன. பெயர்ச்
சொற்களிடையே வருகின்ற இடைநிலைகள் காலங்காட்டுவதில்லை. இவற்றின் தன்மையைக் கொண்டு
அறிஞர்கள் மூவகைப் படுத்தியுள்ளனர். அவை பெயர் இடைநிலை, வினை
இடைநிலை, எதிர்மறை இடைநிலை என்பவையாம்.
பெயர் இடைநிலைகள்
இவை
பெயர்ச்சொற்களின் பகுதி, விகுதிகளுக்கு இடையே
வருகின்றதெனினும் காலங்காட்டுவதில்லை. உதாரணமாக, அறிஞன்,
வலைஞன், சுவைஞன் என்பவற்றில் வருகின்ற "ஞ"
கர மெய் இடைநிலை எனப்படுகிறது. அதேபோல் வலைச்சி என்ற பகுபதத்தில் வருகின்ற "ச்",
குறத்தி, வண்ணாத்தி ஆகிய பகுபதங்களிடையே
வருகின்ற "த்" என்பன இடைநிலைகளாகும். இவை உண்மையில் இடைநிலைச்
சொற்கள்தாமா என்ற மயக்கம் எழுவதற்கும் வாய்ப்பு இல்லாமலில்லை. இவை தனியெழுத்தாக
அமைவதும், உடம்படு மெய்போல் தோற்றமளிப்பதும் இத்தகைய
மயக்கத்துக்கு ஏதுவாகின்றன. உடம்படு மெய் என்பது வேறு; இடைநிலை
என்பது வேறு என்பதை தெளிவுற உணர்ந்தால் மயக்கம் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. இது
புணரியல் தொடர்பான விதிகளைச் சார்ந்ததாகும்.
"அறி" எனும் பகுதியும் "அன்" எனும் ஆண்பால் விகுதியும்
இணையுமாயின், இலக்கணநூல் விதிப்படி "ய" கர மெய்யே
தோன்றும். இதன்படி அரியன் என்றே இணைவு உருவாகும். இதேபோல் ஏனைய சொற்களும் வலையன்,
கலையன், சுவையன் என்றே தோற்றம்பெறும்.
இதேவழியில் வலைச்சி, குறத்தி, வண்ணாத்தி
போன்ற பதங்களை எடுத்துக்கொண்டால் பெண்பால் விகுதியான "இ" வந்து இணையுமிடத்து
அச் சொற்கள் முறையே வலையி, குறவி வண்ணாயி என்றே மாற்றம்
பெறும்.
ஆனால் பகுதியுடனோ
விகுதியுடனோ எந்தத் தொடர்பும் இல்லாத ஞகரமெய், சகரமெய்,
தகரமெய் என்பவற்றை ஏற்று அவை இணைவதால், அவற்றால்
ஏற்கப்படுகின்ற எழுத்துகளை இடைநிலைச் சொற்கள் என்பர் இலக்கணஅறிஞர்.
வினை இடைநிலைகள்
வினை இடைநிலைகள்
காலங்காட்டும் இயல்புடையன. இதற்கேற்ப இவற்றை இறந்தகாலவினை இடைநிலைகள்,
நிகழ்காலவினை இடைநிலைகள், எதிர்காலவினை
இடைநிலைகள் என மூவகைப் படுத்தலாம்.
இறந்தகாலவினை
இடைநிலைகள்
இறந்தகால
வினை இடைநிலைகளாகத், ட், ற்,
இன் என நான்கும் கொள்ளப்படுகின்றன. இவ்விடை நிலைகளை ஏற்பதனால்
மட்டுமே வினைச்சொற்கள் இறந்தகாலத்தைத் தெரிவிக்கும் இயல்பைப் பெறுகின்றன.
உதாரணமாக
செய்
- த் - ஆன், கொய் - த் - ஆள் என்பவற்றை நோக்கினால்,
செய், கொய் என்பவை பகுதிகளாகவும், ஆன், ஆள் என்பவை ஆண்பால், பெண்பால்
விகுதிகளாகவும் அமைய இவற்றை இணைத்துக் காலங்காட்டும் இடைநிலையாகத் "த்"
செயற்பட்டிருக்கிறது.
உண் - ட் - ஆன், கண் - ட் - ஆன் ஆகிய சொற்கள் முறையே உண்டான், கண்டான்
என உருவாகி இறந்தகாலத்தைத் தருவதற்கு "ட்"காலங்காட்டும் இடைநிலையாகச்
செயற்பட்டிருக்கிறது.
இதேபோல்,
தின்றான் என்ற பகுபதத்தில் தின்-ற்-ஆன் என "ற்" இடைநிலையாகவும்,
பாடினான், ஓடினான் போன்ற சொற்களில்
பாடு-இன்-ஆன், ஓடு-இன்-ஆன் என "இன்"
இடைநிலையாகவும் நின்று காலங்காட்டும்.
போனான்
(போ-ன்-ஆன்) என்ற பதத்தில் "இன்" இடைநிலைக்கு இகரம் குறைந்து "ன்"
என்பது மட்டுமே இடைநிலையாகிறது. அதேபோல் போயது என்ற இறந்தகாலம் காட்டும் பதத்தில் "ய்"
இடைநிலையாகச் செயல்படுவதையும் அவதானிக்கலாம். எனினும் இவை அரிதான நடைமுறைகள்
என்பது கவனிக்கத்தக்கது.
நிகழ்கால வினை
இடைநிலைகள்
கின்று,
கிறு, ஆநின்று எனமூன்றும் நிகழ்கால வினை
இடைநிலைகளாம். வருகின்றனன், போகின்றான், நிற்கின்றாள், செல்கின்றது, மேய்கின்றன
போன்ற நிகழ்காலச் சொற்களில் "கின்று" இடைநிலையாக நிற்பதை உணரலாம்.
(வரு-கின்று-ஆன், போ-கின்று-ஆன்.) வருகிறது, போகிறது, உணர்கிறாள், பாய்கிறான்
ஆகிய பதங்களில் "கிறு" இடைநிலையாக நின்று நிகழ்காலங் காட்டுவதை
அறியலாம். (வரு-கிறு-அது, உணர்-கிறு-ஆள்.) நடவாநின்றான்,
செல்லாநின்றாள் ஆகிய பதங்களில் "ஆநின்று" இடைநிலைகளாக
இயங்கி நிகழ்காலங் காட்டுவதைத் தெரிந்து கொள்ளலாம். (நட- ஆநின்று-ஆன், செல்-ஆநின்று-ஆள்.)
எதிர்கால வினை
இடைநிலைகள்
"ப்" "வ்" ஆகிய இரண்டும் எதிர்கால வினைக்குரிய
இடைநிலைகளாகச் செயற்படுகின்றன. நடப்பான், இருப்பான், செல்வாள், தருவான் என்னுஞ் சொற்களைக் கொண்டு இதனை
அறியலாம். நட-ப்-ப்-ஆன், தரு-வ்-ஆள் எனப் பிரித்தறிந்து
எதிர்கால வினை இடைநிலைகளை உணரலாம்.
எதிர்மறை
இடைநிலைகள்
"தனது கடமைகளை அவன் செய்யாது காலங்கடத்தினான்." எனவரும் வாக்கியத்தில்
வருகின்ற செய்யாது என்ற பதம் செய்-ஆ-து என வகுக்கப்படுவதால் "ஆ"
எதிர்மறை இடைநிலையாகக் கொள்ளப்படுகிறது. அதேபோல் வரமாட்டாள், செய்யமாட்டாள் ஆகிய பதங்களில் வருகின்ற மாட்டு (-ஆள்) என்பதும் எதிர்மறை
இடைநிலை என்பர் இலக்கண அறிஞர்.
சாரியை
பகுபதமொன்றில்
பகுதி,
விகுதி, இடைநிலை என்பவற்றுக்கு அடுத்தபடியாக
முக்கியத்துவம் பெறுவது சாரியை ஆகும். பண்டைய தமிழ்வழக்கில் ஏறத்தாழ இருபது வகையான
சாரியைகள் கையாளப்பட்டிருந்தன என்பர் அறிஞர். எனினும் இன்றைய வழக்கில் அன்,
அம், அத்து, அற்று,
இன் எனக் குறைவான எண்ணிக்கைச் சாரியைகளே வழக்கிலிருக்கின்றன.
சாரியையை
இலகுவாக அடையாளங் கண்டுகொள்ளலாம். புலி + பழம் = புலிப்பழம் என்றே இணைந்திருக்க
வேண்டும். ஆனால் மரபுரீதியாக புளியம்பழம் என்றே சொல்கிறோம். புலிப்பழம் என்று
சொன்னால் அது வேடிக்கையாகி விடும்.
ஆறு
+ கரை இணைவை ஆற்றுக்கரை என்று சொல்வதில்லை. ஆற்றங்கரை என்றே சொல்கிறோம். ஆற்றங்கரை
(ஆறு-அம்-கரை ஆ-ற்-று-அம்-கரை) ஆவதற்கும், புளியம்பழம்
(புலி-அம்-பழம்) ஆவதற்குமான காரணம் இச்சொற்கள் இணையும்போது "அம்" என்பது
இடையிற் புகுவதுதான். இதனைச் சாரியை என அழைப்பர்.
மரமை
வெட்டினார்கள் என்று கூறாமல் மரத்தை (மரம்-அத்து-ஐ) வெட்டினார்கள் எனக் கூறுவதன்
காரணம் **"அத்து"** சாரியை இணைவதுதான்.
இதேபோல்,
குடத்தை உடைத்தாள், பணத்தை எடுத்தார், தனத்தைக் கொடுத்தான், சிரத்தைத் சீவினான், குணத்தால் உயர்ந்தவன் போன்றவற்றில் காணப்படும் குடத்தை, பணத்தை, தனத்தை, சிரத்தை,
குணத்தால் என்பவையும் "அத்து" சாரியை பெற்ற சொற்களே. சில-ஐ,
சில-அற்று-ஐ ஆகி சிலவற்றை எனவாவதற்கும், பல-ஐ,
பல-அற்று-ஐ ஆகிப் பலவற்றை என உருவாவதற்கும் அற்று" சாரியை துணை
நிற்கிறது.
நடந்தாள்,
வந்தான் ஆகிய சொற்கள் நடந்தனள், வந்தனள்
என்றும் வழங்குமிடத்து "அன்" சாரியை உதவுகிறது. நட-ந்-த்-அன்-அள்
என்பவற்றின் இணைவே நடந்தனள் என்ற பதத்தைத் தருகிறது என்பதைத் தெரிந்து கொண்டால்
"அன்" சாரியையின் பயன் விளங்கும். வீடு-கு
வீட்டுக்கு என வருவதுண்டு. அதேவேளை வீடு-இன்-கு என "இன்" சாரியை பெற்று
வீட்டிற்கு என இணைவதுமுண்டு. சிறப்பு-ஐ சிறப்பை என அமையும். அதேபோல் சிறப்பு-இன்-ஐ
எனவந்து சிறப்பினை எனவும் அமையும். இவை "இன்" சாரியையால் விளையும்
மாற்றங்கள். இவ்வாறே, சிறப்புக்குரிய என்பது இன்சாரியை
பெற்று சிறப்பிற்குரிய என்றும், கல்வியை என்பது கல்வியினை
எனவும் எழுதப்படுவதுண்டு.
சந்தி
பகுதி,
விகுதி, இடைநிலை ஆகிய உறுப்புகள்
இணையும்போதும் இரு சொற்கள் இணையும்போதும் தோன்றுகின்ற எழுத்து சந்தி எனப்படும்.
ஆறுமுகநாவலர் அவர்களோ, சந்தி என்பது
புணரியலிற் சொல்லப்படுவனவாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம் என்கிறார்.
இகரத்துடன்
ஐகாரம் இணையும்போது தோன்றும் யகரமும், (குருவி-ஐ-
குருவியை) உகரத்துடன் ஐகாரம் இணையுமிடத்துத் தோன்றும் வகரமும் (பசு-ஐ-பசுவை)
வல்லினம் வருமொழியின் முதலெழுத்தாகுமிடத்துத் தோன்றும் வல்லின மெய்யும்
(பாடி-ச்-செல், கை-ப்-பிடி) சந்திகளே.
பண்டைய
அறிஞர்களின் கூற்றுப்படி (பிடி-த்-த்-அன்-அன்) பிடித்தனன் எனுஞ்சொல்லில் தகர
மெய்களில் இரண்டாவதாக வருகின்ற தகரமெய் சந்தி எனப்படுகிறது. எனவே இவை அனைத்தையும்
அறிந்திருப்பது தமிழிலக்கண வளத்துக்குச் சிறப்பாகும்.
விகாரம்
விகாரம்
என்பது சொற்களின் இணைவின்போது நிலைமொழியின் எழுத்துகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள்
எனலாம். இம்மாற்றம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.
தோன்றல்
இரு
பதங்கள் இணையும்போது இடையில் எழுத்து தோன்றுமாயின் அது தோன்றல்வகை விகாரமாகும்.
கடை-தெரு கடைத்தெரு எனவமையும்போது "த்"தோன்றுகிறது. புரட்சி-பெண் என்பது
புரட்சிப்பெண் எனவாகுமிடத்து "ப்" தோன்றுகிறது.
திரிதல்
மொழிகள்
இணையுமிடத்து ஒரெழுத்து வேறோர் எழுத்தாக மாறுமாயின் அது திரிதல் விகாரம் எனப்படுகிறது.
உதாரணம்:
மரம் + கொத்தி புணரும்போது மகரமெய் ஙகரமெய்யாகத் திரிபடைந்து மரங்கொத்தி
என்றாதலைக் காண்க. பனங்காய், மனங்கள், தீஞ்சுவை போன்ற சொற்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
கெடுதல்
மரம்
+ வேர் இணையும்போது மகரமெய் அற்றுப்போய் மரவேர் எனவாவதலை உதாரணமாகக் கொள்ளலாம்.








