பாடசாலைகளில் சமயவிழாக் கொண்டாடுவதன் அவசியம்
மனிதன்
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவனாக இருக்கின்றான். எம்மில் சிலர் தீவிரமாக ஒரே
தெய்வத்தை நம்புகின்றார்கள். வேறு சிலர் 'எம்மதமும்
சம்மதம்' என்ற கொள்கை உடையவர்கள். மிகச் சிலர்
நாத்திகர்களாயும் உள்ளனர். எது எவ்வாறாயினும் சமய விழாக்கள் சகலருக்கும்
பொதுவானவையே. இவ்விழாக்கள் கொண்டாடப்படும் முக்கியத்துவம் பற்றி இங்கு ஆராய்வோம்.
முதலாவதாக
இவ்விழாக்கள், சமயப் பற்றை அதிகரிக்கச் செய்கின்றன.
சமயப்பற்று ஆன்மீகப் பேரொளியைப் பரப்புகிறது; ஆன்மீகத்
தெளிவு உள்ளவர்கள் அநியாயம் செய்வதில்லை; குற்றங்கள்
செய்வதில்லை. நல்வழியில் நடக்கிறார்கள். ஒளிமிகுந்த வாழ்வைப் பெறுகிறார்கள்.
இவ்விழாக் காலங்களில் கடவுளர் சிலைகள் பலவும் கவின் சொரிய அலங்கரிக்கப்படுவது
வழக்கம். குறித்த நேரங்களில் இசைப் பாடல்களை இனிமையாகப் பாடி வணங்குவதுண்டு,
இப்பாடல்கள் இறைவனின் மிகுந்த கருணை, நற்பண்பு,
வீரதீரச் செயல்களை விரித்துரைப்பதாக உள்ளன. இவற்றைப் பாடியும்
கேட்டும் பரவசங்கொள்வோரின் சமயப்பற்றும் இதனால் அதிகரிக்கிறது.
ஆன்மாவானது
சார்ந்ததன் வண்ணம் நிற்கும் இயல்பினது. சூழல் நிலைமைகளைப் பொறுத்து ஒவ்வொருவரின்
மன நிலைகளும் மாறத்தக்கன. சமயவிழாக் காலங்களில் ஊரெல்லாம் தெய்வீக மணம் கமழும்.
சிவபக்தர் நாவெல்லாம் "நமசிவாய" உரைக்கும். சகல இடங்களிலும் தூய்மை
பொலிவுடன் துலங்கும். புறத்தின் தூய்மையும் தெய்வீகமும் மனித அகத்துள்ளே,
மனங்களுள்ளே புகுந்து கொள்ளும். சமயவிழாக்கள் முனைப்பாகப்
பெரியோர்களால் செய்யப்படுகிறது. இதனால் இளஞ்சமூகத்திடம்
இப்பொறுப்புக்கள்
மரபுரீதியாகக் கையளிக்கப்படுகின்றன. சந்ததி சந்ததியாக இவ்வழக்கம் தொடர்கிறது.
இதனால் பொறுப்புக்களைச் செவ்வனே ஆற்றும் தன்மை மாணவப் பருவத்திலேயே
ஏற்பட்டுவிடுகிறது.
பாடசாலைகளில்
நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சக்தியின் மூவேறு
வடிவங்களான துர்க்கை, இலக்குமி, சரஸ்வதியை வாழ்த்தி வணங்கி விரதமிருந்து வரங்கள் பெறுவது வழக்கம்.
இந்நாட்களில் மாணவர் பலரும் அகமும் புறமும் ஒளிவிளங்க நற்பண்புகள் பலவற்றுக்குத்
தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள்.
முதலாவதாகக்
கூட்டு முயற்சி எனும் மாண்பு மிக்க பண்பு வளர்க்கப்படுகிறது. வகுப்பு ரீதியான
அலங்காரங்கள் தொகுக்கப்பட்டே விழா நாட்கள் நகர்த்தப்படுகின்றன. சிறு சிறு
மனக்கசப்புக்களைத் தூரத் தள்ளிவிட்டு மாணவர் செயற்படுவதால் ஒற்றுமை எனும் மகத்தான
சக்தி பேணி வளர்க்கப்படுகிறது.
விழாக்
காலங்களில் விசேஷமாக, காலை வேளைகளில் குறிப்பிட்ட
ஒழுங்கின்படி, சொற்பொழிவுகள் ஆற்றப்படுகின்றன. இதனால்
நற்கருத்துக்கள் விதைக்கப்படுவதோடு மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும்
வளர்க்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களின் பேச்சுத்திறன் பெரிதும்
ஊக்குவிக்கப்படுகிறது. மாணவர்களே சக மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற அரிய
சந்தர்ப்பம் இதுவாகும்.
பத்தாம்
நாளான விஜயதசமி அன்று, கலைத்திறன் போட்டிகள்
நடத்தப்பட்டுப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. மாணவரின் உள்ளார்ந்த திறமைகளை
இனங்காண - வளர்க்க - இவை உறுதுணையாகின்றன. எந்த ஒரு மனிதனும் தனித்துவத்
திறமைகளைக் கொண்டே இருக்கிறான். அவை வெளிக்கொணரப்படுவதால் மந்தகதி மாணவர்களும்கூட
உற்சாகமாக வாழ்வினை அனுபவிக்கும் ஒரு காலகட்டமாக இது விளங்குகிறது.
தலைமை
வகிக்கும் பண்பும் இவ்விழா நிகழ்ச்சிகளினால் விருத்தியாக்கப்படுகிறது. சுருங்கக்
கூறின் பாட...
சாலைகளில்
சமய விழாக்கள் மூலம் ஓர் அனுபவக் கல்வியே புகுத்தப்படுகிறது. ஏட்டுக் கல்வியை விட
அனுபவக் கல்வி மனதில் ஆழமாகப் பதிகிறது. இதனால் மாணவனானவன் வாழ்விற்கு மிகத்
தயார்ப்படுத்தப்படுகிறான்.
சமயவிழாக்கள்
பெரும்பாலும் தீமைகள் தெய்வங்களால் அழிக்கப்பட்ட வரலாறுகளை நினைவுகூர்வதாகவே
உள்ளன. இக்கதைகள் கற்பனையாயிருக்கும் பட்சத்திலும்கூட "தீயன செய்தால் தீமைகள்
விளைகின்றன" கருத்து குழந்தைப் பருவத்திலேயே ஆழமாகப் பதிக்கப்படுகின்றன.
நல்லெண்ணங்களின் மேம்பாட்டுக்கும் தீயெண்ணங்களின் அகல்வுக்கும் இவை உதவுகின்றன.
கிறிஸ்தவர்களின்
ஒளிவிழா போன்றனவும் உடல் உளத் திறன்களை வளர்க்கின்றன. செய்ந்நன்றி மறவாச் சீரிய
பண்பும் விருத்தியாக்கப்படுகிறது. இக்காரணம் பற்றியே மக்கள் நலம் வாழ மரித்த
இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் நாட்களையும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பல
மதப் பிள்ளைகள் கற்கின்ற ஒரு பாடசாலையில் வெவ்வேறு விழாக்களும் எடுக்கப்படுவதால்
பல்மத அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் எம்மதத்தையும்
மதிக்கின்ற பண்பு சிறுவயதிலேயே ஊன்றப்படுகிறது.
அவசரகதியில்
இயங்குகின்ற இயந்திர யுகத்தில் இவ்விழாப் பொழுதுகள் இனந்தெரியாத நிறைவையும் ஆழ்ந்த
நிம்மதியையும் தருகின்றன. ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவர் தாம் நாடு
காக்கும் தலைவராய் நாளை விளங்கப்போகிறார்கள். இவ்விழாக்களால் தெய்வ நம்பிக்கை
பெருகுகிறது. மாணவர் உள்ளத்தில் ஒளி வீசுகிறது. நாளைய நாட்டுக்கு ஒளியேற்றும்
அகல்விளக்குகளாய் மாணவர் சமுதாயத்தையே பிரகாசிக்க வைக்கும் இவ்விழாக்கள் இனியும்
வளர்க! தனித்துவமான இவ்விழாவினால் ஆய நன்மைகள் பெருகுக!!
அழகுக் கிராமமும் அகோர
சூறாவளியும்
சின்னப்
பூக்கள் சாலையோரமெல்லாம் பரந்து கிடந்தன. சோலைகள் என்றால் அதைப்பற்றிச் சொல்லவே
தேவையில்லை. பாலைவெளியென்று பேச்சுக்குக்கூட ஓரிடமில்லை. இயற்கை தனது அழகிற்குச்
சூட்டிய மணிமகுடமாய்க் காட்சியளித்தது எமது கிராமம். எண்ணிப் பார்த்தால் சின்னக்
கிராமம் தான், ஆனால் அது சொர்க்கம். இதுபற்றித்
தர்க்கம் செய்யத் தேவையில்லை. ஏனெனில் எமது கிராமத்தின் பெயர்கூடக் காரணத்துடனேயே
தான் சொர்க்கபுரி என நிலவுவதாயிற்று.
நீலக்கடல்
தழுவும் நெய்தல் நிலம் கிராமத்தை ஒரு புறம் அழகு செய்தது. கண்ணின் முன்னே
கடற்கரையோர வெண்மணல் விரிந்து கிடந்தது. அவற்றில் சின்னப் பொட்டுக்களாய்
வாடிவீடுகளும் சிறு குடிசைகளும் காட்சி தந்தன. கடற்செல்வங்கள் பலவும் வஞ்சனையின்றி
வெயிலில் காய்ந்தன. நுரை சுமந்த அலைகள் கரையோரம் வந்து எம் கிராமத்துத் தரை
தொட்டுப் பின்னர் நிரையாகப் போயின. இவ்வடிவழகு வார்த்தைகளுள் அடங்குவதில்லை.
மறுபுறம்
மருதநிலம் பேரழகுடன் பொலிந்தது. பசுங்கடலாய் பயிர்கள் பரந்து வளம் கொழிக்கும்
பூமியிது. செந்நெற்கதிர்கள் சீதளப் பூங்காற்றுடன் சேர்ந்தாடின. நடனக் கலையிற்
தேர்ந்த நளின நங்கையராய் கதிர்கொண்ட நெற்பயிர்கள் நாணி நிலம் நோக்கின. கிழங்கு
வகைகளோ நிலத்தின் கீழ் விளைச்சலை ஈன்று நிமிர்ந்து சிரித்தன. அவரையும் துவரையும்
நிரைகளாய் அணிவகுத்து நின்றன.
பரந்த
பனங்கூடல்கள் எமது கிராமத்துக்கு இனங்காண முடியாத அற்புத அழகை அள்ளி வழங்கின. கரிய
நிறத்துக் காவலராய் கம்பீரமாய் அவை நிமிர்ந்து நின்றன.
விவசாயத்
தொழில் மலிந்த எம்மூரில் வீடுகள் தோறும் வாழைகள் செழித்துக் கிடந்தன. குலையீன்ற
வாழையில் தாய்மைப் பொலிவும் இளம் வாழைகளில் கன்னி அழகும் துலங்கின. செந்நிறத்
தம்பளப் பூச்சிகள் கும்பலாய்ச் சேர்ந்தது போல மிளகாய்ப் பழங்கள் முற்றத்தில்
பரப்பியிருந்தன. கமுகும் கரும்பும் அழகை அதிகரிக்கச் செய்தன. இதுவே எமது அழகுக்
கிராமத்தின் அன்றைய காட்சியாகும்.
எமது
கிராம மக்கள் உள்ளும் புறமும் ஒன்றேயானவர்கள். கள்ளம் கபடம் அற்றவர்கள். வெள்ளை
உள்ளம் கொண்டவர்கள். அவர்களுக்கு ஏனிந்த விபரீதம்? இன்று
வரை விடையில்லாக் கேள்வியிது. அன்று... திடீரெனக் கருமேகங்கள் திரண்டன. விரிவான்
பரப்பின் வெண்மேகங்கள் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டன. மஞ்சள் ஒளி விரிக்கும் மலரவன்
கொஞ்சம்கூட முகம் காட்ட மறுத்தான். வானொலிகளில் விசேஷ அறிவிப்புக்கள் தொடர்ச்சியாக
அறிவிக்கப்பட்டன. பெரியோர் முகத்தில் கலவரம் குடிகொண்டாலும் சிறுவர்கள் பலரும்
சந்தோஷமாகவே காணப்பட்டனர். மிக நவீன முறையில் அமைக்கப்பட்ட எம் வீட்டிலிருந்து
பார்க்கும்போது மருத நிலமும் நெய்தல் நிலமும் தெளிவாகவே தெரிவது வழக்கம். ஆகவே
நான் வீட்டிலிருந்தபடி பல காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெள்ளிக்
கம்பிகளாய் வானிலிருந்து மண்ணுக்கு வந்து விழுந்த மழைத்துளிகள் அழகான
காட்சியாயிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் மழைத்துளிகள் அடர்த்தியாயின. வயல் வெளிகளில்
கருநிறத்தில் வானம் இருண்டு கிடந்தது. சிறு பட்சிகள் கலவரமாய்ப் பறந்து சென்றன.
கடலோரக் குடிகள் தம் வாழ்மனையை விட்டு வர முடியாமல் தவித்தபடி நின்றார்கள்.
மற்றும் சிலரோ 'விதிப்படி வாழ்வு' என்று
விட்டேற்றியாய் நடந்தார்கள். வானொலியில் அபாய அறிவிப்புத் தொடர்ந்தது, திடீர் எனக் காற்றின் வேகம் அதிகரித்தது. சுழல் காற்று சந்தமாய் ஊதிற்று.
பெருமரங்கள் முறிந்தமோதிலும் சிறு மரங்கள் புயல் காற்றுடன் கூடி ஆடின. இலைகள் பல
நிலத்தில் சொரிந்தன.
இடிமுழக்கம்
இதயத்தை அதிர வைத்தது. இயற்கைத் தாய் இடித்தாளம் தட்ட கடலலைகளின் நடனம் வலுத்தது.
வங்கக்
கடலில் மையம் கொண்ட தாழ்முழுக்கம் வலதுபுறக் கரையோரமாக நகர்வதாய் வானொலி
அறிவித்தது. விலங்குகளும் மனிதர்களும் புகலிடம் தேடி ஓடினர். இரவின் வரவு பொழுதின்
பயங்கரத்தை இன்னும் கூட்டிக் காட்டிற்று. தென்றலுக்குக்கூட இப்படி ஒரு முகமுண்டா?
இயற்கை உக்கிரம் கொண்டால் இப்படியும் அக்கிரமம் செய்யுமா? அளவிட முடியாத துயரமும் பயமும் சூழ அனை வரும் மௌனமாய் இருந்தோம். கனத்த
இருள் வெளியில் மட்டுமின்றி, நம்மனங்களிலும்
சூழ்ந்திருந்தது. காலமோ எதையும் கவனிக்காது, கடும் புயல்
மழையுடன் சேர்ந்து நடந்தது.
மறுநாள்
புலர்கையில் மழையின் தீவிரம் குறைந்தது. வேதனை உணர்வே விரிந்து பரந்தது.
கால்நடைகள் பல ஆங்காங்கே இறந்து கிடந்தன. கதிர் சொரிந்த நெல்லினங்களை மேவி
நீர்ப்பரப்பே தெரிந்தது. குலையீன்ற வாழைகள் தம் நிலைசாய்ந்து முறிந்து கிடந்தன.
மருத நிலக் குடிசைகளில் சில இருந்த இடமேயில்லை. அவர்கள் வருந்தி அழுத கதை
வார்த்தைகளால் சொல்ல வழியில்லை.
கரையோரப்பகுதி
கூடுதலாக உயிரிழப்புக்குள்ளாகி இருந்தது. நீலக்கடல் நீண்டு வாடிவீடுகளை விழுங்கி
இருந்தது. மீனினம் தேடிக் கடலுட் புகுந்தோரில் கனபேர் திரும்பவேயில்லை. அலைகளின்
துடிப்பு இன்னும் அடங்கிய பாடில்லை. கடல் அன்னை கிராமத்தைக் காவு கொண்டதையிட்டுப்
பலர் துடிதுடித்து அழுதார்கள். நிமிர்ந்த பனைகளிற் பல முறிந்து போயின. கமுகும்
கரும்பும் சில மரங்களே எஞ்சி இருந்தன. பாடசாலைகளில் பல மக்கள் அகதிகளாய்த் தஞ்சம்
புகுந்தனர். பொதுநலவமைப்புக்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தன.
நிறையத்தான்
இழந்துவிட்டோம். அதனாலென்ன, நெஞ்சில் உரம் மிகவுண்டு.
நாமெல்லாம் சேர்ந்து உழைப்போம். அழகிய பூக்கள் சாய்ந்தாட சீதளத் தென்றல் சுகம்
சேர்க்க பழகிய எங்கள் பழைய அழகு நிச்சயமாக ஒருநாள் மீண்டும் மலரும்.


