சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

ஒரு பெரிய காடு இருந்தது. காடு இருந்ததால் மழையும் பெய்தது. காட்டில் மரங்கள் செழித்து வளர்ந்தன. படர்கொடிகள் மரங்களில் படர்ந்து பூத்தன. காய்த்துப் பழுத்தன. பழங்கள் பறவைகளுக்கு உணவாயிற்று. தேன் கூடுகள் மரங்களில் தொங்கின. காடெங்கும் பசுமையாக இருந்தது. சிற்றாறுகள் ஊடறுத்து ஓடின. ஆங்காங்கே காட்டுக் குளங்கள் இருந்தன.

சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

அவற்றில் தண்ணீர் நிறைந்திருந்தது. பறவைகளும் மிருகங்களும் சந்தோசமாக வாழ்ந்தன.

அந்தக் காட்டுக்கு மனிதர்கள் வந்தார்கள். காட்டின் பசுமையைக் கண்டார்கள். வற்றாத நீர்நிலைகளைக் கண்டார்கள். ஈரமான நிலத்தினையும் பார்த்தார்கள். மரங்களைத் தறித்தார்கள். செடிகளை வெட்டித் தள்ளினார்கள். அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். காடு எரிந்து சாம்பலானது. காடுகள் அழிக்கப்பட்டன.

நிலத்தில் சேனைப் பயிர் செய்தார்கள். படிப்படியாக காடு சுருங்கியது. கிராமங்கள் தோன்றின. பெரிய காடு சிறிதாகிக் கொண்டு வந்தது. மிருகங்கள் ஒதுங்கியொதுங்கிச் சென்றன.

காடுகள் இருந்த இடங்களில் தற்காலிக வீடுகள் முளைத்தன. சேனைப் பயிர் தற்காலிக விளைவையே கொடுத்தது. நிலம் பசளையற்றுப் போயிற்று. மனிதர் புதுப்புது நிலங்களைத் தேடினார்கள். காடுகளை அழித்தார்கள். விலைமதிப்பற்ற மரங்கள் அழிந்தன. மூலிகைகள் நாசமாகின. சுட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினார்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டை யாடினார்கள். பறவைகளும் விலங்குகளும் அழியத் தொடங்கின.

ஒருநாள் கடும் மழை பெய்தது. வெள்ளம் தங்குதடையற்று பரவி ஓடியது. தண்ணீரைத் தடுப்பதற்கு மரங்கள் இல்லை. மண்ணரிப்பு ஏற்பட்டது. தரையின் வளத்தை எல்லாம் அரித்துப் போனது. அதன் பின்பு மழை வீழ்ச்சி குறைந்தது. ஆற்றிலும் குளத்திலும் தண்ணீர் வற்றியது. மனிதர்கள் ஆழக் கிணறுகளைத் தோண்டினர். காட்டு விலங்குகள் தவித்தன. ஊருக்குள் படையெடுத்தன. ஆனால் தண்ணீர் ஆழமான கிணற்றில் இருந்தது. விலங்குகளைக் கண்ட மனிதர் அவற்றை வேட்டையாடினார்கள். மிருகங்கள் சிதறி ஓடின. அவற்றைத் துரத்திச் சென்றார்கள்.

சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

மனிதர்கள் உயர்ந்த மரங்களில் வீடுகளை அமைத்தார்கள். இரவில் அவற்றில் தங்கினார்கள். மனிதர்கள் புதுப்புது நிலங்களைத் தேடினார்கள். அதற்காகக் காடுகளைத் தேடி அழிக்கத் தொடங்கினார்கள். விலங்குகள் செய்வதறியாது தவித்தன. விலங்குகளும் விலகிவிலகிச் சென்றன. காட்டின் நடுப்பகுதியினுள் தண்ணீர் கிடைத்தது. தமக்கென பாதுகாப்பான இடத்தைத் தேடிக் கொண்டன. சிலகாலம் அங்கேயே தங்கி வாழ்ந்தன.

மனிதர்கள் பேராசைக்காரர்கள். அவர்கள் புது நிலங்களைத் தேடினார்கள். காடுகளில் புகுந்து வந்தார்கள். இப்போது விலங்குகள் உசாரடைந்தன. இனிமேலும் எங்களால் பொறுக்க முடியாது. மனிதர்கள் இப்படியே காடுகளை அழிப்பார்கள். எங்களையும் வேட்டையாடுவார்கள். நாங்கள் அழிந்துவிடுவோம். காடுகளும் அழிந்து விடும். காடுகள் அழிந்தால் மழையே பெய்யாது. பெய்யும் மழைநீர் தங்குதடையின்றி பாய்ந்து சென்றுவிடும். மண்ணரிப்பு ஏற்படும். நிலத்தில் உள்ள பசளை வழிந்தோடிவிடும். இதனைத் தடுக்க வேண்டும். மனிதர்களுக்கு எதிராக என்ன செய்யலாம். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. எவ்வாறு தடுக்கலாம்?

மிருகங்கள் ஒன்றாய்ச் சேர்ந்தன. கூடி ஆலோசித்தன. மனிதர்களை இனியும் முன்னேறவிட்டால் ஆபத்து. அவர்களைத் தடுக்க வேண்டும். தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. எப்படித் தடுப்பது? யார் முன்னிற்பது? வினாக்கள் எழுந்தன. எறும்புக் கூட்டம் அவ்வழியே வந்தது. முன்னால் வந்த எறும்பு மிருகங்களின் கூட்டத்தைக் கண்டது. "என்ன கூட்டம்" என்று கேட்டது. "மனிதர்கள் காடுகளை அழிக்கிறார்கள். எங்களையும் அழிக்கிறார்கள். காடு அழிந்தால் நமக்குக் குடிக்க நீரும் கிடையாது. அவர்களைத் தடுக்க வேண்டும்." மிருகங்கள் கூறின. "காடுகளை அழித்தால் ஏன் நீர் இல்லாது போகும்?" எறும்பு வினவியது. "காடு இல்லாவிட்டால் மழை பெய்யாது. மரஞ்செடிகள் அழிந்து விடும். வறட்சி வாட்டும்". அடுக்கிக் கொண்டே போனது. எறும்பு ஆச்சரியத்துடன் "அப்படியா"? என்றது. எறும்பு அந்தச் செய்தியை இராணி எறும்பிடம் சொன்னது.

சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

இராணி எறும்பு அந்த இடத்துக்கு விரைந்தது. "என்ன யோசனை"? கேட்டது. "மனிதர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். யாரால் முடியும்? அதுதான் யோசிக்கிறோம்". எறும்புகள் கூறின. இராணி எறும்பு சிரித்தது. "உங்களால்

முடியும். அதோ அவர்களால் முடியும்", யானைகளைக் காட்டிக் கூறியது. யானைகள் பயந்தன. "எங்களால்? அது எப்படி? மனிதர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. அவர்கள் ஆறறிவு படைத்தவர்கள். மூளைசாலிகள் எங்களால் முடியாது." ஒரே குரலாகச் சத்தமிட்டன.

சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

"உங்களால் முடியும். உங்களிடம் பலமிருக்கிறது. உங்கள் பலத்துக்கு முன்னால் மனிதர்களின் ஆறறிவு எடுபடாது. நான் செய்து காட்டுகிறேன்", இராணி எறும்பு திரும்பியது. மிருகங்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன. "இந்தச் சின்ன எறும்புகளால் என்ன செய்ய முடியும்", ஏளனமாகக் கூறிச்சிரித்தன. அதனை இராணி எறும்பு பொருட்படுத்தவில்லை. அது சிரித்தவண்ணம் சென்றது. அதனைத் தொடர்ந்து எறும்புக் கூட்டம் சென்றது. இரவு வந்தது. இராணி எறும்பு தனது போர்வீரர்களை அழைத்தது. "யானைகள் எங்கே கூட்டமாக நிற்கும். தெரியுமா"? கேட்டது. போராளி எறும்பு இடத்தைக் கூறியது.

"யானைகள் ஒன்றாகக் கூட்டமாக நிற்கும். அப்போது இரண்டு எறும்புகள் ஒரு யானையில் தாவவேண்டும். எல்லா

யானைகளிலும் ஒரேநேரத்தில் எறும்புகள் தாவவேண்டும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்று துதிக்கையில் நுழையவேண்டும். மற்ற எறும்பு யானையின் காதினுள் நுழையவேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் மெதுவாகக் கடிக்க வேண்டும். பாருங்கள் புதினத்தை. இருள் பரவியதும் உங்கள் வேலைகளைத் தொடங்குங்கள். அதேவேளை நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீங்கள் கடிக்கத் தொடங்கியதும் யானைகள் கட்டுக்கடங்காமல் தலைதெறிக்க ஓடும். கவனமாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். நல்லது நடக்கப் பாடுபடுவோம்." இராணி எறும்பு விளக்கிக் கட்டளையிட்டது.

சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

இருள் பரவியிருந்தது. மனிதர்கள் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். எறும்புகள் தமது கடமையில் ஈடுபட்டன. யானைகளைத் தாக்கத் தொடங்கின. யானைகள் அலறியபடி ஓடத் தொடங்கின. எதிர்ப்பட்ட யாவற்றையும் மோதி மிதித்துச் சாடின. மனிதர்களது குடிசைகள் சின்னா பின்னமாகின. மனிதர்கள் ஓடித்தப்பினார்கள். அவர்களால் யானைகளை எதிர்க்க முடியவில்லை. பலநாட்கள் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்தது. காட்டைவிட்டு மனிதர்கள் ஓடினார்கள். மனிதர்கள் காட்டுப் பக்கம் போவதே இல்லை.

காடு வழமைக்குத் திரும்பியது. மிருகங்கள் எறும்புகளை வாழ்த்தின. இராணி எறும்பைப் பாராட்டின. கொம்பன் யானை வந்தது. "நீங்கள் உருவத்தில் சிறியவர்கள். ஆனால் துணிவும், செயல்திறனும் உள்ளவர்கள். உங்களுக்கு அபார மூளை. எங்களை இயக்கி எங்கள் பலத்தை நிருபித்துவிட்டீர்கள். பெரிய உடல் உள்ள எங்களை மிகச் சிறியவர்களாகிய நீங்கள் ஆட்டிப்படைத்து விட்டீர்கள். இந்தக் காட்டை மனிதரிடம் இருந்து மீட்டுத் தந்துள்ளீர்கள். நன்றி". துதிக்கையை உயர்த்திப் பிளிறியது.

சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

யாவும் சந்தோசமாக வாழ்ந்தன. காடழிப்பு தடைப்பட்டது. மழை பெய்தது. மரஞ்செடிகள் செழித்து வளர்ந்தன. காட்டில் நல்ல உணவு கிடைத்தது. மிருகங்கள் எறும்புகளுக்கு நன்றி கூறின. ஒரு அங்குசத்தால் யானையை மனிதன் அடிமையாக்குகிறான். இந்தச் சின்ன எறும்புகள் அதே யானைகளை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தின.

சிறுவர் நீதிக்கதைகள் - உங்களால் முடியும்

இந்தக் கதையின் மூலம் நாம் அறிவது யாதெனில், உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அறிவாலும், ஒற்றுமையாலும் எதனையும் சாதிக்க முடியும் என்பதாகும். மனிதர்களின் பேராசையினால் அழியவிருந்த காட்டை, மற்ற பெரிய விலங்குகளால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒரு சிறிய எறும்புக் கூட்டம் தனது தந்திரத்தாலும், திட்டமிடலாலும் செய்து முடித்தது.

 அக்காவும் தங்கையும் சிறுவர் கதைகள்

நீதி: "உருவத்தைக் கண்டு எள்ளாதே" என்பதற்கேற்ப, ஒருவருடைய பலத்தை அவரது உடலமைப்பை வைத்து எடைபோடக் கூடாது. சரியான திட்டமிடலும் (Strategy), மனத்துணிவும் இருந்தால் மிகப்பெரிய சவால்களையும் எளிதாக வெல்ல முடியும். இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது, அதனைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.

இக்கதையானது கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம என்பவரது படைப்பாகும். சுவையான கதைகள் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட கதையாகும்.

Post a Comment

Previous Post Next Post