![]() |
| மாணவர்களுக்கான கட்டுரைகள் |
1. நான் பயணம் செய்த கப்பல் பாறையில் மோதிச் சிதறியபோது...
நீலக்கடல்
காலப்பெருவெளி போல் ஆதியும் அந்தமும் இல்லாது காட்சியளித்தது. கவிழ்ந்த கிண்ணம்போல
விரிவான வெளி பரந்து கிடந்தது. எங்கள் பயணக்கப்பல் மாகடல் மீது விரைந்து மிதந்து
கொண்டிருந்தது. தூரத்தே சில வலைஞர்கள் அலைகளின் இடையே அவர்தம் வள்ளங்களில் அசைந்து
கொண்டிருந்தனர். உழைப்பிற்காக உயிரைத் துச்சமென மதிக்கும் அம்மீனவர்களின்
நிலைகண்டு வேதனையுற்றேன். காற்றுத் திரிக்கும் நீர்க்கயிறுகளாய் கடலின்
மேற்பரப்பில் தோன்றும் அலை அழகைச் சொல்ல வார்த்தைகள் தானுண்டோ?
இவ்வேளையில் என்னைப்பற்றிச் சொல்லி விடுகிறேன். நான் ஓர்
எழுத்தாளன். பணத்தில் கனமான குடும்பத்தைச் சேர்ந்தவன். வெவ்வேறு திசைகளுக்கும்
பல்வேறு மார்க்கங்கள் மூலம் பயணம் செய்து என் அனுபவங்களைத் தொகுத்து ஓர் அற்புதப்
படைப்பைச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதன் விளைவினாலான பயணமே இது.
கதைகளில் மட்டும் கேள்விப்பட்ட மரகதத்தீவினை நேரில் தரிசனம் செய்யத் துணிச்சலுடன்
புறப்பட்டிருந்தேன்.
அன்று
எமது கப்பல் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இரவின் வரவுகூட என் கவிதா
மனத்திற்கு இன்பமாகவே இருந்தது. தனிமை எனக்கு மிகவும் இனிமையாக இருந்தது. மையிருள்
வானில் அள்ளித் தெளித்த வெள்ளிப் பூக்களாய்த் "தாரகை" எனப்படும் தங்கச்
சிமிழ்கள் ஒளிர்ந்தததை இரசித்தேன். அப்போது சீதளத் தென்றலின் குளிர் பொறுக்க
முடியாததாய் இருந்தது.
திடீரெனக்
கப்பற்றளத்தில் ஒரு கலவரத்தை உணர்ந்தேன். மேல் கீழ்த் தளங்களில் "தட தட"
என்ற சப்தம் அதிகரிக்கத் தொடங்கியது.
எமது
கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாயும் திசை மாறிக்கப்பல் சென்று
கொண்டிருப்பதாயும் அறிவிக்கப்பட்டது. சில நிமிஷங்களின் பின்னர் நிலைமை சடுதியாக
மாறியது. கப்பல் தன்னிலை அற்றுத் தத்தளிக்கத் தொடங்கியது. இயன்றவரை மிதக்கும்
உபகரணங்களை எடுத்துக் கடலினுள் குதிக்குமாறு ஒலிபெருக்கி அறிவிப்பு ஆணையிட்டது.
வயது வேறுபாடின்றி பரிதாப ஓலம் பெரிதாய் எழுந்தது. அனைவரும் செயற்பட்டோம்.
இயன்றவரை ஏனையோருக்கு உதவி செய்ததில் நான் அபாய அறிவிப்பைத் தொடர்ந்து சடுதியாக
நீரினுள் பாய்ந்தேன். பொலித்தீனில் பத்திரப்படுத்திய என் பயணக்குறிப்புகள் மட்டுமே
என்னிடம் இருந்தன. மிதப்பு உபகரணம் ஏதும் என்னிடமில்லை. நான் நீருள் குதித்த
மறுக்கணம் எமது கப்பல் பாறையில் மோதிச் சிதறியது.
தொடர்ந்து
சில விநாடிகளில் எமக்கு வான்படை உதவி கிடைக்குமென்பது தெரிந்திருந்தும் மிதப்பு
உபகரணமின்மையால் நீந்திக் கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானேன்.
அலைகள் என்னைத் தள்ளிய திசைக்குச் செல்லலானேன். கைகள் சோர்ந்தன;
கால்கள் சோர்ந்தன. காரிருளும் கடலுக்கே உரிய அலை யோசையும் தவிர
எதுவும் உணர முடியவில்லை. ஆண்டவனைத் தவிர வேறெதும் நினைவில் இல்லை.
அவ்வேளையிற்
தற்செயலாக மிதந்து வந்த மரக்கட்டையைப் பற்றிக்கொண்டதனால் என் மனத்து ஓரமெல்லாம்
உற்சாகக் குமிழ்கள் உருவாகத் தொடங்கின. ஒரே துடிப்பு. உயிர்காக்கும் தீவிரமான
இறுதித் துடிப்பு. அதுவே என்னை நீந்தவைத்தது. அலைகளின் திசையில் என் பயணம்
தொடர்ந்திருக்கிறது. மயங்கிய விழிகள் மூடிக் கிடக்க நான் கடலலைகளால்
நகர்த்தப்பட்டிருக்கிறேன். நாழிகைகளும் தம்போக்கில் நகர்ந்ததும் தெரியவில்லை.
விடியற்பொழுதில்
என் விழிகள் திறந்தபோது வெண்மணல் கரையோரம் ஒதுக்கப்பட்டிருந்தேன். வெம்மை கலந்த
வெயிலவனின் கிரகணங்கள் என்னைத் தீண்டின. மண்ணின் வருடல் மனத்துக்குச்
சுகமாயிருந்தது. கடந்து...
போன
இரவின் நம்பமுடியாத ஞாபகங்கள் மனதினுள்ளே கோவையாய் அணிவகுத்தன. என் எழுத்துப்
பொக்கிஷங்கள் இழக்கப்படாததே மனதிற்குப் பேரறுதல் தருவதாயிருந்தது.
பசியெனும்
உணர்வை விரட்ட எண்ணி எழுந்து நடந்தேன். ஆரவாரமற்ற அப்பிரதேசத்தில் அழகு ஆட்சி
செலுத்திக் கொண்டிருந்தது. பசுந்தளிர்ப் பூமியாய்ப் பெருமரங்கள் நிறைந்திருந்தன.
அற்புத அழகுடன் வண்ணப் பூக்கள் எண்ணுக்கணக்கின்றி எங்கும் மலர்ந்திருந்தன. கனி
வகைகளும் தனி அழகுடன் பொலிந்தன. பசும்மரங்களின் நடுவே மென்நீலச் சுனையொன்று
இருந்தது. மானினங்கள் மிரண்ட பார்வையுடன் நீரருந்தி மீண்டன. எனக்கும் அவ்வேளையில்
அச்சுனை நீர் சுவைதரும் பானமாய் இலங்கியது.
கடந்த
நிகழ்வின் அனுபவங்களை நான் எழுதிக்கொண்டேன். அவ்வழகுப் பிரதேசம் பற்றிச் சில
குறிப்புகள் எடுத்தேன். பிரிவின் பெருந்துயர் என்னை வாட்டியபோது மீண்டும் என்
தாயகத்திற்குத் திரும்ப முடியும் என நான் நம்பினேன்.
பச்சைக்கூழைகளால்
என்னைப் போர்த்தியபடி நான் பெருமரங்களில் துயின்றேன். இச்சையுற்றபடி கனிவகைகளுண்டு
பசி ஆறினேன். இவ்வாறாக இருநாட்கள் கழிந்தன. நுரைமோதும் கரையோரத்தில் நான்
நின்றபோது ஓர் ஆபத்துதவிகளின் படகு என்னை நோக்கி வந்தது. நான் மீட்கப்பட்டேன்.
தொலைநோக்கிப் பிரயாணி ஒருவர் தற்செயலாக என்னைக் கண்டதால் எனக்கு இவ்வுதவி
கிடைத்ததாகப் பின்னர் அறிந்துகொண்டேன். இறைவனின் அளவிறந்த கருணையை உணர்ந்து
கொண்டேன். நீலக் கடல்மீது எம் கப்பற்பயணம் தொடர்ந்தது. கோல அழகு குவிந்திருந்த
இயற்கையை இரசித்த என் மனம் ஆனந்தகீதம் இசைத்துக் கொண்டிருந்தது.
2. நான்
ஓர் எழுத்தாளரானால்...
நான்
ஓர் எழுத்தாளரானால்......... நினைத்த பொழுதிலே மனமெல்லாம் ஒரே மகிழ்வு உடலிலும்
கூடப் புது உற்சாகம் பரவுவதை உணர்கின்றேன். தொடர்ந்து வந்த கற்பனைகளோ,
அடர்ந்ததொரு காட்டருவியாய்ப் பெருக்கெடுக்கின்றன. கட்டவிழ்ந்தோடும்
மனக்குதிரையின் பின்னே நானும்......
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது ஆன்றோர் ஆக்கிய பொன்மொழி.
எண்ணென்பது கணிதமாகவும் எழுத்தென்பது மொழியாகவும் மிளிர்கிறது. கணிதமோ அன்றிக்
கலையோ எதுவும் தனித்து இயங்கிப் பயனே இல்லை. இயந்திர உலகினுள் எழுத்துப் புகுந்து
கொள்கின்ற போதுதான் அழகுணர்ச்சி பிறக்கிறது. அழகுணர்ச்சியே அன்பு, பண்பு, கருணை, பொறுமை போன்ற
நற்பண்புகளுக்கு வித்தாக உள்ளது. ஆகவே, ஒழுக்கம் கொண்ட அழகிய
உலகத்தை எழுத்தின் மூலமாக அமைக்க முடியும். இத்தகைய பெருமை மிக்க எழுத்தை
ஆள்பவன்தான் சமூகத்தில் எழுத்தாளனாகப் போற்றப்படுகின்றான்.
எழுத்தாளன்
என்பவன் நற்கருத்துக்களைச் சமூகத்திற்கு வழங்க வேண்டியவனாகின்றான். எனது ஆசை
நிறைவேறினால்...... நானும் இயலுமானவரை நற்கருத்துக்களைப் பரப்புவேன். சிக்கலான
சொற்கட்டுக்களால் என் சிந்தனையாற்றலை வெளிக்காட்டுவதில் எனக்கு எப்போதுமே
சம்மதமில்லை. பழகிய வார்த்தைகளைக் கோர்த்துப் பாமரர்க்கும் புரியும்படி இலகு
தமிழில் எழுதுவதே என் வழக்கமெனக் கொள்வேன். இனிய வார்த்தைகளைத் தேர்ந்து நான்
படைக்கும் நூல்கள் எனக்குப் புகழும் பெருமதிப்பும் சேர்க்கும்.
"படைக்கப்படும் போது மனிதர்கள் சமமாகவே படைக்கப்படுகிறார்கள்" என்பது
அறிஞர் கூற்று. ஆனால் வளர்கின்ற சூழ்நிலையில் மனிதன் எதிர்கொள்ளும்
சந்தர்ப்பங்களாலேயே அவன் மாற்றமுறுகின்றான். ஆகவே குழந்தைப் பருவத்திலேயே அவர்கள்
மனதில் பதியும் நல்லொழுக்கப் பாடல்களையும் கூட நான் இயற்றுவேன். ஏழைக்குழந்தைகளாக
இருந்தாலும் ஐந்தாம் வகுப்புவரை பெரும்பாலானோர் பள்ளிப்படிப்பை மேற்கொள்கிறார்கள்.
இக்குழந்தைகளுக்காகவும் பல நூல்களைப் பிரசுரித்து வழங்குவேன்.
இன்றைய
எழுத்துலகத்தின் நிலை என்னை மிகவும் வருத்தப்படுத்துவதுண்டு. ஏனெனில் பணத்தை
அடிப்படையாகக் கொண்டே இப்போது பல சஞ்சிகைகள், நாவல்கள்
வெளியிடப்படுகின்றன. இவை மலிவுவிலை மட்டுமல்ல, இவை மட்டமான
ரசனைகளையுடையன. விற்பனைக்காக வேண்டி விரும்பத்தகாத படங்களையும் கூட இவற்றில்
பிரசுரிக்கின்றார்கள். வயது வேறுபாடின்றி பலரும்தினால் பாதிப்புறுகின்றார்கள்.
இதற்கான உடனடி விளைவுகள் மறைமுகமானவையே. ஆனால் காலப்போக்கில் இவை நிச்சயமாகத்
தீயவிளைவையே ஏற்படுத்தவல்லன. இவற்றைத் தணிக்கை செய்து தரமாகப் பிரசுரிக்கக்
கிராமங்கள் நகரங்கள் தோறும் கழகங்கள் நிறுவுவிப்பேன். இவ்வமைப்புகள் இளம்
எழுத்தாளர்களைத் தூண்டி நல்ல படைப்புக்களைச் சமூகத்திற்கு வழங்க உதவும்.
இக்கழகங்களூடாகப் பரந்த அளவில் அறநெறித்துண்டுப் பிரசுரங்களை ஆக்கி
விநியோகிப்பேன். வளர்ந்து வரும் எழுத்தாளர்களுடன் கையெழுத்துப் பிரதிகள் பல செய்து
நூலகங்கள், கிராமங்கள் தோறும் வலம் வரச் செய்வேன். இதனால்
பல்வேறுபட்ட இரசனைகள், கருத்துக்கள் என்பனவும் சமூகத்துக்கு
வழங்கப்படுகின்றன. இலைமறை காயாய்க் கிடக்கின்ற இளம் எழுத்தாளர்கள் இதனால்
இனங்காணப்படுவார்கள்.
இன்னும்
வேதங்கள் போல விளங்காத கடினத் தமிழில் உள்ள நூல்களை இலகு தமிழில் மீள்பதிப்புச்
செய்வேன். இதனால் ஆழ்கடல் முத்தன்ன அரும் பெரும் பொக்கிஷங்கள் பல வெளிச்சத்துக்கு
வர இடமுண்டு. அத்துடன் ஆன்மீகப் பேரொளியும் பரவ வழி கிடைக்கும்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தல்
வேண்டும்" என்ற பாரதியின் குரல் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பல்வேறு மொழி ஆற்றல்களை வளர்த்து இதை நிறைவேற்ற நானும் முயல்வேன். இறவாத புகழுடைய
புதுநூல்கள் இயன்றவரை நான் செய்வேன்.
இருண்ட
பிரதேசங்களில் எல்லாம் என் படைப்புக்கள் ஒளி வழங்கும் சூரியனாய் உலாவரும்
அறிவியலிலும் கூட இயன்றவரை நூல்கள் எழுதுவேன். விஞ்ஞானப் புனைகதைகள்,
நாவல்கள், சிறுகதைகள் என்பவற்றை
நற்கருத்துக்களை மையமாக்கி அமைப்பேன். நாடகங்கள் பல எழுதி முன்னேற்றக் கழகங்களின்
உதவியுடன் அரங்கேற்றுவேன். என் ஆக்கங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் நல
விளைவுகளினால் பெருநிறைவடைவேன்.
சமூகத்தின்
வளர்ச்சிக்கு வேண்டிய கருத்துக்களை வானொலி, தொலைக்காட்சி
என்பவற்றினூடாக இலகுவில் பரப்ப முடிகின்றது. எனவே என் கவிதைகள், சிறுகதைகள் நாடகங்கள் என்பவற்றை இச்சாதனங்களின் உதவியுடன் சமூகத்துக்கு
வழங்குவேன். இலக்கியத் தரம்மிகுந்த படைப்புக்களும் பல செய்வேன்.
எழுத்தாளனின்
எழுதுகோல் போர்வாளிலும் கூரியது என்பார்கள். எங்கெல்லாம் தர்மத்தின் குரல்வளை
நெரிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் என் பேனா போர் தொடுக்கும். இதனால் தீமைகளை
எடுத்துக்கூறி சமுதாயமே திரண்டு தீங்குகளை எதிர்க்கச் செய்வேன். இன்றைய உலகில்
யுத்த உணர்வுகள் தீவிரப்பட்டு வருகின்றன. அவை நீங்கி சமாதான ஒளி விரிந்து சந்தோஷம்
நிலவ எனது படைப்புக்களும் துணை செய்யும்.
இன்னும்
இன்னும் கற்பனைகள் உள. பிறப்பின் பயனை மேம்படுத்தவும் இறப்பின் பின்னும் அழியாது
என் புகழ் ஒளி விரிக்கவும் சமுதாயத்தை வழிப்படுத்தவும் என் எழுத்துக்கள் உறுதியாய்
உதவும் என்ற நம்பிக்கை உண்டு. நாளைய என் வெற்றியை காலம் பதிவு செய்யும்!
3. சூழல்
மாசடைதல்
மனிதனதும்
வேறு காரணிகளதும் செயற்பாடுகளின் விளைவாகப் பல பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.
இவை நியம மட்டத்தை மேவும் போது சூழல் மாசடைதல் ஏற்படுகின்றது. இதனால் பூமியானது
பேராபத்தை எதிர்நோக்குகின்றது. இம் மாசடைதலானது நிலம்,
நீர், வளி ஆகியவற்றில் பாதிப்பை
ஏற்படுத்துகிறது. மேலதிக ஒலியும் அதீத சக்திவாய்ந்த கதிர்களும் கூட சூழலை
மாசுபடுத்திக்கின்றன.
முதலில்,
நிலம் மாசடைதலை எடுத்துநோக்குவோம். செயற்கை உரம், கிருமி கொல்லிகள், பீடைநாசினிகள் மற்றும்
விவசாயத்துக்கான இரசாயனப் பொருள்கள் என்பன மண்ணில் செறிவூறுகின்றன. இதனால் மண்ணின்
இயல்பு பாதிக்கப்படுகிறது. மண்ணில் காரத்தன்மை அல்லது அமிலத்தன்மை ஏற்படுகின்றது.
இதனால் மண் பயிர்ச்செய்கைக்குப் பொருந்துவதாக அமைவதில்லை. இந்த இரசாயன வளமாக்கிகள்
மழையின்போது நீர் நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு நற்போஷணை நிலை
ஏற்படுகின்றது. நீர்ப்பரப்பின் மீது அல்கா மூடுபடை தோன்றுகிறது. ஆதலால் நீர்ச்
சூழற்றொகுதி பாதிக்கப்படுகின்றது. மேலும் கால்நடைகளின் கழிவு சுயாதீனமாக மண்ணில்
விடப்படுவதால் துர்நாற்றம், சிதைவு என்பன ஏற்படும்.
பிரிகைக்கு உட்படாத "பிளாஸ்ரிக்" (plastic) பொருள்கள்,
தொழிற்சாலைக் கழிவுகள் மண்ணில் தேங்குதலும் நீங்காரும் நோய்
பரப்பும் அங்கிகளின் உடம்பிகளும் ஆங்காங்கு இருக்கும் குழிகளில் தேங்கும் நீரில்
பெருகுகின்றன. காடழித்தலால் வளிமண்டலத்திலே மாற்றம் ஏற்பட்டுப் பருவகாலச்
சூழற்சியில் மாற்றம் ஏற்படுகின்றது. வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு
அதிகரிக்கின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படுகின்றது.
இது "முழு உலகளாவிய வெப்பமுறல்" எனப்படுகின்றது. மண்ணிற் தேங்கும் பார
உலோகங்கள் உணவுச் சங்கிலி வழியே செறிக்கப்படுகின்றன.
இவ்வாறெல்லாம்
மனிதன் பெரும் அபாயத்துக்கு உள்ளாகின்றான்.
நீர்
மாசறுதலை எடுத்துக் கொண்டால், தொழிற்சாலைக் கழிவுகள்,
வெப்பமடைந்து பதங்கெட்ட நீர் போன்றன நீர்நிலையை அடைவதால் நீர்நிலை
மாசுறுகின்றது. நீர்வாழ் அங்கிகள் இறக்கின்றன. வெப்பமடைந்த நீரில் ஓட்சிசன் கரைவது
குறைவாகையால் ஓட்சிசனை நம்பியிருக்கும் அங்கிகளுக்குப் பெருமளவு தீங்கு ஏற்படும்.
அணுகுண்டுப் பரிசோதனைகள் நீரில் நடத்தப்படுவதால் நீர்வாழ் உயிர்கள் கதிர்வீச்சால்
பாதிக்கப்படுகின்றன. எண்ணெய்க் கப்பல்களிலிருந்து நீரில் விடப்படும் எண்ணெய்க்
கழிவுகள் நீர்மேற்பரப்பில் ஒரு படையாக மிதப்பதால் ஒளியும் வளியும் செல்லுதல்
தடைப்படுகின்றது. பார உலோகங்களான இரசம், செப்பு என்பன
நீர்நிலைகளில் படியும்போது நீர்வாழ் உயிர்களின் உடலில் அவை சேருகின்றன. பின் கடல்
உணவுகள் மனிதனால் உள்ளெடுக்கப்படும்போது மனித உடலினுள் புகுகின்றன. இவை
நச்சுத்தன்மையானவை. தீமை விளைவிக்கக் கூடியவை.
வளி
மாசடைதலை நோக்கினால் பெருந் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுகளும் பக்கவிளைவால்
ஏற்படும் பொருட்களும் வளிமண்டலத்திற்கு விடப்படுகின்றன. சீமெந்து,
தூசி, நச்சுத்தன்மையான வாயுக்கள் அவற்றில்
சிலவாகும். வாகனங்களின் எரிபொருட் புகை, காபனோரொட்சைட்டு,
காபனீரொட்சைட்டு, ஈயவீரொட்சைட்டு என்பவற்றைக்
கொண்டுள்ளது. காபனோரொட்சைட்டு வாயு, சுவாசத் தொகுதியில்
நோய்களை ஏற்படுத்தும். கதிரியக்கப் பரிசோதனைகளால் அதீத சக்திவாய்ந்த கதிர்கள்
வளிமண்டலத்தை அடைகின்றன. விண்வெளிப் பயணங்கள், ஏவுகணைகளின்
பயன்பாடு என்பவற்றின் போது வெளிவிடப்படும் புகையும் வளிமண்டலத்தை
மாசுபடுத்துகின்றது. இதனாலும் குளோரோ புளோரோக் காபனின் செயற்பாட்டினாலும் ஓசோன்
படையில் துளை ஏற்பட்டு, அது விரிந்து செல்கின்றது.
ஓசோன்
என்பது பூமியை சக்திவாய்ந்த கதிர்களிடமிருந்து காப்பாற்ற இயற்கையாக பூமியைச்
சுற்றியமைந்த பாதுகாப்புப் படையாகும். இந்த உன்னதமான இயற்கைப் பாதுகாப்புப்
படையில் ஏற்பட்ட ஓட்டையானது பூமியின் உயிர்வாழ்வுக்கே பெரும் அச்சுறுத்தலாக
உள்ளது. இதனால் புற ஊதாக்கதிர்கள் வடிகட்டப்படாமல் பூமியை அடைகின்றன.
இன்றைய
உலகின் சனத்தொகை தீவிரமாகப் பெருகி வருகின்றது. மனித தேவைகளும் பெருமளவில்
அதிகரித்துள்ளன. இதனால் குடியேற்றத்திட்டங்கள், கட்டட
உருவாக்கங்கள், சேனைப்பயிர்ச்செய்கைகள், வீதி விஸ்தரிப்புக்கள், நீர்ப்பாசனத்திட்டங்கள்
என்பனவும் அதிகரித்துள்ளன. ஆகவே காடழித்தல் மிகப் பெரும்பாலும்
மேற்கொள்ளப்படுகின்றது. இதன் விளைவாக, வளிமண்டல
காபனீரொட்சைட்டு அதிகரிக்கின்றது. எனவே துருவப் பனிக்கட்டிகள் உருகலாம்.
நீர்ப்பரப்புக் கூடி நிலப்பரப்புக் குறையலாம். இதற்குத் தீர்வாக மீளவளமாக்கலைத்
தீவிரப்படுத்திக் காடழிப்பைக் குறைக்கலாம்.
மேலதிக
ஒலி,
வெப்பம், சக்தி என்பன அவதி மட்டத்திலும்
அதிகரிக்கும்போது இயற்கைச் சமநிலை குழப்பப்படுகின்றது. இது மனித விலங்குகளின்
ஆரோக்கியத்துக்குத் தீங்கு பயக்கின்றது.
இவ்வாறான
மாறுதலைத் தவிர்க்க இரசாயனப் பொருள்களின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். இயற்கை
வளமாக்கிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைக் கழிவுகளை மனித
சுகாதாரத்துக்குட்பட்ட வழிகளில் வெளியேற்றுதல் நன்மை தரும். வாகன எரிபொருள்களாகப்
புகை குறைந்த மூலப் பொருளைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். பத்திரிகை,
வானொலி மூலம் அறிவுரை வழங்க முன்னேற்றக் கழகங்கள் முன்வர வேண்டும்.
காடழித்தல் இயன்ற அளவில் தடை செய்யப்பட வேண்டும். கைத்தொழில் விருத்திமிக்க இந்த
யுகத்தில் இயலுமானவரை சூழல் மாசறுதலைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். இயற்கைச்
சமநிலை குழம்பாது இனியதொரு பூமி உருவாக வழி செய்ய வேண்டும்.



