![]() |
| அக்காவும் தங்கையும் சிறுவர் கதைகள் |
முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரிகள் வாழ்ந்தார்கள். ஒரு பாத்தியில் இரண்டு அவரைச் கொடிகள் போல் வளர்ந்தார்கள். அக்கா சிங்காரி தீயகுணங்களை உடையவள். இளையவள் சுந்தரி மிக நல்லவள். அவர்களது தந்தைக்கு வேலையில்லை. அதனால் சகோதரிகள் உழைப்பிற்குப் புறப்படத் திட்டமிட்டார்கள்.
இளையவள்
சுந்தரி "நான் முதலில் செல்கிறேன். என்னால் என்ன செய்யமுடியும் என்று
பார்க்கிறேன். பின்னர் அக்கா சிங்காரி போகட்டும்." என்றாள்.
சுந்தரி
தனது உடமைகளை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். தனது கிராமத்தில் இருந்து
தூரத்தில் உள்ள நகரத்துக்கு நடக்கலானாள். அவளது காலில் முள் தைத்தது. அதனை எடுத்து
விட்டு நடந்தாள். நொண்டிக் கொண்டு நடந்தாள்.
கால்கள்
வலித்தன. வேலைக்காக நகர்ப்புறங்களில் அலைந்தாள். வீதிகளைச் சுற்றி வந்தாள். யாருமே
அவளைக் கணக்கெடுக்க வில்லை. நெடுந்தூரம் நடக்கலானாள்.
களைத்துப்
போய் ஒரு வழியாக நடந்தாள். ஒரு போரணை தெரிந்தது. அதன் சூளையை அண்மித்து நடந்தாள்.
அச்சூளையில் ரொட்டித்துண்டுகள் வெந்து கொண்டிருந்தன. அவளைக் கண்டதும் ரொட்டித்
துண்டுகளைச் செய்பவர்கள் ஒருமித்துச் சத்தமிட்டனர்.
"ஏய்!
சின்னப் பெண்ணே! சின்னப் பெண்ணே!
கொஞ்சம் நில்லு.
சின்ன ரொட்டித்
துண்டு வேகுது எட்டிப்பாரு
இன்னும் ரொட்டி
வெந்துபோனால் என்னவாவது?
எரிந்து கரியாய்
மாறிவிடும் உதவி செய்வாய்
ஏழு வருசம்
தொடர்ந்து ரொட்டி இப்படித்தான்
இந்தச் சூளை
தன்னில் வெந்து கரியுமாகுது
இறக்கிவிட யாரும்
இல்லை. வந்து பாரம்மா
நொந்து வேகிறோம்
நொந்து வேகிறோம்
உதவி செய்வாயா?
என்றும் நன்றி கூறிடுவோம்
உதவி செய்வாயா?"
என்று ரொட்டித் துண்டுகளைச் செய்பவர்கள் சத்தமிட்டார்கள்.
சின்னப்பெண்ணின்
இரக்க குணம் அவளை நிற்கவைத்தது. தனது உடமைகளைக் கீழே வைத்தாள். சூளையில் வெந்த
ரொட்டிகளை இறக்குவதற்கு உதவினாள். "உங்களுக்கு இப்போது நலமாகவும்,
வசதியாகவும் இருக்கும். நான் வருகிறேன்." கூறி இறக்கிவிட்டுத்
தனது உடமைகளை எடுத்தாள். நடந்து சென்றாள்.
தூரத்தில் ஒரு பசு
நின்றது.
"ஹேய்..
ஹேய்.. சின்னப் பெண்ணே!
ஹேய்.. சின்னப்
பெண்ணே! கொஞ்சம் நில்லு.
தயவு செய்து எனது
பாலைக் கறந்து விடு."
ஏழு வருசமாய்
காத்திருக்கிறேன். எவருமே இல்லை.
எனது பாலைக்
கறப்பதற்கு யாருமே இல்லை.
தயவு
செய்து எனது பாலைக் கறந்து விடு. எனது துயரைப் போக்க நீயும் உதவி செய்திடு"
என்று பசு கூறியது.
இரக்கம்
கொண்ட சின்னப் பெண் தனது உடமைகளைக் கீழே வைத்தாள். பாலைக்கறந்தாள்.
"உங்களுக்கு இப்போது நலமாகவும், வசதியாகவும்
இருக்கும். நான் வருகிறேன்". கூறிவிட்டுத் தனது உடமைகளை எடுத்தாள். நடந்து
சென்றாள்.
சற்றுத்
தூரத்தில் வழியில் மாமரம் நின்றது. அதன் கிளைகள் நிறைந்து பழங்கள் தெரிந்தன. அவை
வளைந்து முறியும் நிலையில் இருந்தன.
"ஏய்!
ஏய்! சின்னப் பெண்ணே!
சின்னப் பெண்ணே!
கொஞ்சம் நில்லு.
தயவு செய்து எனது
கிளைகளைக் குலுக்கி விடு.
ஏழு வருசமாய்
காத்திருக்கிறேன் எவருமே இல்லை.
எனது கிளையைக்
குலுக்கிவிட யாருமே இல்லை.
தயவு செய்து எனது
கிளையைக் குலுக்கி விடு. எனது துயரைச் கொஞ்சம் போக்கி விடு" என்று மாமரம்
கூறியது.
இரக்கம்
கொண்ட சின்னப் பெண் தனது உடமைகளைக் கீழே வைத்தாள். மா மரத்தில் ஏறி அதன் கிளைகளைக்
குலுக்கி விட்டாள். பழங்கள் விழுந்து கிளைகள் நிமிர்ந்தன. மரம் சந்தோசமாக நின்றது.
"உங்களுக்கு இப்போது நலமாகவும், வசதியாகவும்
இருக்கும். நான் வருகிறேன்". கூறிவிட்டுத் தனது உடமைகளை எடுத்தாள். நடந்து
சென்றாள்.
ஒரு
ஒற்றையடிப் பாதை தெரிந்தது அவ்வழியே நடந்தாள்.
அவ்வழியில்
ஒரு வீடு தெரிந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரி பேச்சிமுத்து.
அவள் இரக்கமில்லாதவள். மந்திர தந்திர வேலைகளில் கெட்டிக்காரி.
அவளுக்கு வேலை செய்வதற்கு ஒரு வேலையாள் தேவைப்பட்டது. நல்ல சம்பளம் தருவதாகப்
பேசிக் கொண்டாள். சின்னப் பெண் சுந்தரி அவளிடம் சென்றாள்.
"எனக்கு ஒரு வேலை வேண்டும். தயவு செய்து ஒரு வேலை தருவீர்களா?."
என்றாள். பேச்சிமுத்து சுந்தரியை ஏற இறங்கப் பார்த்தாள். அவளுக்குப்
பிடித்து விட்டது. "வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றை
மட்டும் செய்யக் கூடாது" என்றாள். எதைச் செய்யக் கூடாது? சுந்தரி கேட்டாள். வீட்டின் பக்கத்தில் உயரமான மரம் நின்றது. அந்த
மரத்தைப் பார்த்துப் பேச்சிமுத்து கூறினாள்.
"என்னுடைய
மரமே!
எனதருமை மரமே!
எனது
சுட்டித்தனமுள்ள வேலைக்காரி வந்திருக்கிறாள். அவள் அடுப்பங்கரையின்
புகைப்போக்கியைத் தொட்டால் அது விழுந்து தீங்கு ஏற்படுத்தும் என்று அவளிடம்
சொல்" என்றாள்.
சுந்தரி
அதனைப் புரிந்து கொண்டாள். "நான் அப்படியே செய்கிறேன்" என்றாள். நல்ல
சம்பளம் தருவதாகக் கூறினாள். சுந்தரி ஏற்றுக் கொண்டாள். அவளிடம் வேலைக்கு அமர்ந்து
கொண்டாள்.
அதிகாலை
தொடக்கம் நடுச்சாமம் வரை வேலை செய்தாள். அவளது நோக்கம் தனது வீட்டின் வறுமையைப்
போக்குதலே. வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் அவளது கடமையாயிற்று. ஆனால்
புகைப்போக்கியைத் துடைப்பதில்லை. அப்பக்கமே போவதில்லை. நாட்கள் கழிந்தன. சுந்தரி
பம்பரமாகச் சுழன்று வேலைகளை முடித்துவந்தாள். ஆனால் இதுவரை சம்பளம்
கொடுக்கப்படவில்லை.
சுந்தரிக்கு
ஏமாற்றமாகப் போனது. அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. வீட்டுக்குப் போகும் எண்ணம்
மேலோங்கியது. பணமில்லாது வீட்டுக்குப் போவதெப்படி? இன்னும்
கொஞ்ச நாட்கள் பொறுத்திருக்க மனதைத் திடப்படுத்தினாள். அது போல் பொறுமையாகவும்
இருந்தாள்.
பேச்சிமுத்துவிடம்
தும்புத்தடி வடிவில் ஒரு மந்திர வாகனம் இருந்தது. அந்த வாகனத்தில் அவள்
மட்டுந்தான் செல்வாள். ஒருநாள் பேச்சிமுத்து வீட்டில் இல்லை. அவள் தனது
தும்புத்தடி வடிவிலுள்ள மந்திர வாகனத்தில் ஏறிச் சவாரி போய்விட்டாள்.
சுந்தரிக்குப் பொழுது போகவில்லை. வீட்டைச் சுத்தம் செய்தாள். புகைப்போக்கியையும்
துப்பரவு செய்தாலென்ன? யோசித்தாள்.
சுந்தரி
புகைப்போக்கியை உற்றுப் பார்த்தாள். ஏன் இதனைச் சுத்தப்படுத்தக் கூடாது என்றாள்.
அதனுள் என்ன இருக்கிறது என்று பார்க்க நினைத்தாள். அதனை நன்றாக உற்றுப்
பார்த்தாள். இருளடைந்திருந்தது. துடைப்பத்தை எடுத்துப் புகைப்போக்கியினுள்
விட்டாள். துடைப்பத்தால் தூசு தட்டினாள். அதனுள் இருந்து பொத்தென்று ஒரு பொதி அவள்
மடியில் விழுந்தது. அவள் அதிசயித்துப் போனாள்.
"புகைப்போக்கி விழுந்து துயரம் ஏற்படும் என்றாளே, இதற்குள்
அப்படி என்ன இருக்கும். அதனையும் பார்ப்போமே." அவளுக்கு முரட்டுத்தையிரியம்
வந்தது.
விழுந்த
பொதியை அவிழ்த்துப் பார்த்தாள். அத்தனையும் பணக்கற்றைகள். அவளுக்கு ஆச்சரியம்.
"இவ்வளவுவையும் வைத்துக் கொண்டு எனக்குச் சம்பளம் தரமறுத்தாளே. இவளுக்கு ஒரு
பாடம் படிப்பிக்க வேணும்" என்று நினைத்தாள். "நல்லவேளை வீட்டுக்காரி
இல்லை. இதுதான் நல்ல தருணம்" என நினைத்தாள். வீட்டுக்குப் புறப்படலானாள்.
பொதியையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். யாரையும் காணவில்லை. வேறு வழியால்
ஓடினாள்.
சற்று
நேரத்தால் பேச்சிமுத்து வீடு திரும்பினாள். வீட்டுக்கு வந்து சுந்தரியை அழைத்தாள்.
சுந்தரியைக் காணவில்லை. அறைகளில் தேடினாள். எங்கும் சுந்தரியைக் காணவில்லை.
புகைப்போக்கியை பார்த்தாள். பொதியைக் காணவில்லை. அவளுக்குப் புரிந்து விட்டது.
அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. தனது மந்திரக்கோலான தும்புத்தடி வாகனத்தில் ஏறித்
தேடிப்புறப்பட்டு விட்டாள். சுந்தரி அவளது வருகையைப் புரிந்து கொண்டாள். தான் உதவி
செய்த மா மரம் நின்றது. அதனருகில் சென்றாள்.
"மா
மரமே! மா மரமே என்னைத் துரத்தும் மாயக்காரி என் பின்னால் வருகிறாள். என்னைப்
பிடித்தால் எலும்பை உடைத்து அடுப்பில் சூப்பாய் வைப்பாள். மண்ணுள் என்னை புதைத்து
விடுவாள் என்னைக் காத்து மறைத்துக் கொள்ளு என்றும் உனக்கு நன்றிசெய்வேன்"
மா மரத்தை வேண்டிக்
கொண்டாள்.
"உனக்கு உதவும் கடமை எனக்கு உனது உதவி பெருமைக்குரியது. அதனால் அது உலகில்
பெரியது
ஓடிவந்து
கொப்பில் மறை" மா மரம் அவசரப்படுத்தியது. அவளை இலைகளால் மறைத்துக் கொண்டது.
மாயக்காரி
பேச்சிமுத்து தும்புத்தடி வாகனத்தில் பறந்து வந்தாள்.
"
மா மரமே! மா மரமே! என் அன்புக்குரிய மா மரமே! எனது பணத்தை எடுத்துக்
கொண்ட சின்னச் சிறுக்கி வந்தாளா சொல்"
என்று
கேட்டாள். மா மரம் மறுதலித்தது. "அன்புத் தாயே!
அன்புத் தாயே! ஏழு வருசமாய் இதிலே நிற்கிறேன் எதையும் நான் கண்டதில்லை எவரையும்
நான் பார்த்ததில்லை" மா மரம் பதில் சொன்னது. பேச்சிமுத்து ஆத்திரத்தில்
இருந்தாள். தும்புத்தடி வாகனத்தை வேறு பக்கம் திருப்பினாள். பறந்து போனாள்.
சுந்தரி மெதுவாக மா மரத்தை விட்டு வெளியில் வந்தாள். மா மரத்துக்கு நன்றி
சொன்னாள். விரைந்து வீடுநோக்கி நடந்தாள்.
பேச்சிமுத்து
சுற்றிச் சுற்றித் தேடித் திரிந்தாள். சுந்தரி அதனைப் புரிந்து கொண்டாள். பசு
தூரத்தில் நிற்பதைக் கண்டாள். அதே நேரம் பேச்சிமுத்து பறந்து வருவதையும்
அறிந்தாள். பசுவிடம் ஓடினாள். பசுவும் புரிந்து கொண்டது.
"அன்புப் பசுவே அன்புப் பசுவே! என்னைத் துரத்தும் மாயக்காரி என்னைப்
பிடிக்க பின்னால் வருகிறாள். என்னைப் பிடித்தால் எலும்பை உடைத்து அடுப்பில்
சூப்பாய் வைத்துக் குடிப்பாள் மண்ணுள் என்னை புதைத்து விடுவாள் என்னைக் காத்து
மறைத்துக் கொள்ளு என்றும் உனக்கு நன்றிசெய்வேன்" என்று சுந்தரி பசுவை
வேண்டிக்கொண்டாள்.
"உனக்கு உதவும் கடமை எனக்கு உனது உதவி பெருமைக்குரியது. அதனால் அது உலகில்
பெரியது ஓடிவந்து இதற்குள் மறைந்து கொள்". என்று வைக்கோல் போருக்குள்
புகுந்து ஒளியுமாறு கூறியது.
சுந்தரியும்
ஒளிந்து கொண்டாள்.
பேச்சிமுத்து
களைத்து விழுந்து பசுவிடம் வந்தாள்.
"பாலைப் பொழியும் அன்பின் பசுவே எனது பணத்தை எடுத்துக் கொண்ட சின்னச்
சிறுக்கி இவ்வழியாக வந்ததைக் கண்டாயா? சொல்" என்று
கேட்டாள். பசு பேச்சிமுத்தைப் பார்த்தது.
"அன்புத் தாயே! அன்புத் தாயே! ஏழு வருசமாய் இதிலே கிடக்கிறேன் எதையும் நான்
கண்டதே இல்லை எவரையும் நான் பார்த்ததும் இல்லை" பசு பண்பாகப் பதில் சொன்னது.
பேச்சிமுத்துவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தும்புத்தடி வாகனத்தை வேறு
பக்கம் திருப்பினாள். அப் பக்கம் நோக்கிப் பறந்து போனாள். சுந்தரி மெதுவாக
வைக்கோல் போரை விட்டு வெளிவந்தாள். பசுவுக்கு நன்றி சொன்னாள். விரைந்து வீடுநோக்கி
நடந்தாள். பேச்சிமுத்து விடுவதாக இல்லை. சுற்றிச் சுழன்று வந்தாள். உன்னை
விடமாட்டேன். பிடித்தே தீருவேன். சபதமெடுத்துத் திரிந்தாள். சுந்தரி ஓட்டமும்
நடையுமாக நடந்தாள். எப்படியும் பேச்சிமுத்து வருவாள் என்பதை உணர்ந்தாள். வழியைப்
பார்த்தவாறு ஓடினாள். பேச்சிமுத்து வருவதை உணர்ந்து கொண்டாள்.
தான்
வந்த வழியில் சூளை இருந்ததை நினைந்து கொண்டாள். வேகமாக ஓடினாள். தூரத்தில் சூளை
தெரிந்தது. அதனை அண்மித்தாள். அப்போது பேச்சிமுத்து கோபத்தோடு வருவதை அறிந்தாள்.
சூளையை உற்று நோக்கினாள். "ரொட்டியை வெதுப்பும்
சூளையே என்னைத் துரத்தும் மாயக்காரி என்னைப் பிடிக்க பின்னால் வருகிறாள். என்னைப்
பிடித்தால் எலும்பை உடைத்து அடுப்பில் சூப்பாய் வைத்துக் குடிப்பாள் மண்ணுள் என்னை
புதைத்து விடுவாள் என்னைக் காத்து மறைத்துக் கொள்ளு என்றும் உனக்கு
நன்றிசெய்வேன்"
என்று
சுந்தரி சூளையை வேண்டிக்கொண்டாள். "ஐயையோ
என்ன செய்வேன். சூளை நிறைய ரொட்டித் துண்டு சுருண்டு கொள்ள இடமும் இல்லை. போரணைக்
காரர் அங்கே நிற்கிறார் அவரிடம் கேளு அவர் பதில் சொல்வார்" என்று போரணை
சொன்னது. சுந்தரி போரணைக் காரரிடம் முறையிட்டாள்.
"ஒருமுறை எனது ரொட்டித் துண்டுகளைக் கருகவிடாது காப்பாற்றினாய் அல்லவா?
அதற்குப் பிரதி உபகாரம் செய்வேன். உதவி கட்டாயம் செய்வது கடமை.
வெதுப்பகம் உள்ளே அறையொன்று இருக்குது அங்கே யாரும் போகவே மாட்டார். ஓடி நீயும்
ஒளித்திருப்பாயே" அவர் வழியைக் காட்டினார். சுந்தரி ஒளித்துக் கொண்டாள்.
பேச்சிமுத்து விரைந்து கோபத்தோடு வந்தாள். "ஒ..ஒ
மனிதா... அன்பான மனிதா .. என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் எடுத்துப் பையில்
பதுக்கிக் கொண்டு சின்னச் சிறுக்கி இந்த வழியால் எனக்கு முன்னே வந்தாளா சொல்"
என்று கேட்டு நின்றாள்.
"போரணை உள்ளே போய் பார்" என்றான். பேச்சிமுத்து புகுந்து தேடினாள்.
சட்டென போரணைக் கதவை மூடினான். பேச்சிமுத்து வெந்து போனாள். கையில் ரொட்டித்
துண்டோடு வெந்தாள். வெப்பம் தாங்காது சத்தமிட்டு வெளியே வந்தாள். விரைந்து வீடு
சென்றாள். வெந்த புண்ணுக்கு மருந்து தடவினாள்.
சுந்தரி
வெளியில் வந்தாள். போரணைக் காரருக்கு நன்றி கூறினாள். மெல்ல நடந்து
வீட்டையடைந்தாள். வீட்டில் அனைவரும் சுந்தரியை அன்பாய் வரவேற்றனர். அவளுக்கு
ஆறுதல் கூறினர். தான் கொண்டு வந்த பணத்தினை தாய் தந்தையிடம் ஒப்புவித்தாள்.
அவர்கள் சந்தோசப் பட்டார்கள், ஆனால் மூத்தவள்
சிங்காரி பொறாமை கொண்டாள். "நானும் போகிறேன். உழைத்துப் பணத்தொடு
வருவேன்" என்றாள். தனது உடமைகளைப் பொதியாக்கினாள். புறப்பட்டாள்.
சுந்தரி
சென்ற வழியிலேயே சென்றாள். வழியில் போரணை தெரிந்தது.
"ஏய் பெண்ணே இப்படி வா. ஏழு வருசமாய் எரிகிறோம் தீயில். எங்களுக்கு
உதவி ரொட்டிகளை இறக்கி விட்டுச் செல்." என்று ரொட்டித்துண்டுகள் செய்பவர்கள்
கெஞ்சினார்கள். "எனக்கு வேறு வேலையில்லையா?
உங்களைத்
தொட்டு என் கையைத் தீய்ப்பதா? மன்னிக்க வேண்டும்.
என்னால் முடியாது". என்று சொல்லிப் போனாள். போகும் வழியில் பசு நின்றது.
"ஏய் பெண்ணே இப்படி வா. எனது மடியில் பால் சுரந்துள்ளது. தயவு
செய்து எனது பாலைக் கறந்து விடு. ஏழு வருசமாய் காத்துக் கிடக்கிறேன் எவரும் இல்லை
எனது பாலைக் கறக்க. தயவு செய்து எனது பாலைக் கறந்து விடு" என்று பசு கூறியது.
சிங்காரி பசுவைப் பார்த்துச் சிரித்தாள். "நான் உனது பண்ணைக்காரியில்லை.
இன்னும் ஏழு வருசம் காத்திரு. நன்றி. நான் வருகிறேன்". என்றாள். நடையைக்
கட்டினாள்.
வழியில்
மா மரம் நின்றது. அதன் கிளைகள் நிறைந்து பழங்கள் தொங்கின. தனது கிளையை உதப்பிப்
பழங்களைப் பறித்துவிடுமாறு கெஞ்சியது. "எனக்கு ஒன்று போதும்.. மிகுதியை நீயே
வைத்துக்கொள்" என்று ஒன்றைப் பறித்து உண்டாள். தனது வழியில் தொடர்ந்தாள்.
ஈற்றில் மாயக்காரி பேச்சிமுத்து வீட்டுக்கு வந்தாள்.
பேச்சிமுத்து
போரணையில் வெந்த முகத்துக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள். அவளை அணுகி வேலை
கேட்டாள். அவளுக்கு வேலை கிடைத்தது. வீட்டைச் சுத்தம் செய்தாள். பேச்சிமுத்து
வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தாள். சிங்காரிக்கு
புகைப்போக்கியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. களைப்பேற்படும் வரை
வேலை செய்தாள்.
அன்றொரு
நாள் பேச்சிமுத்து தனது தோட்டத்துள் சென்றாள். சிங்காரி வீட்டு வேலைகளைச்
செய்தாள். தற்செயலாகப் புகைப்போக்கியைப் பார்த்தாள். அதனைத் துப்பரவு செய்தாள்.
சடுதியாக ஒரு பணப்பை அவளது மடியில் விழுந்தது.
உடனடியாக
அதனை எடுத்துக் கொண்டு ஓடினாள். சடுதியாக வீட்டுக்குப் பேச்சிமுத்து வந்தாள்.
சிங்காரியைக் காணவில்லை. தேடினாள். புகைப்போக்கியைப் பார்த்தாள். பொதியையும்
காணவில்லை. அவளுக்குப் புரிந்து விட்டது. சிங்காரி ஓடுவதைக் கண்டாள். அவளைத்
துரத்திப் போனாள்.
சிங்காரி
வேகமாக ஓடினாள். வழியில் மா மரம் நின்றது. மா மரத்திடம் தன்னைக் காப்பாற்றுமாறு
கேட்டாள். "எனது கிளைகளில் மாம்பழங்கள் நிறையவே உள்ளன. உனக்குத் தர எனக்கு
இடமில்லை. மன்னித்துக் கொள்" என்றது. சிங்காரி அந்த இடத்தைவிட்டு ஓடினாள்.
பேச்சிமுத்து
தனது தும்புத்தடி வாகனத்தில் ஏறிக் கொண்டு துரத்தி வந்தாள்.
"மா மரமே! மா மரமே! என் அன்புக்குரிய மா மரமே எனது பணத்தை எடுத்துக் கொண்ட சின்னச்
சிறுக்கி வந்தாளா சொல்"
என்று
கேட்டாள்.
பேச்சிமுத்துவின்
கண்கள் சிவந்திருந்தன. அவள் கோபத்தில் பயங்கரமாக இருந்தாள். அவளது பார்வையில்
மாமரம் ஆடியது. மாமரம் முதலில் தயங்கியது. பேச்சிமுத்து சத்தமிட்டாள். மாமரத்தை
அழித்து விடுவதாகக் கூறினாள். மாமரம் பயந்துவிட்டது. பயத்தால் மா மரம்
பதிலளித்தது. "ஓமோம் தாயே இந்த வழியால் ஓடினாள்
ஒருத்தி." சிங்காரி ஓடிய திசையைக் காட்டியது. பேச்சிமுத்து விரைந்து
சென்றாள். சிங்காரியால் தப்ப முடியவில்லை. பேச்சிமுத்து சிங்காரியைத் துரத்திப்
பிடித்தாள். நல்ல அடிபோட்டாள். பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு அவளை அடித்து விரட்டி
விட்டாள்.
கையில்
ஒருசதமும் இல்லாமல் வெறுங்கையுடன் வீடு போய்ச் சேர்ந்தாள் சிங்காரி.
சுந்தரி
தனது சகோதரி நொந்து வருவதைக் கண்டாள். அவளுக்கு ஆறுதல் கூறினாள். அன்போடு
அரவணைத்தாள். நாம் உள்ளதைக் கொண்டு சந்தோசமாகச் சேர்ந்து வாழ்வோம். என்றாள்.
இப்போது அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்.
இக்கதையானது
கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம என்பவரது படைப்பாகும். சுவையான கதைகள் எனும்
நூலில் இருந்து எடுக்கப்பட்ட கதையாகும்.









