வினைச்சொல் என்றால் என்ன

வினைச்சொற்கள்

ஒரு செயலை உணர்த்தி காலம் காட்டுதல், வேற்றுமை உறுப்புகளை ஏற்காமை, போன்ற பண்புகளுடன் வரும் சொல்லினை நாம் வினைச்சொல் எனலாம். உதாரணமாக குமார் பாடசாலைக்கு சென்றான் இங்கு குமார் என்பது எழுவாயாகும். சென்றான் என்பது பயனிலை ஆகும். பாடசாலைக்கு என்பது செயப்படு பொருளாகும். எனவே இங்கே குமார் என்பது பெயர்ச்சொல் சென்றான் என்பது வினைச்சொல் இவ்வினை சொல்லான சென்றான் ஒரு செயலை குறிப்பதோடு காலத்தினையும் காட்டுகிறது. எனவே ஒரு வினைச்சொல் செயலினை உணர்த்துவதோடு காலத்தினையும் காட்டும் இனி நாம் வினைச்சொல் தொடர்பாக நோக்குவோம்.

வினைச்சொல் என்றால் என்ன
வினைச்சொல் என்றால் என்ன

முதலில் நாம் வினைச்சொற்களுக்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

நட, போ, வா வந்த, போன, நின்ற, நடந்த, போய், நின்று, வந்து, நடந்து ,நடந்தான், வந்தான், போனான், நின்றான், ஓடினான், போன்ற சொற்களை வினைச்சொற்கள் என்கின்றோம்.  இவற்றை நாம் வாக்கியங்களில் பயன்படுத்தும் போது அவன் ஓடினான், அவன் வந்தான், அவன் பாடினான், அவள் சிரித்தாள், அவன் நடந்தான் என்றவாறு பயன்படுத்துவோம்.

வினைச்சொற்களின் பண்புகள்

·       வினைச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்பதில்லை.

·       வினைச்சொற்கள் செயலை உணர்த்தும்.

·       வினைச்சொற்கள் ஏவல் பொருளில் வரும்.

·       வினைச்சொற்கள் காலம் காட்டும்.

·       வினைச்சொற்கள் வினை விகுதிகளை ஏற்கும்.

·       வினைச்சொற்கள் வினை அடைகளை பெற்று வரும்.

வினைச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்பதில்லை.

வினைச் சொற்களின் பண்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக வேற்றுமை உருபு ஏற்காமை காணப்படுகின்றது. அந்த வகையில் நட, நடந்தான், நடந்த, நடந்து, முதலிய வினைகள் வேற்றுமை உறுப்புகளை ஏற்கா. வேற்றுமை ஏற்காமை வினைச்சொற்களின் ஒரு முக்கிய பண்பு என இலக்கண நூலார் கூறுவார்கள். வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது என்று தொல்காப்பியமும் கூறுகிறது. உதாரணமாக சென்றான் என்பது ஒரு இறந்தகால வினைச்சொல்லாகும் இந்த சென்றான் என்ற வினைச்சொல்லுடன் ஐ எனும் வேற்றுமை உருபு சேர்க்க முடியாது. எந்த ஒரு வினைச்சொல்லுடனும் வேற்றுமை உருபு சேர்க்க முடியாது காரணம் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காது.

வினைச்சொற்கள் செயலை உணர்த்தும்.

நாம் முன்பு கூறியது போல வினைச்சொற்கள் ஒரு செயலினை உணர்த்தும். உதாரணமாக நடந்தான், பாடினான், ஓடினான், விளையாடினாள், சென்றார்கள், வரைந்தான், வரைந்தாள், ஓடினான், ஓடினான், ஓடுகிறான், ஓடுகின்றாள், பாடுவாள், படித்தான், படிக்கின்றான், போன்ற சொற்கள் ஒரு செயலினை உணர்த்துகின்றன, ஆனால் சில சொற்கள் செயலினை உணர்த்தாதவை போல தென்பட்டாலும் அவை உண்மையில் ஒரு செயலினை உணர்த்துகின்றன.  அவ்வாறான சொற்களுக்கு சில உதாரணங்களாக நாம் பின்வருவனவற்றை கூறலாம் மகிழ்ந்தேன், நினைத்தேன், குளிர்கிறது, வலிக்கிறது, பசிக்கிறது என்பனவும் வினை சொற்களே ஆகும். இவை முன் குறிப்பிட்டு சொற்களைப் போல் வெளிப்படையான செயலை உணர்த்துவதில்லை. பதிலாக உள, உடல் நிலைகளை உணர்த்துகின்றன. எனினும் செயலை உணர்த்துதல் பெரும்பாலான வினை சொற்களின் பண்பு எனலாம். எனவே இவையும் வினைச்சொற்களே ஆகும்.

வினைச்சொற்கள் ஏவல் பொருளில் வரும்.

வினைச்சொற்களின் பண்புகளில் இதுவும் ஒரு பண்பாகும். அந்த வகையில் வா, நில், இரு, வாருங்கள், நில்லுங்கள், இருங்கள், நட முதலிய வினைகள் நமக்கு முன் நிற்போரை ஒரு செயலை செய்யுமாறு பணிக்கின்றன. இதனை ஏவள் என்போம். பெரும்பாலான வினைகள் ஏவல் பொருளில் வருவன. எனினும் குளிர், பசி போன்ற வினைகள் ஏவல் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.

வினைச்சொற்கள் காலம் காட்டும்.

காலம் காட்டுதல் வினைச்சொற்களின் ஒரு முக்கிய பண்பாகும். நடந்தான், பாடுகிறான், ஓடுகிறான், விளையாடுவான், வரைவான், நடிக்கின்றான், சென்றான், நடித்தான் போன்றன வினைச் சொற்கள் ஆகும். இவை நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் போன்ற மூன்று காலங்களையும் உணர்த்துகின்றன. எனவே வினைச்சொற்கள் காலத்தினை உணர்த்தும். மேலும்  பின்வரும் உதாரணத்தை நோக்குவோம். குமார் கடைக்கு சென்றான். இங்கு சென்றான் என்பது வினைச்சொல், இது இறந்த காலத்தினை உணர்த்துகின்றது. குமார் நாளை கடைக்கு செல்வான். இங்கு செல்வான் என்பது எதிர்காலமாகும். விமலா சித்திரம் வரைகின்றாள். இங்கு வரைகின்றாள் என்பது வினைச்சொல், இது நிகழ் காலம் ஆகும். எனவே வினைச்சொற்கள் காலத்தினை உணர்த்துவனவாகும்.

வினைச்சொற்கள் வினை விகுதிகளை ஏற்கும்.

வந்தேன், வந்தோம், வந்தாய், வந்தாள் முதலிய வினைகள் ஏன், ஆள் ஆகிய திணை, பால், என், இட விதிகளை பெற்று வந்துள்ளன. வந்த, வருகின்ற, வரும் ஆகிய பெயரெச்சங்கள் அ, உ என்ற பெயரெச்ச விகுதிகள் பெற்று வந்துள்ளன. வந்து, ஓடி ஆகிய வினை எச்சங்கள் பெற்று வந்துள்ளன. இவ்வாறு வினை விகுதிகளை பெற்று வரும் சொற்களை எல்லாம் வினைச்சொற்கள் எனலாம்.

வினைச்சொற்கள் வினை அடைகளை பெற்று வரும்.

வேகமாக ஓடினான், அழகாக வரைந்தான், உயரமாக பறந்தது, விரைவாக சென்றான். போன்ற வினையடைகளை ஏற்று வரும் சொற்களும் வினைச்சொற்கள் ஆகும். அதாவது வேகமாக ஓடினான் என்பதில் ஓடினான் என்பது வினைச்சொல் ஆகும். அந்த வினைச்சொல்லை மேலும் சிறப்பிப்பதற்காக வேகமாக என்னும் வினையடை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே வேகமாக ஓடினான் என்பது வினைச்சொல்லாகும். இங்கு நாம் குறிப்பிட்டது போல் வினைச்சொற்கள் வினை அடைகளை ஏற்று வரும்.

வினைச்சொற்கள் தொடர்பாக இதுவரை நாம் நோக்கியதில் வேற்றுமை உறுப்புகளை ஏற்காமை, ஒரு செயலை உணர்த்துதல், ஏவல் பொருளில் வருதல், வினை விகுதிகளை பெற்று வருதல், காலம் காட்டுதல், வினை அடைகளை ஏற்று வருதல் ஆகிய பண்புகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ கொண்டுள்ள ஒரு சொல்லை  நாம் வினைச்சொல் எனலாம்.

வினைச்சொல்லின் அமைப்பு

ஒரு வினைச்சொல் வினையடி+ இடைநிலை+ விகுதி ஆகிய மூன்று பகுதிகளை கொண்டிருக்கும். இவற்றில் வினையடி என்பது கட்டாயமானது இடை நிலையும் விகுதியும் இருக்கலாம், அல்லது இல்லாதிருக்கலாம், அல்லது அவற்றில் ஏதாவது ஒன்று இருக்கலாம். பாடு என்ற வினைச்சொல்லில் வினையடி மட்டுமே உள்ளது. பாடுங்கள் என்ற வினைச்சொல்லில் பாடு என்பது வினையடி ஆகும். ங்கள் என்பது ஏவல் பன்மை விகுதியாகும். பாடுகின்றான் என்ற வினைச்சொல்லில் பாடு என்பது வினையடி கின்ற என்பது இடைநிலை ஆன் என்பது விகுதி ஆகும். இவ்வாறு ஒரு வினைச்சொல்லில் மூன்று பகுதிகளும் வருகின்றன.

வினைச்சொல்

வினையடி

இடைநிலை

விகுதி

ஓடு

ஓடு

-

-

பாடுங்கள்

பாடு

-

ங்கள்

ஓடினான்

ஓடு

இன்

ஆன்

பாடுகின்ற

பாடு

கின்று

ஓடாத

ஓடு

ஆத்

 

வினைச்சொற்களின் வகைகள்.

வினைச்சொற்களை அவற்றின் அமைப்பு பொருள் வாக்கியத்தில் அவற்றின் தொழிற்பாடு முதலிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றினை பல வகையாக பாகுபடுத்தலாம். தனி வினை, கூட்டுவினை, தெரிநிலை வினை, குறிப்பு வினை ஆகியன வினைச் சொற்களின் வகைகளாகும் இவை தொடர்பாக வினைச் சொற்களின் வகைகள் எவை? என்ற பதிவினை பார்வையிடவும்.

இந்தப் பதிவில் நாம் வினைச்சொற்கள் என்றால் என்ன?, வினைச்சொற்களுக்கு உதாரணங்கள், வினைச்சொற்களின் பண்புகள், வினைச்சொற்களின் வகைகள் போன்றன தொடர்பாக பார்த்தோம். ஒரு செயலை உணர்த்துதல், காலம் காட்டுதல், வேற்றுமை உறுப்புகளை ஏற்காமை ஆகிய பண்புகளுடன் வரும் சொல் வினைச்சொல் ஆகும்.

புணர்ச்சி என்றால் என்ன?

திணை, பால், எண், இடம், காலம் வேறுபாடு

மாற்றுப்பெயர் என்றால் என்ன?

முன்னொட்டு பின்னொட்டு

செய்வினை செயப்பாட்டு வினை

பெயரடை என்றால் என்ன?

ஆக்கப்பெயர் என்றால் என்ன?

பெயர்ச்சொற்கள் என்றால் என்ன?



 

 

 

Post a Comment

Previous Post Next Post