வேற்றுமை என்றால் என்ன

வாக்கியத்தில் பெயர்ச்சொற்களின் இலக்கணத்தொழிற்பாடு வேறுபடுவது வேற்றுமை எனப்படும். இலக்கணத் தொழிற்பாடு என்பது ஒரு வாக்கியத்தில் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் உள்ள வாக்கிய ரீதியான உறவினைக் குறிக்கும். பின்வரும் வாகியங்களை அவதானியுங்கள்.

வேற்றுமை என்றால் என்ன
வேற்றுமை என்றால் என்ன

·       கமலா வந்தாள்.

·       கமலாவை அடித்தான்.

·       கமலாவால் பாடப்பட்டது.

·       கமலாவின் குடை.

·       கமலாவினது புத்தகம்.

·       கமலா கண் இருக்கிறது.

·       கமலா, வாருங்கள்.

மேலே கூறப்பட்டுள்ள வாக்கியங்களில் கமலா எனும் பெயர்ச்சொல் வினைச்சொற்களுக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளமையை அவதானியுங்கள். ஐ, ஆல், இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகளை பெயர்ச்சொற்கள் ஏற்றமையால் இம்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

வேற்றுமை எத்தனை வகைப்படும்?

தமிழில் வேற்றுமை எத்தனை என்பதில் சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இருப்பினும் தொல்காப்பியம் தமிழில் வேற்றுமை ஏழு எனவும் விளி வேற்றுமையுடன் எட்டு எனவும் கூறுகின்றது. நன்னூலும் வேற்றுமை எட்டு என கூறுகின்றது. இவை வேற்றுமையை முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை என வேற்றுமையை வரிசைப்படுத்தியுள்ளன. ஒரு வேற்றுமையில் வேற்றுமை உருபு, பொருள், சொல்லுருபு போன்ற விடயங்கள் காணப்படும். எட்டு வேற்றுமைக்கும் உருபு, பொருள், சொல்லுருபு காணப்படாது. அவை தொடர்பாக நாம் விரிவான உதாரணங்களுடன் பார்ப்போம்.

முதலாம் வேற்றுமை

உருபு ஏற்காத, திரிபு அடையாத பெயர்ச்சொல் ஒரு வாக்கியத்தில் எழுவாயாக செயற்படுவது எழுவாய் வேற்றுமை அல்லது முதலாம் வேற்றுமை எனப்படும். கமல் வந்தான், விமல் ஓடினான், கமலா சென்றாள் போன்ற வாக்கியங்களில் கமல், விமல், கமலா போன்ற சொற்கள் பெயர்ச்சொற்களாகும். இவை அவ் வாக்கியங்களின் எழுவாயாக காணப்படுகின்றன. முதலாம் வேற்றுமைக்கு உருபுகள் கிடையாது ஆனால் சொல்லுருபுகள் காணப்படுகின்றன. உதாரணமாக என்பவள், என்பவன், என்பவர், என்பது, என்பவை, ஆனவன், ஆனவள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

முதலாம் வேற்றுமைக்கு உதாரணங்கள்.

·       தமிழினி வந்தாள்.

·       ராமு சென்றான்.

·       குமார் விளையாடினான்.

·       பூ மலர்ந்தது.

முதலாம் வேற்றுமை சொல்லுருபுகள்.

·       கமலினி என்பவள் வந்தாள்.

·       சமன் என்பவன் வந்தான்.

·       ராமு என்பவர் சென்றார்.

·       குமார் ஆனவன் வருவான்.

இரண்டாம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை உருபு ஐ ஆகும். ஒரு பெயர்ச்சொல் வாக்கியத்தில் செயப்படுபொருளாக தொழிற்படுவதே இரண்டாம் வேற்றுமை என சுருக்கமாக கூறலாம். எனவேதான் இரண்டாம் வேற்றுமையை செயப்படுபொருள் வேற்றுமை என கூறுகின்றார்கள். குமார்+ ஐ = குமாரை, கமலா + ஐ = கமலாவை என்றவாறு ஐ எனும் வேற்றுமை உருபு பெயர்ச்சொற்களுடன் சேர்ந்து பெயர்ச்சொற்களின் இலக்கணத்தொழிற்பாட்டினை மாற்றுகின்றது. இரண்டாம் வேற்றுமை ஆறு பொருள்ளை உணர்த்துகின்றது. அவையாவன ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகும். இவை தொடர்பான உதாரணங்கள்.

இரண்டாம் வேற்றுமைக்கு உதாரணங்கள்.

1.    ஆக்கல்

·       குமார் வீட்டைக் கட்டினான்.

·       ராமு கட்டிடத்தைக் கட்டினான்.

·       அவர்கள் கோபுரத்தை கட்டினார்கள் 

2.    அழித்தல்

·       குமார் வீட்டை எரித்தான்.

·       ராமு கட்டிடத்தை உடைத்தான்.

·       அவர்கள் கோபுரத்தை உடைத்தனர். 

3.    அடைதல்

·       கமலா வீட்டை அடைந்தாள்.

·       ராமனி பாடசாலையை அடைந்தாள்.

·       விமல் பேருந்து நிலையத்தை அடைந்தான்.

4.    நீத்தல்

·       கமல் வீட்டை  விட்டுச் சென்றான்.

·       கமலன் பாடசாலையை விட்டுச் சென்றான்.

·       சீதா இராமனை விட்டுச் சென்றாள். 

5.    ஒத்தல்

·       ராதா மலரைப் போன்றவள்.

·       ராமு சிங்கத்தைப் போன்றவன்.

·       அவன் குதிரையை  போன்றவன். 

6.    உடைமை

·       குமார் பணத்தை வைத்திருந்தான்.

·       கமலன் புத்தகத்தை வைத்திருந்தான்.

·       அவர்கள் பேனைகளை வைத்திருந்தார்கள்.

 

மூன்றாம் வேற்றுமை

ஒரு வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல் வினை நிகழ்வுக்குரிய கருவியாக அல்லது கருத்தாப் பொருளில் செயல்படுவதை ஆல் வேற்றுமை சுட்டும். ஆல் உருபு கருவி கருத்தாப் பொருளில் மட்டும்மன்றி வேறு சில பொருள்களிலும் வருகின்றது என மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மூன்றாம் வேற்றுமையின் உருபுகளாக நாம் ஆல், ஆன், ஒடு, ஓடு போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றில் ஆல், ஓடு போன்ற உறுப்புகளே தற்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இனி அவை தொடர்பாக அவை தொடர்பான சில உதாரணங்களை நோக்குவோம்

குமார் கத்தியால் வெட்டினான். இவ்வாக்கியத்தில் கத்தியால் (கத்தி+ஆல்)  என வந்துள்ளது. இங்கு ஆல் எனும் வேற்றுமை உருபு கருவி பொருளில் வந்துள்ளது. பாரதியால் (பாரதி + ஆல்) பாடல் பாடப்பட்டது. இங்கு ஆல் எனும் வேற்றுமை உருபு கருத்தா பொருளில் வந்துள்ளது. ஆல் வேற்றுமை உருபு வேறு சில பொருள்களையும் உணர்த்துகின்றது. அவையாவன கருவி, கருத்தா, காரண​ப்பொருள, மூலப்பொருள் என்பனவாகும். இவற்றுக்கு சில உதாரணங்கள் கீழே.

கருவி

கத்தியால் வெட்டினான்.

மண்வெட்டியால் வெட்டினான்.

கம்பியால் குத்தினான்.

சாவியால் திறந்தான்.

சுத்தியலால் அடித்தான்.

கருத்தா

கம்பனால் பாடப்பட்டது.

குமாரால் வரையப்பட்டது.

கமலாவால் பாடப்பட்டது.

குடை அவனால் உடைக்கப்பட்து.

கவிதை கமலாவால் எழுதப்பட்டது.

காரணப்பொருள்

குமார் உழைப்பால் உயர்ந்தான்.

அவன் கவலையால் வாடினான்.

ராமு நோயினால் இறந்தான்.

கமலா மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தாள்.

நான் வலியால் துடித்தேன்.

மூலப்பொருள்

அரிசி மாவால் செய்யப்பட்ட இடியப்பம்.

இரும்பினால் செய்த  மேசை.

பலகையால் செய்த கட்டில்.

தங்கத்தால் செய்த வலையல்.

 

மூன்றாம் வேற்றுமையின் மற்றுமொரு வேற்றுமை உருபு ஓடு ஆகும். “நான் குமாரோடு கடைக்குச் சென்றேன்.”, “அப்பாவோடு சந்தைக்கு போனேன்.” இவ்வாக்கிங்களில் (குமார்+ஓடு) குமாரோடு எனவும், (அப்பா+ஓடு) அப்பாவோடு எனவும் வந்துள்து. இனி இந்த ஓடு என்னும் வேற்றுமை உருபு உணர்த்தும் பொருள்கள் தொடர்பாக நாம் நோக்குவோம். நான்காம் வேற்றுமை அடைமொழி பொருள், கலப்புறு பொருள், கூட்டல் அல்லது சேர்த்தல் பொருள், ஓர் இடத்தில் தொடர்ந்திருத்தல் போன்ற பொருள்களை உணர்த்துகின்றது. இனி அவை தொடர்பாக நாம் விரிவாக நோக்குவோம்.

அடைமொழி பொருள்

ஆசிரியர் அன்போடு பேசினார்.

குமார் மகிழ்ச்சியோடு பாடினான்.

அப்பா கோபத்தோடு பார்த்தார்.

பிச்சைக்காரன் பசியோடு இருந்தான். 

கலப்புறு பொருள்

பாலோடு தண்ணீர் கலந்தான்.

பூவோடு நாறும் மணம் வீசும்.

தண்ணீரோடு எண்ணையை கலந்தான்.

உணவோடு நஞ்சை கலந்தான்.

கூட்டல் அல்லது சேர்த்தல் பொருள்

பாலோடு தேனை சேர்த்தான்.

ஐந்தோடு பத்தை கூட்டினாள்.

இன்றோடு பத்து நாள் ஆகிறது.

நான்காம் வேற்றுமை

நான்காம் வேற்றுமையின் வேற்றுமை உருபு கு ஆகும். குமார் கடைக்கு சென்றான். இங்கே கடை எனும் சொல்லுடன் கு வேற்றுமை உருபு சேர்ந்து கடைக்கு எனும் சொல் வந்துள்ளது. நான்காம் வேற்றுமை கொடை, பகை, நட்பு, தகுதி, முதல் காரணம், நிமித்த காரணம், உறவு போன்ற பொருள்களை உணர்த்துகின்றது. மேலும் நான்காம் வேற்றுமை எல்லை பொருள், ஓரிடம் நோக்கி நகர்தல், அனுபவப்பேறு, கால குறிப்பு, வீதம், வினையடையாக்கம் போன்ற பொருள்களையும் உணர்த்துவதாக மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நான்காம் வேற்றுமை உருபுக்குப் பதிலாக பொருட்டு, நிமித்தம், ஆக முதலிய சொல் உருபுகள் பயன்படுத்தப்படுகின்றன. நான்காம் வேற்றுமையின் சிறப்பு பொருள் கொடை என்பதால் இதனை கொடை பொருள் வேற்றுமை என்பர்.

 

1

கொடை

-

ஏழைக்கு பணம் கொடுத்தான்.

2

பகை

-

கீரிக்கு பாம்பு பகை.

3

நட்பு

-

ராகவனுக்கு நன்பன் விமல்.

4

தகுதி

-

வீரனுக்கு அழகு நேர்மை.

5

முதற்காரணம்

-

காப்புக்கு தங்கம் உருக்கினான்.

6

நிமித்தக்காரணம்

-

காசுக்கு வேலை செய்தான்.

7

உறவு

-

ராமனுக்கு தம்பி குமார்.

 

நான்காம் வேற்றுமையின் சொல் உருபுகள்.

1

பொருட்டு

-

அமைச்சர் வருகையின் பொருட்டு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

2

நிமித்தம்

-

அண்ணா வேலையின் நிமித்தம் இந்தியா சென்றான்.

3

ஆக

-

குழந்தைக்காக பால் வாங்கினான்.


 வினைச்சொல் என்றால் என்ன

ஐந்தாம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமையின் உருபு இல், இன் என்பதாகும். குமாரில் ராமு கெட்டித்தனம் மிக்கவன். இங்கு குமார் எனும் பெயர் சொல்லுடன் இல் எனும் வேற்றுமை உருபு சேர்ந்து குமாரில் என்னும் சொல் வந்துள்ளது. ஐந்தாம் வேற்றுமை நீங்கள், எல்லை, ஒப்பு, ஏது எனும் பொருள்களையும் உணர்த்துகின்றது. மேலும் ஐந்தாம் வேற்றுமைக்குரிய உறுப்புகள் தவிர சொல்லுருபுகளும் காணப்படுகின்றன. அவையாவன இருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும், விட என்பனவாகும். இனி இவற்றுக்கு உதாரணங்களை பார்ப்போம்.

ஐந்தாம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள்.

நீங்கல் பொருள்:

மலையில் வீழ் அருவி.

எல்லை பொருள்:

இலங்கையின் வடக்கே இந்தியா.

ஏது பொருள்: 

ராமனில் பரதன் சிறந்தவன்.

ஒப்பு பொருள் :

பாட்டில் சிறந்தவன் கம்பன்.

ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகள்

இருந்து :

மரத்திலிருந்து விழுந்த பழம்.

காட்டிலும்:

குமாரைக் காட்டிலும் ராமு சிறந்தவன்.

பார்க்கிலும் :

கமலாவை பார்க்கிலும் விமலா சிறப்பாக ஆடுவாள்.

விட :

அவனை விட இவன் சிறந்தவன்.


 புணர்ச்சி என்றால் என்ன?

ஆறாம் வேற்றுமை

ஆறாம் வேற்றுமையின் உறுப்புகள் அது ஆது, ஆ என்பதாகும். ஆறாம் வேற்றுமையின் சிறப்பம்சம் என்னவென்றால் இது இரண்டு பெயர் சொற்களுக்கு இடையே உள்ள உறவை சுட்டி நிற்கும். ஆறாம் வேற்றுமையை உடைமை வேற்றுமை எனவும் அழைப்பர். உதாரணமாக ராஜாவினது புத்தகம். ராஜாவினது தந்தை. நமது தேசம். போன்ற வாக்கியங்கள் உடமை பொருளை உணர்த்துகின்றன. இதனால் இவ்வேற்றுமையை உடமை வேற்றுமை என்கின்றனர். ஆறாம் வேற்றுமை தற்கிழமை, பிறிதின் கிழமை என இரு வகைப்படும். தற்கிழமை என்பது ஒன்றிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களை கொண்டது அல்லது தன்னை விட்டு நீங்க இயலாத உரிமை உடையது தற்கிழமை எனப்படும். இனி அவை தொடர்பாக விரிவாக நோக்கும்.

தற்கிழமை

தன்னை விட்டு நீங்க இயலாத உரிமை உடையது தற்கிழமை எனப்படும். இதனை ஐந்து வகையாக வகைப்படுத்துவர். பண்புதற் கிழமை, உறுபுதற் கிழமை, ஒன்றன் கூட்டத் தற்கிழமை, திரிபின் ஆக்கத் தற்கிழமை என்பனவாகும்.

பண்புதற் கிழமை :

ராமுவின் கருமை.

அவனது இளமை.

உறுபுதற் கிழமை :

குமாரது கை.

ஆசிரியரது கால்.

மாலாவினது கண்கள்.

ஒன்றன் கூட்டத் தற்கிழமை :

பறவைகளது கூட்டம்.

மாணவர்களது தொகுதி.

பசுக்களது கூட்டம்.

திரிபின் ஆக்கத் தற்கிழமை  :

கோதுமையினது மா.

பிறிதின் கிழமை

பிறிதின் கிழமை என்பது தன்னில் வேறுபடுத்தக் கூடிய உரிமை கொண்ட பொருள்கள் ஆகும். இதனை மூன்று வகையாக பிரிக்கலாம் பொருள் பிறிதின் கிழமை, இடப் பிறிதின் கிழமை, காலப் பிறிதின் கிழமை என்பனவாகும். இனி இவை தொடர்பாக நோக்குவோம். ​

பொருள் பிறிதின் கிழமை :

குமாரது பசு.

கண்ணனது வீடு.

ராமுவினது புத்தகம்.

இடப் பிறிதின் கிழமை :

குமாரது வீடு.

எனது ஊர்.

அவனது நிறுவனம்.

காலப் பிறிதின் கிழமை :

கண்ணனது நாள்.

 

வேற்றுமை என்றால் என்ன

ஏழாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமையின் வேற்றுமை உருபு கண், இல், உள் என 28 வேற்றுமை உருபுகள் இருப்பதாக நன்னூல் குறிப்பிடுகின்றது. தற்காலத்தில் இல், இடம் ஆகிய இரண்டுமே இவ்வேற்றுமைக்குரிய இடப்பொருளை உணர்த்துகின்றன. இடப்பொருள் என்பது ஒரு பொருள் ஓர் இடத்தில் இருப்பதைச் சுட்டுவதாகும். இதனால் இவ் வேற்றுமையை இடவேற்றுமை என அழைப்பார். ஏழாம் வேற்றுமைக்கான உதாரணங்களை கீழே நோக்குவோம்.

·       அண்ணா வீட்டில் இருக்கிறார்.

·       விமானம் வானத்தில் பறக்கின்றது.

·       தமிழில் நல்ல இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன.

·       இந்தப்பணியை ஐந்து நாட்களில் முடிக்கலாம்.

·       அவன் ஒரு வாரத்தில் திரும்பி விடுவான்.

·       மாணவர்களில் சிறந்தவன் பணிவுள்ளவன்.

உள் எனும் வேற்றுமை உருபு.

·       தொழிளாலர்களுள் குமார் சிறந்தவன்.

·       மாணவர்களுள் ராமு சிறந்தவன்.

·       அவர்களுள் சீலா நன்றாக பாடுவாள்.

 

 இடம் எனும் வேற்றுமை உருபு.

·       அவனிடம் பணம் இருக்கிறது.

·       முயல் சிங்கத்திடம் சென்றது.


  ​பெயரடை என்றால் என்ன?

எட்டாம் வேற்றுமை

வேற்றுமைகளில் முதலாம் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் கிடையாது. முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என அழைப்பது போல எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என அழைப்பார்கள். பேசுவோன் படர்கை இடத்திற்குரியவரை முன்னிலைப்படுத்தி அழைத்துப் பேசுவதே விளி வேற்றுமை எனப்படும். விளி வேற்றுமைக்கு உதாரணமாக நாம் மகனே, தம்பீ, தந்தையே, தங்காய், மக்காள் என்பனவற்றை குறிப்பிடலாம்.

இந்தப் பதிவில் நாம் வேற்றுமை என்றால் என்ன, வேற்றுமையின் வகைகள், அவை தொடர்பான விரிவான விளக்கங்கள் மற்றும் உதாரணங்களை பார்த்துள்ளோம். இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பிப்பதற்கும், கற்பதற்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம். எனவே இது போன்று பயன் தரக்கூடிய பதிவுகள் எமது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன எனவே அவற்றையும் பார்க்கவும்.


Post a Comment

Previous Post Next Post