1. தமிழின் பெருமை (The Greatness of Tamil)
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்! குமரி முதலாக இமயம் வரையாக முடிகொண்டு வாழ்ந்த முத்தமிழ்! தன்னிகரற்ற காவியங்கள் பலவற்றைத் தன்னாரணமாகப் பூண்ட தண்டமிழ்! ஆம்! செந்தமிழ்ப் பெருமை சொற்களுள் அடங்காது. எனினும் இமயத்தின் பெருமையைச் சிறுகல் செப்புவது போல, சில கருத்துக்களைச் சொல்ல நினைக்கின்றேன்.
ஆதி
மனிதன் மொழி புரியாது, வழி தெரியாது தவித்தான்.
நாள்கள் நகரப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தொடங்கினான். சமிக்ஞைகள்
வளர்ந்து சொற்களாயின. பல்வேறு மொழிகள் பிறந்தன. மொழிக்கேற்ப நாகரிகங்கள் உருவாகின.
நாகரிக மேம்பாட்டின் அடிப்படை “மொழிப் பயன்பாடு” என்பது அனைவரும் அறிந்ததே. திராவிடக்
கூட்டத்தின் தனித்துவ முன்னேற்றத்திற்குச் காலாகத் தமிழ் மொழியே விளங்கியது.
வடமொழியும்,
ஆங்கிலமும், சிங்களமும், பிரெஞ்சும், இலத்தீனுமாகப் பல மொழிகள் தற்போது
பாவனையிலுள்ளன. முந்தைய காலத்து மொழிகள் பல இப்போது பேச்சு வழக்கில்
மட்டுமேயுள்ளன. சில எழுத்து வழக்கில் மட்டும் உள்ளன. வேறு சிலதோ காலச் சுழற்சியில்
கரைந்து, பேச்சு வழக்கிலும், எழுத்து
வழக்கிலும் இல்லாது ஒழிந்துபோய் விட்டன. சில மொழிகள் மிகச் சொற்ப எண்ணிக்கையினராலே
தான் பேசப்படுகின்றன. ஆனால் தொன்மைத் தமிழ் மொழியோ இன்று வரை எழுத்து, பேச்சு ஆகிய இரு வடிவத்திலுமுள்ளது. கூடவே மிகப்பரவலாக உலகெங்கும்
பேசப்படும் மொழியாகவும் திகழ்கின்றது.
தமிழ்
மொழியானது 247 தனி எழுத்துக்களைத் தன்னகத்தே
கொண்டது. இவற்றில் தமிழுக்குச் சூட்டிய அழகுக் கிரீடமாக “ழ” கரம் விளக்குகிறது. மலையாளம் தவிர்ந்த வேறெந்த மொழியிலும் இது
காணப்படவில்லை.
தமிழின்
“ழ”,
“ள”, “ல” வேறுபாடுகள் இசையொலியில் இனிமை
பரப்புவன. தமிழின் இனிமையும் மென்மையும் தன்னிகரற்றன. மொழிச் சிறப்பின் தாக்கத்தை
அந்தந்த மொழிகளின் இசைக்கோலங்களில் காணலாம். மேலைத்தேய இசைகளில் இல்லாத ஓர்
அமைதியான, அற்புதமான நிறைவைத் தமிழ்ப்பாடல்களைக் கேட்கின்ற
போது உணரலாம். இதனால்தான் “தமிழுக்கும் அமுதென்று பேர்,
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று
பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.
ஆதியிலே
பிறந்த மொழிகளாய் ஆரியமும் தமிழும் கருதப்படுகின்றன. இவற்றிலிருந்து பல மொழிகள்
பிறந்து வளர்ந்தன. தாய்மைச் சிறப்புத் துலங்கும் இவை தொன்மையும் செம்மையும் உடையன.
இதில் வடமொழித் தாயின் குழந்தைகள் மட்டுமே உயிரோடு இருக்க,
தென்மொழித் தாயான தமிழோ தன் குழந்தைகளுடன் மங்காப் புகழ் பெற்று,
குன்றாத இளமையுடன் திகழ்கிறது. கன்னடமும் களிதெலுங்கும் கவின்
மலையாளமும் துளுவும் தமிழின் பிள்ளைகளாகத் தோன்றின. பல மொழிகள் நாட்டு வழக்கற்றும்
ஏட்டு வழக்கற்றும் போக நற்றமிழ் மட்டும் நானிலம் போற்ற நளினமாய் நடைபயில்கிறது.
இன்னும் தமிழ் ஒரு திரிசொல்லாய் பல்வேறு மொழிகளுள் புகுந்து பரவியுள்ளது.
“யாமறிந்த மொழிகளுள்ளே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”
என்றார் மகாகவி பாரதியார். ஓசைக்கும், ஒலிக்கும்
இடையே நுணுக்கமான வேறுபாடு தமிழில் உண்டு. தமிழுக்கு மட்டுமே உரியதாய் சிறப்பொலிகளும்
சிறப்பெழுத்துக்களும் கூடக் காணப்படுகின்றன. இதனால்தான் சந்தம் மிகுந்த பல
ஒவியோவியங்கள் செந்தமிழில் காணப்படுகின்றன. கம்பராமாயணக் காட்சிகள் இதற்கு நல்ல
சான்றுகளாகும். திருப்புகழ் தெய்வத் தமிழினைச் சிறப்பிக்கும் சொல்லோவியமாகத்
திகழ்கிறது. உதாரணமாக “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடலின் தமிழொலிச்
சந்தம் கேட்டால் மட்டுமே உணரத் தக்க அழகுடையது.
தோற்றப்
பொலிவில் கூட ஏற்றம் மிக்கது தமிழ் என்று புகழப்படுகின்றது. ‘சில மொழிகள் சற்றே
மிகையாய் நாண, ஆங்கிலம் நாணமற்ற நங்கையர் போலிருக்கத்
தமிழ்தானே அளவோடு நாணும் நளினப் பெண்ணாய்த் தோற்றமளிக்கிறது’ என்பது ஒரு கவிஞனின்
கூற்றாகும்.
தமிழ்
தந்த காப்பியங்கள் எண்ணுக் கணக்கற்றவை. பொய்யாமொழிப் புலவர் செய்த திருக்குறள்
பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பாவனையிலுள்ளன. ஐம்பெரும் காப்பியங்களும்
தமிழை இன்னும் அழகுபடுத்துகின்றன. பழகு தமிழில் பாரதியார் இயற்றிய கவிதைகளும்
புகழ் பெற்றவையே. இலகு தமிழில் இன்றிக் கடினத்தமிழ் நூல்களான தொல்காப்பியம்,
நிகண்டு என்பனவும் பெரிதும் பொருள் பொதிந்த பொக்கிஷங்களாகும்.
இரண்டே அடிகளில் இவ்வகிலம் அளந்த குறளின் தகைமை கருதினால், உலகமே
தமிழுக்குள் அடங்கிப் போனது எனினும் மிகையல்ல. இச்சிறப்பு வேறெந்த மொழியில் உண்டு?
ஆனால்
இத்துணை சிறந்த எம் தமிழ் இன்று வெறும் நாகரிக மோகத்தால் கொச்சைத் தமிழாய்த்
தலைகுனிந்து நிற்கும் சந்தர்ப்பமும் உண்டு. பிற மொழி மோகம் பலரையும் ஆட்டிப்
படைக்கிறது. தமிழ்ப் பாடல்கள் என்ற போர்வையுள் மேலைத்தேய இசைக்கோலங்கள் பல மறைந்து
கிடக்கின்றன. சங்கத்தமிழ்ப் புகழ் மங்கிச்செல்லும் அபாயம் நெருங்குகிறது. மொழிக்
கலப்பால் தமிழின் தனித்துவ அழகு சிதைகிறது; இனிமை
கெடுகிறது.
இவ்வேளையில்,
தமிழ் வளர்த்த பெரியோரின் வரலாறுகள் மீட்டுப் பார்க்கப்படவேண்டும்.
“முன்னைப் பழம்பொருட்டு முன்னைப் பழம்பொருளாய், பின்னைப்
புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனாய்” வாழ்கின்ற இறைவன் போல, எம்மொழி தன்னிலை மாறாது வாழ மாணவ சமுதாயம் பாடுபட வேண்டும். தெளிவாகத் தனி
அழகு சிதையாதபடி பன்மொழியறிவைப் பெற்றுக்கொள்ளவேண்டும். தேமதுரத் தமிழோசை
உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்.
“எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே.”
2. ஆங்கிலக்
கல்வியின் முக்கியத்துவம் (The Importance of English Education)
நீளமாய்ப்
பரந்து நிலமும் வெளியும் நீலக்கடலும் மலையும் மஞ்சுமாகி வியாபித்திருக்கிறது
அகிலம். ஆயினும் ஆற்றல் மிக்க மனித குலத்தினிடத்தே அது கைக்குள் அடங்கியதாய்,
மனிதனின் காலடியில் காத்திருக்கிறது. அவ்வாறெனின் இந்நிகழ்வு
புவியியலில் விளைக்கப்பட்ட சடத்துவ மாற்றத்தினால் நிகழ்ந்ததா?
இல்லை!
அறிவியலில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியினால் ஏற்பட்ட விளைவு;
கால்நொடிப் பொழுதில் கணக்கிலாத் தூரம் கடந்து தொடர்பு கொள்ளும்
வல்லமை விளைத்த அற்புதம் இஃது!
இரு
மனிதர்களிடையே கருத்துக்களைப் பரிமாறுவதற்காகப் பரிணமித்த தொடர்பு கொள்ளலானது
இன்று எல்லையற்று வியாபித்து நிற்கின்றது. ஆயினும் இத்தொடர்பாடலின் அத்திவாரமாக,
அடிநாதமாக மொழியே விளங்குகின்றது.
நம்
மூதாதையரின் பரிணாமத்தோடு நூற்றுக்கணக்கான உலகியல் மொழிகள் தோற்றம் பெற்றன.
ஆயினும் அவற்றில் சில வழக்கிழந்தன. சில பேச்சுமொழியாக மட்டும் வழங்கி வந்தன;
சில மூலம் பிறழ்ந்து திரிந்து வளர்ந்தன. சில மொழிகள் மட்டும்
எழுத்திலும் பேச்சிலும் இலக்கண வரையறைக்குட்பட்டு இயங்கி வருகின்றன. இவ்வாறான
என்றும் வாழ்கின்ற மொழிகளில் மணிமுடி சூடி, மனித குலத்தின்
பொது மொழியாக விளங்குவது ஆங்கில மொழியேயாகும்.
ஆங்கில
மொழியானது இன்றைய உலகில் அதிமுக்கியமான தொடர்பாடல் வழியாக ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளது. ‘தொடர்பாடல்’ எனும் பதமானது தன்னகத்தே பாரிய பொருளையும்
பல்வேறுவிதமான செயற்பாடுகளையும் கொண்டிருக்கின்றது. இச்செயற்பாடுகள் யாவற்றுக்கும்
கைகொடுக்கின்ற ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தைச் சற்றே ஆராய்வோம்.
பூமியானது
மனிதரால் எல்லையிடப்பட்டு ‘நாடு’ எனும் அலகாக வகுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு நாடு,
சிலவேளைகளில் ஒரு நாட்டின் இருவேறு பிரதேசங்களில்கூட வாழும் மக்கள்
பல்வேறு இயல்புகளால் வேறுபடுத்தப்படுகின்றனர். இவ்வேறுபாட்டில் பிரதானமானது
பயன்படுத்தப்படும் மொழியில் காணப்படும் பாகுபாடாகும். தன்னை உணரச் செய்து தானும்
மற்றொருரை உணர்கின்ற திறனையும் வழங்குவது மொழியேயாகும். வேறு தனிமையாக்கப்படும்
தன்மையை நீக்கி, வெவ்வேறு மொழியாளரை இணைக்கின்ற பாலமாய்
ஆங்கில மொழி உதவுகின்றது.
இன்றைய
காலகட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகத் தேசங்கள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன.
எல்லைப்படுத்தப்பட்ட வளங்களும் வெவ்வேறுபட்ட அறிவியலாற்றலும் தங்கி வாழ்தலைத்
தீர்மானிக்கின்றன. ஆதலால் தேசங்களிடையே ஏற்படும் உறவுகளை வளர்க்கின்ற உற்றதுணையாக
ஆங்கிலம் விளங்குகின்றது.
ஆதி
நாள்களில், நம்முன்னோர் முயன்று பெற்ற அறிவுப்
பொக்கிஷங்கள் மொழியென்னும் சிறையுள் இட்டுப் பூட்டப்பட்டிருந்தன. அந்த அறிவுச்
செல்வத்தைப் பயன்படுத்தும் ஆற்றலை, அம் மொழியாகிய
திறப்பையுடையவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர்.
உதாரணமாக,
ஐரோப்பாவின் அறிவியல் மறுமலர்ச்சி ஏற்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்த
பல்துறைசார் அறிவியல் விற்பன்னர்கள் தங்களது அரிய கண்டுபிடிப்புக்களைத் தங்களது
தாய் மொழியில் வரையறுத்ததைக் கூறலாம். இவ்விடரினை நீக்கி, எல்லோரும்
அறிவினைப் பெறுவதற்கு ஆங்கில மொழி உதவியது. உதவுகின்றது. உதவும் அறிவியலின்
படைப்புக்களான ஆற்றல்கள் பெரும்பாலும் ஆங்கில மொழிமூலமே மக்களிடையே பரவுகின்றன.
ஏனெனில் உலகின் மூலை முடுக்கெங்கும் ஊடுருவி, வேர்பிடித்து,
உலா வருவது ஆங்கில மொழியேயாகும். எனவே சகல மட்டத்தினருக்கும் ஆற்றலை
வளர்க்க, அறிவை உயர்த்த ஆங்கில மொழி உதவுகின்றது.
ஒரு
பிரிவுமில்லாப் பூமியானது பண்பாடு, பொருளாதாரம்
என்பவற்றினால் மேலைத்தேயம், கீழைத்தேயம் எனப் பாகுபடுத்தப்படுகின்றது.
பொய்யான யாவையும் நீக்கி மெய்யான ஒன்றைப் பற்றுதலே வாழ்வு என்கின்றது கீழைத்தேயம்.
ஆற்றலின் ஊற்றுக்கண்ணாய் அறிவை நம்பி வாழ்கின்றது மேலைத்தேயம். இவ்விரு
துருவங்களாக வேறுபட்டு நிற்கின்ற இரு பிரதேசங்களும் தங்கள் கொள்கைகளைப் பரிமாறிக்
கொள்ளும்போதெல்லாம் ஆங்கிலமே அங்கு கைகுலுக்கிக் கொள்கின்றது.
இதற்குச்
சான்றாக திருக்குறளும் கீதாஞ்சலியும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதைக்
கூறலாம். அறிவியல் நூல்கள் ஆங்கிலத்திலிருந்து பிறமொழிக்கு பெயர்க்கப்பட்டதைக்
கூறலாம். இவ்வாறாக ஆங்கிலம் அன்பை வளர்க்கின்றது. அறிவைப் பெருக்குகின்றது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பை வளர்க்கின்றது. (பண்பாடுகளைப் பலரும்
அறியச் செய்கின்றது.) மேதை மொழியெனப் பலராலும் போற்றப்படுகின்ற ஆங்கிலம்
அளிக்கின்ற சேவைகள் மிகப்பல.
இவ்வாறு
பல அருமை பெருமைகளையுடைய ஆங்கில மொழியைப் பயில்வதற்கு சர்வதேசமும் விழைகின்றது.
இதன்படியே எங்கள் நாடும் ஆங்கில மொழிக்குப் பாடவிதானம் ஆக்கியுள்ளது. ‘ஐந்தில்
வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது ஆன்றோர் சிந்தனை. அதனாற்றான் இளவயது முதலே
ஆங்கிலத்தைப் புகட்டுவதும் பெறுவதும் அனைவர்க்கும் இயன்ற செயலாகின்றது.
குறித்த
தேசத்துக்கு மட்டுமுரிய மொழியானது கிணற்றுநீரை ஒத்தது. அதாவது தேவையை
நிறைப்பதாயினும் அதன் உள்ளடக்கம் குறுகியதேயாகும். ஆனால் ஆங்கில மொழியோ பொங்கிப்
பாய்கின்ற நதியொன்றின் உத்வேகத்துடன் நானிலத்தை அளந்து வருகின்றது. நன்மை பல
விளைக்கின்றது. ஆதலால் ஆங்கிலக் கல்வியின் அளப்பரிய நன்மை உணர்ந்து அதனைப்
போற்றிக் கற்போமாக!
3. அநாதைச்
சிறுவனின் சுயசரிதை (Autobiography of an Orphan Boy)
அன்னமில்லா
வயிறும் கண்ணீரு கோடாகக் கண்ணீர் ஆறும் அடையாளங் காட்டுகின்ற அநாதைச் சிறுவன்
நான். வானமே என் கூரை; பூமியே என் வீடு; புது மகிழ்வும் பெருநிதியும் பெருகிவரும் சொந்தங்களும் பாவியென் வாழ்வில்
பரிணமிக்காத வசந்தங்கள். ஆம்! கந்தலுடையும் நொந்த மனமும் சொந்தமாகக் காலம்
முழுதும் காரிருள் சூழ்ந்த பாழ்வெளியில் வாழ்நாளை ஓட்டும் பாவி நான்.
இலையுதிர்கால
இருள்வேளையொன்றில் தெருவோரக் குப்பைத்தொட்டி என்னைப் பூமியின் சுயோகப்
பரிசளித்தது. பாதையோர வழிப்போக்கர் யாரோ என்னில் பரிதாபம் கொண்டு பக்கத்திலுள்ள
அநாதைச் சிறுவர் இல்லத்தில் என்னை விட்டுச் சென்றனர். பனிப்பொழுது குளிரால்
கொடுமைப்படுத்தியது. மழைப்பொழுது நோயால் வருந்தச் செய்தது. பாலகனான நான் அன்பான
அரவணைப்பின்றி அடைந்த துயரங்கள் இன்றும்கூட என் நினைவுகளில் சுமையேற்றுகின்றன.
என்னையொத்த
அநாதைச் சிறுவர் பலர் அவ்வில்லத் தில் இருந்தார்கள். ஆயினும் கண்ணீர்க் காயத்தைத்
துன்பம் விசாரிக்க முடியுமா? ஒவ்வொருவரும் தம்
துன்பமே தாளவொண்ணாதது என்று எண்ணியிருந்தோம். அத்துடன் பற்றும் நட்பும் பரந்த
மனப்பாங்கும் அர்த்தம் புரியப்படாத சிறு வயதுதானே! ஆதலால் சின்ன விடயங்களும்
எங்களிடையே சச்சரவுகளைத் தோற்றுவித்தன. சந்தோஷங்களையும் சீர்குலைத்தன.
காலை,
மதியம், இரவு என காலம் யாவும் வயிற்றுப் பசி
தீர்த்தலே, எம் வாழ்வின் குறிக்கோளானது. ‘கல்வி’ எனும்
சொல்லே எங்கள் காதுக்கும் எட்டவில்லை. கல்வி தாழ்வை நீக்கும்; வாழ்வை உயர்த்தும் என்று எங்களுக்கு யாருமே சொல்லியிருக்கவில்லை. அத்துடன்
முண்டியடித்து, முன்வரிசையில் நின்று அரைவயிறு நிரப்பும்
எங்கள் நிலையில் எங்களுக்கு வேறு எதுவுமே தேவைப்படவில்லை.
ஆனால்
விதிக்குத் தன் விளையாட்டுப் போதாததாக இருந்திருக்க வேண்டும்! ஆம் விதியின் சதி
என் கண்ணில் வற்றாத கண்ணீர் நதியை நிரந்தரமாக்கிவிட்டது.
இருள்கலாத
ஒரு பனிப்பொழுதில் எங்கள் இல்லத்துக்குத் தேவையான குடிநீரை எடுப்பதற்காகத்
தெருவைத் தாண்ட முயன்றேன். அவ்வேளையின் ஒருகணம், என்
வாழ்வில் அழிக்க முடியாத துன்பத்தை ஏற்படுத்திவிட்டது. விரைந்து வந்த இராட்சத
வண்டியொன்று கண்ணிமைப் பொழுதில் என்னை மண்ணில் வீழ்த்தியது. என் இடக் காலைத்
தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டது. ‘இறந்துவிடுவேன்’ என எதிர்பார்க்கப்பட்ட நான்
துரதிஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டேன். ‘அநாதையோடு’ ‘நொண்டி’ எனும் அடைமொழியும்
சூட்டப்பட்டு இல்லம் மீண்டேன்.
கொடிய
அந்தகாரம் சூழ்ந்த என்னுடைய அந்த நாட்கள்...... நாளொரு துன்பமும் பொழுதொரு
கண்ணீருமாய்ப் போன அப்பொழுதுகள்...... அவை சின்னஞ்சிறிய என் இதயத்தைச்
சின்னாபின்னமாக்கி எந்த நாளும் கண்ணீரைப் பெருக்கின.
என்
கடமைகளையே என்னால் செய்யவியலாத சிறு பிராயத்தில் மற்றச் சிறுவர்களின்
துன்புறுத்தலுக்கும் ஆளானேன். துண்டிக்கப்பட்ட என் காலுக்கு அவர்கள் செய்த துன்பம்
தாழாமல் அழுதேன். என் ஊன்று கோலைப் பற்றி இழுக்கும்போது முள்ளிலும் கல்லிலுமாய்
விழுந்தேன். ஆயினும் இளவயதின் கொடிய துன்பங்கள் தானே அவர்களையும்
இரக்கமற்றவர்களாக்கியது என்றெண்ணித் தெளிந்தேன். துன்பங்கள் யாவையும் வாய்மூடிச்
சகித்திருந்தேன்.
இந்த
நிலையும் போதாதென்று விதி எண்ணியது போலும்! வானம் பொழிந்து வெள்ளமாயோடும் ஒரு மழை
நாளில் நாங்கள் வாழிடமும் ஆதரவும் இழந்தோம். யாரு மற்று நடுத்தெருவில்
விடப்பட்டோம். ஆம்! வயதான எங்கள் இல்லத்து நிர்வாகி இறைபதம் எய்திவிட்டார்.
தனியார் நடாத்திய நிறுவனம் என்பதனால் எம்மை பராமரிக்க யாருமே தயாராயில்லை.
தகிக்கும் வயிற்றுக்கு ஒரு கவளம் அன்னமிட எவரும் முன்வரவில்லை.
செய்வதறியாத
அச்சமும்,
தாங்கமுடியாத பசியும் கண்ணீரை பரிசாய்த் தந்தன. இறுதியில் கையேந்தி
வைத்தன. அன்று முதல் குறுகிய மனமுள்ள மாந்தர் முன் கூலிக் குறுகி நின்று சிறு
பொருள் பெற்றேன்.
ஆரம்பத்தில்
இரத்தலை எண்ணி வெறுத்தேன். அவமானம் என்று குறுகி நின்றேன். ஆயினும் அநாதை,
நொண்டியான இந்தப் பிச்சைக்காரச் சிறுவனை ஆதரிப்போர் எவருமில்லை
என்பதை உணர்ந்தேன். ‘உழைக்க வேண்டும்’ என்ற என் உணர்வுக்கு மதிப்பளித்து வேலை
கொடுக்க எவரும் விரும்பவில்லை.
ஊனத்தைப்
பார்த்து ஒதுக்கி வைத்த உலகமே என்னை மீண்டும் இரக்க வைத்தது. தெருநீள நடந்து
விரும்பாத தரும் பொருளைப் பெற்று பசியாறச் செய்தது. பிச்சையெடுக்கும்
சிறுவனொருவனைப் பிறக்கச் செய்தது. கால நகர்வினில் பல்வகை மாந்தரும்,
பரந்த இந்த உலகமும் பழக்கப்பட்டு விட்டன. மெல்லிய உணர்வுகள்
இழக்கப்பட்டுவிட்டன. மரத்துப்போன மனத்துடன் என் மனம் விரும்பாத வாழ்வு
நீள்கின்றது.
இளவயதின்
இனிய கனவுகள் நான் அறியாதவை. பாசமாய் அரவணைக்கும் நேச உள்ளங்கள் நான் பார்க்காதவை.
துன்பம் அறியாமல் துள்ளி விளையாடும் காலம் என் வாழ்வில் எள்ளளவும் இருக்கவில்லை.
வாழ்வின் சுமைகளைத் தோளில் ஏற்றித் தடுமாறி வழிநடக்கும் ஏழை நான். பெற்றவரால்
வெறுக்கப்பட்டு வெறுமையான மனத்துடன் வீதிகளில் அலையும் என் துன்பத்தை உரைப்பதற்கு
வார்த்தையில்லை. ஆயினும் என்றாவது என் துன்பம் தீரும் என்ற நம்பிக்கைக்
கீற்றொன்றில் உயிர் பற்றி என் வாழ்க்கை தொடர்கின்றது.



