திணை, பால், எண், இடம், காலம் வேறுபாடு


தமிழ் மொழியில் நாம் சொற்களை வேறுபடுத்துவதற்காகவும்; வாக்கியம் அமைப்பதற்காகவும் திணை, பால், எண், இடம், காலம் என்பவற்றைப் பயன்படுத்துவோம். அந்த வகையில் இந்தப்பதிவானது இவற்றுக்கு விளக்கம் அளிப்பதாக அமையும். பின்வரும் வாக்கியத்தை நோக்குவோம். “குமார் பாடசாலைக்கு சென்றான்.” இங்கு சென்றான் என்ற வினைச்சொல்லானது திணை, பால், எண், இடம், காலம் என்பவற்றை வௌிப்படுத்துகின்றது. அதாவது சென்றான் என்ற சொல்லில் வௌிப்படும் திணை- உயர்திணை, பால் -ஆண்பால், எண் -ஒருமை, இடம்- படர்கை, காலம் - இறந்த காலம் ஆகும். எனவே ஒரு வாக்கியத்தில் வரும் வினைச்சொல்லானது திணை, பால், எண், இடம், காலம் என்பவற்றை வௌிப்படுத்தும். எனவே இனி அவைத் தொடர்பாக நாம் தௌிவாக அறிந்துக்கொள்வோம்.



திணை, பால், எண், இடம், காலம் வேறுபாடு
 திணை, பால், எண், இடம், காலம் வேறுபாடு


திணை என்றால் என்ன?

திணை என்பது ஒழுக்கம் என பொருள்படும். இது இனத்தை குறிப்பதாகவும் கூறப்படுகின்றது. தமிழில் பெயர்ச்சொற்கள் உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மனிதர்கள் தேவர்கள் போன்றோரை உயர்திணை என்றும், மனிதர்கள் தவிர்ந்த ஏனைய உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் அஃறிணை என்றும் அழைப்பார்கள்.  

 

திணை என்றால் என்ன?


உதாரணங்கள்

உயர்திணை - அவன், அவர்கள், மாலா, கமல், கண்ணன், மாணவர்கள், ஆசிரியர், அதிபர், வைத்தியர், சாரதி, மாணவி, மாணவன், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி

அஃறிணை - மான், புலி, மாடு, ஆடு, ஆடுகள், மாடுகள், பறவைகள், மேசை, மேசைகள், கணினி, அது, இது, அவை, கதவு, சிங்கம், நாய், பூனை


பால்  என்றால் என்ன?

தமிழில் பால் என்பது பிரிவு என பொருள்படும். அந்த வகையில் தமிழில் பால் பாகுபாடானது ஆண்பால், பெண்பால் அடிப்படையிலும் ஒருமை பன்மை என்ற அடிப்படையிலும் அமைந்துள்ளது. அவற்றின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளது.

1.ஆண்பால்

2.பெண்பால்

3.பலர்பால்

4.ஒன்றன்பால்

5.பலவின்பால்


1.ஆண்பால்

உயர்திணை ஒருமை பெயர்கள் ஆண்பால், பெண்பால் என அழைக்கப்படும். ஆண்பால் பெயர்கள் விகுதி பெற்றும் பெறாமலும் வரும். அவ்வாறு வரும் ஆண்பால் பெயர்களுக்கான உதாரணங்கள் சில.

விகுதி பெற்று வரும் ஆண்பால் பெயர்கள்

அவன்

மாணவன்

தலைவன்

அரசன்

பேரன்

ஒருவன்

ஆசிரியன்

சீமான்

பெருமான்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்பால் பெயர்ச் சொற்களானது அன் மற்றும் ஆன் போன்ற விகுதிகள் பெற்று வந்துள்ளன. 


பால் விகுதி பெறாமல் வரும் ஆண்பால் பெயர்கள்

சில பெயர்ச்சொற்கள் பால் விகுதி பெறாமல் ஆண்பால் பெயர்களை உணர்த்துகின்றன. அப்பா, மாமா, தாத்தா, ஆண், தம்பி போன்ற ஆண்பால் பெயர்களை உதாரணமாக குறிப்பிடலாம்.


பால்  என்றால் என்ன?


2.பெண்பால்

உயர்திணை ஒருமை பெயர்ச்சொற்கள் ஆண்பால், பெண்பால் என்று அழைக்கப்படும். இங்கு பெண்பால் சொல்லானது விகுதி பெற்றும் பெறாமலும் வரும். அவள், மகள், நல்லவள் போன்ற பெண்பாற்ச் சொற்கள் அள் எனும் விகுதியையும், அரசி, தலைவி, மாணவி என்பன எனும் விகுதியையும், சீமாட்டி, பெருமாட்டி என்பன ஆட்டி எனும் விகுதியையும், நடிகை, தமக்கை, ஆசிரியை என்பன எனும் விகுதியையும் பெற்று வருகின்றன.எனினும் விகுதியினை பெறாத பெண்பால் சொற்களும் காணப்படுகின்றன. உதாரணமாக அம்மா, பெண், தங்கை போன்ற சில சொற்களை கூறலாம்.


3.பலர்பால்

உயர்திணை பன்மை பெயர்ச்சொற்கள் பலர்பால் பெயர்கள் எனப்படுகின்றன. அந்த வகையில் உயர்திணை ஒருமை பெயர்களுடன் மார், கள், அர்கள், ஆர்கள் முதலிய பன்மை உருபுகள் சேர்த்து பலர்பால் பெயர்கள் ஆக்கப்படுகின்றன. உதாரணமாக ஆண்கள், பெண்கள், தொழிலாளிகள், கூலியாட்கள் போன்ற பெயர்ச்சொற்களில் கள் எனும் விகுதி சேரந்துள்ளது. அவர்கள், சிறுவர்கள், நல்லவர்கள், மாணவர்கள், மனிதர்கள் போன்ற சொற்களில் அர்கள் எனும் விகுதி சேர்ந்துள்ளது. பெரியார்கள், நல்லார்கள், பெரியோர்கள் போன்ற சொற்களில் ஆர்கள் எனும் விகுதி சேர்ந்துள்ளது.


4.ஒன்றன்பால்

அஃறிணை ஒருமை பெயர்களை ஒன்றன்பால் பெயர்கள் என அழைப்பார்கள். அந்த வகையில் இங்கு ஒருமைப் பெயர்களுக்கு தனியான விகுதிகள் இல்லை. நாய், ஆடு, மாடு, மேசை, கதிரை, அது, இது போன்றவற்றை ஒன்றன்பால் எனலாம். 


5.பலவின்பால்

அஃறிணை பன்மை பெயர்ச்சொற்கள் பலவின்பால் எனப்படும். அஃறிணை ஒருமைப் பெயரில் கள் எனும் பன்மை விகுதி சேர்த்து பலவின்பால் ஆக்கப்படுகின்றது. ஆடுகள், மாடுகள், பூக்கள், நாய்கள், பூனைகள், மீன்கள், பருக்கள் போன்ற பல சொற்களை பலவின் பால் பெயர்ச்சொற்களுக்கு உதாரணங்களாக கூறலாம்.



 எண்  என்றால் என்ன?

தமிழிழ் பெயர்ச் சொற்களை ஒருமை பன்மை என்ற அடிப்படையில் வகைப்படுத்துதல் எண் எனப்படும். அந்த வகையில் உயர்திணை மற்றும் அஃறிணை பெயர்ச்சொற்களை ஒருமை பன்மை என வகைப்படுத்தலாம். எண் என்பது ஒருமை, பன்மை ஆகும். மாடு- மாடுகள், மாணவன்- மாணவர்கள், ஆசிரியர்- ஆசிரியர்கள், பூ- பூக்கள், மேசை- மேசைகள் என்பன ஒருமை பன்மை ஆகும்.


இடம்  என்றால் என்ன?

பேசுவோன், கேட்போன், பேசப்படும் பொருள் என்பவற்றின் அடிப்படையில் பெயர், வினைச் சொற்களில் காணப்படும் வேறுபாடு இடம் எனப்படுகின்றது. இதனை மூவிடம் எனவும் அழைப்பார்கள். இடம் மூன்று வகைப்படும் தன்மை, முன்னிலை, படர்கை. பேசுவோனை தன்மை எனவும், கேட்போனை முன்னிலை எனவும் , பேசப்படும் பொருளினை படர்கை எனவும் கூறுவார்கள். இவற்றுக்கு உதாரணங்களாக நாம் பின்வருவனவற்றைக் கூறலாம்.


இடம்  என்றால் என்ன?




இடம்

பால்

நான் போனேன்

தன்மை

ஆண்பால் 

நாங்கள் சென்றோம்

தன்மை

பலர்பால்

நீ சென்றாய்

முன்னிலை

ஆண்பால்/ பெண்பால்

நீங்கள் சென்றீர்கள்

முன்னிலை

பலர்பால்

அவன் வந்தான்

படர்கை

ஆண்பால்

அவள் வந்தாள்

படர்கை

பெண்பால்

அவர்கள் வந்தார்கள்

படர்கை

பலர்பால்

அது போனது

படர்கை

ஒன்றன்பால்

அவை போயின

படர்கை

பலவின்பால்



காலம்  என்றால் என்ன?

தமிழில் காலத்தினை மூன்றாக வகைப்படுத்துவார்கள் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பனவாகும். நடந்து முடிந்த செயலை இறந்த காலம் எனவும், நடக்கின்ற செயலை நிகழ்காலம் எனவும், நடக்க போகும் ஒரு செயலை எதிர்காலம் எனவும் கூறுவார்கள். மூன்று காலங்கள் தொடர்பாகவும் தௌிவாக பார்ப்போம்.


1.இறந்தகாலம்

நடந்து முடிந்த ஒரு செயலை உணர்துவது இறந்த காலமாகும். குமார் கடைக்குச் சென்றான். இங்கு சென்றான் என்ற வினைச்சொல்லானது நடந்து முடிந்த செயலைக் குறிக்கின்றது. எனவே இது இறந்த காலமாகும். இறந்த காலத்திற்கு சில உதாரணங்கள்.


  • நான் கடைக்கு சென்றேன்.
  • மாமா சந்தைக்கு சென்றார்.
  • குமார் கார் வாங்கினான்.
  • கமலா நேற்று இந்தியாவிற்று சென்றாள்.
  • அவன் வேகமாக ஓடினான்.

இவ்வாறு இறந்த காலத்திற்கு பல உதாரணங்களை கூறலாம்.


2.நிகழ்காலம்

நடந்துக் கொண்டிருக்கும் செயல்களை உணர்த்துவது நிகழ்காலமாகும். அவன் சித்திரம் வரைகின்றான். இங்கு வரைகின்றான் என்ற வினைச்சொல்லானது ஒரு செயல் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருப்பதை வௌிப்படுத்துகின்றது. எனவே இவ்வாக்கியத்தில் வரைகின்றான் என்பது நிகழ்காலமாகும். நிகழ்காலத்திற்கு சில உதாரணங்கள் கீழே;


  • நான் கடைக்கு செல்கின்றேன்.
  • அவன் பாடசாலைக்கு செல்கின்றான்.
  • தம்பி பாடம் படிக்கின்றான்.
  • கமலா பாடல் பாடுகின்றாள்.
  • அவன் சித்திரம் வரைகின்றான்.
  • அம்மா உணவு சமைக்கின்றாள்.
  • தம்பி விளையாடுகின்றான்.

காலம்  என்றால் என்ன?


3.எதிர்காலம்

நடக்கப்போகும் செயல்களை உணர்த்துவது எதிர்காலமாகும். குமார் நாளை பாடசாலைக்கு செல்வான். இங்கு செல்வான் எனும் செயல் இன்னும் நடைபெறவில்லை. எனவே இனிமேல் நடைபெற போகின்றது. அதனால் இதனை எதிர்காலம் என்பர்.


  • தம்பி பாடசாலைக்கு செல்வான்.
  • நான் சித்திரம் வரைவேன்.
  • அப்பா சந்தைக்கு செல்வார்.
  • நாங்கள் பாடசாலைக்கு போவோம்.
  • கமலா பாடல் பாடுவாள்.
  • அம்மா சோறு சமைப்பாள்.
  • தம்பி நாளை விளையாடுவான்.
  • நாளை மழை பெய்யும்.


இந்தப்பதிவில் நாம் திணை, பால், எண், இடம், காலம் முதலியன தொடர்பாக ஒரு தௌிவான விளக்கத்தினை பெற்றிருப்போம். தமிழ் இலக்கணம் எனும் தெரிவுக்கு சென்று மேலும் தமிழ் இலக்கணப் பதிவுகளை வாசிக்கவும். 


தமிழ் இலக்கணம் தொடர்பான ஏனைய பதிவுகள்

  1. பெயரடை என்றால் என்ன?
  2. கூட்டுப்பெயர் என்றால் என்ன?
  3. ஆக்கப்பெயர் என்றால் என்ன?
  4. மாற்றுப்பெயர் என்றால் என்ன?
  5. பெயர்ச்சொற்கள் என்றால் என்ன?


Post a Comment

Previous Post Next Post